Published : 14 Jul 2018 08:58 AM
Last Updated : 14 Jul 2018 08:58 AM

‘படிக்காம பொழுது விடியாது’!

ழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமை கி.அ.சச்சிதானந்தம். சென்னையில் இருக்கும் எந்த நூலகங் களுக்குச் செல்லும் வாசகரும் இவரை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்திருக்க முடியும். பிறமொழி இலக்கியங்களில் பரந்த வாசிப்புடையவர். பல்வேறு எழுத்தாளர்களுடன் நேரடித் தொடர்புகொண்டிருந்தவர். மௌனி யின் கதைகளை முதலில் பதிப்பித்தவரும் இவர்தான்.

“என் வாசிப்பு பதினஞ்சு வயசு வரை பள்ளிப் புத்தகங்கள்தான். அதுக்குப் பிறகு வை.மு.கோதைநாயகியம்மாள், ஆரணிகுப்புசாமி முதலியார் இவங்க எழுதின நூத்துக்கணக்கான நாவல்களைப் படிச்சி திளைச்சிக்கிட்டு இருந்தேன். கல்லூரிக் காலத்துல புதுமைப்பித்தன், ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களெல்லாம் வாசிக்கக் கிடைச்சுது. உண்மைல அதுலேர்ந்துதான் என் வாசிப்பு தொடங்குச்சுன்னு சொல்லணும். வாழ்க்கைல மோசமானதையே நினைச்சு துயரப்படாம நடந்த நல்ல விஷயங்களை நினைச்சு சந்தோஷப்பட எனக்கு வாசிப்புதான் கத்துக்குடுத்துது. பாரதியார் எவ்ளோ கஷ்டங்களை அனுபவிச்சார். அவராலதான் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவான்னு” பாட முடிஞ்சிது. இந்தப் பார்வை உங்களுக்கு படிப்புனாலதான் கிடைக்கும்.

ஒருகாலத்துல இந்து நாளிதழ் படிக்காம பொழுது விடியாது. ஒரு கைல காபி. இன்னொரு கைல இந்து. இப்போ வயசான பிறகு விட்டுப்போச்சு. ‘இந்து தமிழ்’ல சிறுபத்திரிகைல வர இலக்கிய விஷயமெல்லாம் வருதுன்னு நண்பர்கள் சொன்னதால ஆர்வமா வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நடுப்பக்கக் கட்டுரைகள் சீரியஸா அருமையா இருக்கு. நாளிதழ்கள்ல நவீன இலக்கியத்துக்காக இப்படி ஒரு இடம் கிடைச்சிருக்கது சந்தோஷமாதான் இருக்கு. யாராவது ஒருத்தர் வாசகனையும் எஜுகேட் பண்ணணுமே! ஒருத்தன் படிக்கலைன்னா அவன் வாழ்க்கைய முழுசா புரிஞ்சுக்கவே முடியாது. கஷ்ட நஷ்டம் இருக்கும். கோபதாபம் இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கா? ஆனா, படிச்சா அத புரிஞ்சுக்க முடியும். ஒரு தெளிவு கிடைக்கும். லெளகீக பயன் கருதிப் படிக்கக் கூடாது. சிலப்பதிகாரத்தை முனைவர் பட்ட ஆய்வுசெய்றவன் படிக்கிறதுக்கும் நான் படிக்கறத்துக்கும் வித்தியாசம் இருக்கு. தானா கண்டடைஞ்சு தேர்வுசெஞ்சி அத உணர்ந்து படிக்கணும். அப்ப அது தரும் விகாசமே தனிதான்.”

- ரவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x