Last Updated : 15 Jul, 2018 02:19 AM

 

Published : 15 Jul 2018 02:19 AM
Last Updated : 15 Jul 2018 02:19 AM

ஜி.நாகராஜன்: புது வெளிச்சம்

ஜி

.

நாகராஜனின் மரணத்துக்குப் பின்னும் ஏதோ ஒருவகையில் அவருடனான உறவு தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவருடைய மரணத்துக்குப் பின்னர், வெவ்வேறு காலகட்டங்களில் அவருடன் நெருக்கமான உறவுகொண்டிருந்த நண்பர்கள், தோழர்கள், உறவினர்களைச் சந்தித்து உரையாடி அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தது (மரணப் படுக்கையில் அவர் கடைசியாக உச்சரித்த, ‘வாழ்வின் முட்கள் மீது விழுந்தேன்! ரத்தம் வடிக்கிறேன்...’ என்ற ஷெல்லியின் கவிதை வரிகள் என்னைப் பின்தொடர்ந்து இயக்கியதன் விளைவு); ‘ஜி.நாகராஜன் படைப்புகள்’ என்ற அவருடைய முழுமையான நூலுக்குத் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியது; பெங்குவின் வெளியிட்ட ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழாவில் அவரை நினைவுகூர்ந்து உரையாற்றியது; வெவ்வேறு தருணங்களில் அவரைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியுமாக நான்கு கட்டுரைகள் எழுதியது; சாகித்திய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஜி.நாகராஜன் பற்றி நூல் எழுதியது என அவருடன் ஒரு பிணைப்பு நீடித்து நிலைத்துக்கொண்டிருக்கிறது.

அவருடைய கடைசிக் கால நாடோடி வாழ்க்கை அவருடைய தேர்வா, உள்ளார்ந்த விருப்பமா, அவருடைய வேட்கைகளின் விளைவா அல்லது அது அப்படியாக அமைந்ததா என்று எதையும் திட்டமாகச் சொல்வதற்கில்லை. ஆனால், வாழ்வின் மாறுபட்ட சாத்தியங்களிலும் அதன் எல்லைகளிலும் வாழ்ந்து தீர்த்த ஓர் அபூர்வ ஆளுமை என்பதில் சந்தேகமில்லை. நேரடிப் பழக்கத்திலிருந்தும் சேகரித்த தகவல்களிலிருந்தும் அவர் வாழ்க்கை பற்றிய ஒரு சிறு கோட்டுச் சித்திரம்:

மிகச் சிறந்த மாணவன். நல்ல படிப்பாளி. கற்பித்தலில் தேர்ந்த ஆசிரியர். தீரமிக்க கட்சிப் பணியாளர். கொள்கைப் பிடிப்பாளர். திடகாத்திரமான கட்டுடல் கொண்டவர். அதைப் பேணிப் பராமரிப்பவர். எழுத்தாளர். தனித்துவப் படைப்பாளி. சிந்தனையாளர். ஆங்கில மொழி வித்தகர். மிகச் சிறந்த ஆசிரியராக செல்வாக்கோடும் கம்பீரமாகவும் வாழ்ந்தவர். அற்புதமான உரையாடல்காரர். இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவர். போதையில் களித்திருப்பவர். வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவர். சாதி, வர்க்க அடையாளங்களைத் தன்னிலிருந்து அகற்றியவர். வாழ்வின் சரிவுப் பாதையில் தயக்கமின்றிக் கால்பதித்தவர். அந்தப் பாதையில் சல்லென வழுக்கிச்சென்றவர். வீடற்று வீதிகளில் படுத்துறங்கியவர். போதைகளின் தேவைக்காக இறைஞ்சியவர். நாடோடியாக அலைந்தவர். வாழ்வின் இறுதியில் மோசமான நோயாளியாக மதுரை அரசு பொது மருத்துவமனையில் அநாதையாக மடிந்தவர்.

