Published : 15 Jul 2018 02:19 AM
Last Updated : 15 Jul 2018 02:19 AM

காஞ்சித்தலைவி மத்தவிலாசத்தின் மறுவருகை

செ

ன்னைக்கு முதன்முதலில் வந்தபோது 1980-களில் நான் பார்த்து ரசித்த நாடகங்களில், பிரளயன் இயக்கத்தில் சென்னை கலைக் குழுவினர் நடித்த ‘மாநகரம்’ மறக்க முடியாதது. தெருநாடக பாணியில், அரங்க அமைப்பு என்று எதுவுமில்லாமல், சில கைத்தடிகளைக் கையாளும் விதத்தில் காட்சிகளை மாற்றியமைத்து, பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நாடகம் அது. இன்றும்கூட பெருங்கவலையுடன் தனது மகளை ‘மல்லிகா, மல்லிகா’ என்று தேடும் அந்தத் தாயின் அவலக்குரல் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. புராணங்களிலும் வரலாற்றிலுமிருந்து கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, 1990களில் அவர் அரங்கேற்றிய ‘உபகதை’யில் வரும் ஏகலைவனும், ரேணுகாம்பாளும், அனார்கலியும் இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த சாதியத்தின் தாக்கத்தை நுட்பமாக விளக்கியது, இன்று சாதியத்துடன் மதமும் ஒரு பிரதான பிரச்சினையாகும்போது பிரளயனுக்குத் துணைநிற்பது 7-ம் நூற்றாண்டில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்.

குடைவரைக் கோயில்களைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பல்வேறு கலைகளில் வல்லவன். எழுத்திலும் தன் முத்திரையைப் பதித்தவன். 7-ம் நூற்றாண்டில் மகேந்திரவர்மனால் இயற்றப்பட்ட வடமொழி நாடகமான ‘மத்தவிலாசம்’, இன்றைய விறுவிறுப்பான, நல்லதொரு திரைக்கதைக்கு ஈடான படைப்பு.

அன்றைய தமிழக, இந்தியச் சமூகங்களில் நிலவிய சிக்கல்களை, பதட்டங்களை, குறிப்பாக மதச்சண்டைகளை விசித்திர சித்தனுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் நம் கண் முன்னே நிறுத்துகிறது. களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்குவந்த பின்னர், 7-ம் நூற்றாண்டில் மதச்சண்டைகள் தமிழகத்தில் தலைதூக்கின. சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிய மகேந்திரவர்மனின் நாடகத்தின் மையக்கரு, பல்லவனின் தலைநகரான காஞ்சியில், சிவனை வழிபடும் கபாலிகனுக்கும் புத்தனை பின்பற்றும் ஒரு புத்த பிக்குவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான்.

மது, மாமிசம், மச்சம், மைதுனம் (கலவி), முத்ரா (வறுத்த பயறுவகைகள், தானியங்கள் உண்பது) போன்றவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதன் வாயிலாகவும் முழுநிலை (முக்தி) அடையலாம் என்று நம்புவதுதான் ‘காபாலிகம்’ எனும் புராதன வழிபாட்டு முறை. இது சைவத்தின் ஒரு பிரிவு. கபாலிகர்கள், மண்டை ஓட்டின் மேல் பகுதியான கபாலத்தை வைத்து பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது நியதி. தன் துணையுடன் குடி போதையில் இருக்கும்போது நாய் ஒன்று கபாலத்தைக் கவ்விச்செல்ல, அது தெரியாமல், எதிரில் தென்பட்ட புத்த பிக்குதான் காணாமல்போன கபாலத்தைத் திருடியிருக்க வேண்டும் என்று கபாலி சந்தேகப்பட, இருவருக்குமிடையே நடக்கும் வாக்குவாதம், தொடரும் சம்பவங்கள்தான் நாடகம்.

ஒருவருக்கு ஒருவர் மற்றவர் மதத்தை, பிற மதங்களை, வழிபாட்டு முறைகளை நையாண்டி செய்ய, 7-ம் நூற்றாண்டில், தமிழகத்தில் அரங்கேறிய கொடூரமான மதக் கலவரங்களுக்கு முன்னரே கட்டியங்கூறுவதாக அமைகிறது மகேந்திரவர்மனின் ‘மத்தவிலாசம்’. அந்தக் கறை படிந்த வரலாறு பலரும் அறியாதது. நாடகம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 1350 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று கிட்டத்தட்ட அதே காட்சிகள் மீண்டும் இந்தியாவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இவ்வேளையில் மகேந்திரவர்மனின் மத்தவிலாசத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம். சமகால இந்திய அரசியலுடன் வெகுவாக கருத்துரீதியாக ஒத்துப்போவது மட்டுமன்றி, அருமையான நாடகபாணியில் 1350 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட மத்தவிலாசம், பிரளயன் போன்ற கலைஞனுக்குப் பெரிய கொடை என்றே கூறலாம். வடமொழியில் இயற்றப்பட்ட ‘மத்த விலாச பிரஹசனம்' நாடகத்தைத் தமிழாக்கம்செய்து மறுவாசிப்புக்கு உட்படுத்தி பிரளயன் இயக்கத்தில் 'காஞ்சித்தலைவி (அல்லது) நவீன மத்த விலாச பிரஹசனம்' எனும் பெயரில் சென்னையிலும், திருப்பத்தூரிலும் மேடையேற்றினார். சமகால அரசியலை வலிந்து திணிக்காமல், நெருடலின்றி மூல நாடகத்தினை சிதைக்காமல் அரங்கேற்றியிருப்பது பாராட்டத்தக்கது.

“மதுரமிக்க மது குடித்து முக்தி தேடுவம்/ கள் குடித்து கறி புசித்து முக்தி நாடுவம்/ காதல் செய்து கூடல் செய்து சிவனைத்தேடுவம்-தேடி/ முக்தி வழி காட்டும் சிவனை ஆடிப்பாடுவம்” எனக் காபாலிகனான சத்தியசோமனும், அவன் காதலி தேவசோமையும், கள் குடித்தபடி ஆடிப்பாடி வருவதோடு நாடகம் தொடங்குகிறது. இவ்விருவரோடு புத்த பிக்கு நாகசேனன், பாப்ருகல்பன் எனும் பாசுபத சைவன், ஒரு மனநலங்குன்றியவன் மற்றும் ஒரு நாய் என ஆறு முக்கிய கதாபத்திரங்கள். எதிலும் காரண காரியங்களைத் தேடுகிற சமணர்கள், நாத்திகர்கள், பௌத்தர்கள் என அனைவரும் கபாலிகனின் வசைபாடலுக்கு, கிண்டலுக்கு ஆளாகிறார்கள்.

காலனிய ஆட்சியின்போது கட்டமைக்கப்பட்ட மத அமைப்பினை சைவம், கருப்பண்ணம், சொரிமுத்தம், மாரியம் என்று பகடியுடன் கடந்துசெல்லும் பிரளயன், இன்றைய நீதிமன்றங்களையும், ஆட்சியாளர்களையும் தனது விமர்சனத்தில் விட்டுவைக்கவில்லை. புதுக்கருத்துகளை முன்வைக்கும் அதேவேளையில், அவை மகேந்திரவர்மனின் மூலப்பிரதியிலிருந்து தனித்து தெரியாமல் இரண்டறக் கலந்திருப்பதில் பிரளயனின் சாமர்த்தியம் தெரிகிறது.

அதேபோல, மூலப்பிரதியில் கபாலிகனின் துணையான தேவசோமைக்குக் கொடுக்கப்படாத முக்கியத்துவம் பிரளயனின் கைவண்ணத்தில் காஞ்சித்தலைவியாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நுட்பமான மாற்றங்கள் நாடகப்போக்கைத் தொய்வில்லாமல் சமகால சிந்தனையோடு மகேந்திரவர்மனின் 7-ம் நூற்றாண்டு படைப்பை நவீன மத்தவிலாசமாக மாற்றியமைத்துள்ளது. இருப்பினும், இறுதியில் தேவசோமை, ‘புத்தம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி!! தம்மம் சரணம் கச்சாமி!’ என்று பௌத்தத்தைத் தழுவுவதாக நாடகத்தை முடித்திருப்பது வியப்பளிக்கிறது.

ஆடம்பர அரங்கமைப்பு ஏதுமின்றி, தனது நடிகர்களின் நடிப்பாற்றலையும், தனது இயக்கத்திறனை மட்டுமே நம்பி ஒரு அருமையான சிந்தனையைத் தூண்டும், காலத்துக்கேற்ற நாடகத்தை பிரளயன் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறார்!

- கோம்பை எஸ். அன்வர், தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர், வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: anvars@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x