ஜி.நாகராஜன் அவர் வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாத எழுத்தாளர். அவருடைய படைப்புகள் உரிய கவனம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இன்று, அவை படைக்கப்பட்டு 40, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் ஒப்பற்ற ஆளுமையாக அவர் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய படைப்புலகமும் படைப்பாக்க நெறிகளும் நவீனத் தமிழ் இலக்கியம் அதுவரை அறிந்திராதவையாகவும் தனித்துவமிக்கவையாகவும் அடையாளம் காணப்படுகின்றன. கொண்டாடப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ஒரு புதிய இலக்கியப் போக்குக்கான ஒளியாகவும் அவருடைய எழுத்துகள் அவதானிக்கப்படுகின்றன. மேலும், நம்முடைய பெறுமதியான படைப்பாளியாக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய மூன்று புத்தகங்கள் (‘குறத்தி முடுக்கு’ – குறுநாவல்; ‘கண்டதும் கேட்டதும்’ – சிறுகதைத் தொகுப்பு; ‘நாளை மற்றுமொரு நாளே’ – நாவல்) வெளிவந்தன. ‘பித்தன் பட்டறை’ என்ற பதிப்பகம் தொடங்கி அவருடைய வளமான காலத்தில் அவரே அவற்றைக் கொண்டுவந்தார். அவை முறையாக விநியோகிக்கப்படாமலும் சரியாக அறியப்படாமலும் போயின. இன்று அவருடைய எல்லா எழுத்துகளும் தொகுப்பாகவும் தனித்தனிப் புத்தகங்களாகவும் தொடர்ந்து வெளியாகின்றன. விளிம்புநிலை மனிதர்களிடம் இயல்புணர்வுகள் சுபாவமாக மொக்கவிழ்வதைக் கண்டு, அதன் மலர்ச்சியைப் படைப்புகளாக்கிய ஜி.நாகராஜனின் தனித்துவமும் முக்கியத்துவமும் இன்று வெகுவாக உணரப்பட்டுவருகிறது. மேலும், அவர் வாழ்ந்த வாழ்க்கை முறை மீதான ஒரு கவர்ச்சி, நவீனத் தமிழ்ச் சிற்றிதழ் இயக்க இளம் எழுத்தாளர்களிடம் 1980-களின் பிற்பாதியிலும் 1990-களின் தொடக்கத்திலும் நிலவியது. சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு கலகக்காரனின் வாழ்வாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாகவும் அவர் மீதும் அவருடைய எழுத்துகள் மீதும் கவனக்குவிப்பு ஏற்பட்டது.

ஜி.நாகராஜனின் மரணத்துக்குப் பிறகு அவரை மையப் பாத்திரமாகக் கொண்ட ஐந்து சிறுகதைகள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. இது, உலக இலக்கியப் பரப்பில் நிகழ்ந்திராத ஒரு அபூர்வம். ஒரு படைப்பாளி, தன் மரணத்துக்குப் பின்னும் தன் சமகாலத்திய மற்றும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்பாக்கங்களில் ஒரு மையப் பாத்திரமாக அமைவது ஓர் அபூர்வக் கலை நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. அசோகமித்திரனின் ‘விரல்’ (1984); திலீப்குமாரின் ‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ (1985); பிரபஞ்சனின் ‘ஒருநாள்’ (1993); சுந்தர ராமசாமியின் ‘நண்பர் ஜி.எம்.’ (2004); மற்றும் என்னுடைய ‘விலகிய கால்கள்’ (2015) ஆகிய கதைகள் ஜி.நாகராஜனை மையமாகக் கொண்டவை.

இந்தக் கதைகளின் சம்பவங்கள் அவருடைய வாழ்நாளில் நிகழ்ந்தவை என்றாலும் இந்தக் கதைகள் ஐந்துமே அவருடைய மரணத்துக்குப் பின்னர்தான் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும், அவருடன் இருக்க நேரிட்ட ஒருநாளின் சம்பவங்களையே இக்கதைகள் களமாகக் கொண்டிருக்கின்றன. அவை அவருடைய சில விசித்திரங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒரு நிகழ்வானது, அவருடைய இருப்பில், அதை அவர் எதிர்கொள்ளும் முறையில், அப்போது வெளிப்படும் அவருடைய நடத்தையில் அசாதாரணமாகிவிடுகிறது. அந்த நிகழ்வின்போது அவருடன் இருக்க நேர்ந்த படைப்பாளியிடம் அவரை உலுக்கி எடுக்கும் விசித்திர அனுபவமாக அது உள்ளுறைந்துவிடுகிறது. பின்னொரு சமயத்தில், ஒரு படைப்பாக்க மனநிலையில் அது மேலெழுந்து படைப்பாகப் புனைவு பெறுகிறது. மரணத்துக்குப் பின்னும் ஒரு அசுர நிழலாகக் காலத்தில் அவர் தொடர்ந்துகொண்டிருப்பதையே இக்கதைகள் காட்டுகின்றன.

ஜி.நாகராஜனின் எழுத்தும் வாழ்வும் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் அபூர்வ நிகழ்வு. வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் ஒப்பனைகளையும் துடைத்தெறிந்து, வாழ்வை நிர்வாணமாக முன்னிறுத்தி, அதன் இயல்பான அழகுகளிலிருந்து புதிய தார்மீகங்களையும் அறங்களையும் படைப்பித்த கலை மனம் அவருடையது. பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகுகளையும் கண்டடைந்தவர் ஜி.நாகராஜன். அவருடைய பிரத்தியேகமான படைப்புலகின் ஒளி, வாழ்வு குறித்தும் மனிதர்கள் குறித்துமான நம் பார்வைக்குப் புது வெளிச்சம் தந்திருக்கிறது. காலத்தில் என்றென்றும் பிரகாசிக்கும் ஒரு படைப்பு மேதையாக, ஓர் அழியாச் சுடராக அவர் நிலைபெற்றிருக்கிறார்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x