Published : 14 Jul 2018 08:57 AM
Last Updated : 14 Jul 2018 08:57 AM

பரணிவாசம்: நெல்லை அத்தியாயத்தின் இருண்ட பக்கங்கள்!

நெ

ல்லை என்றால் குற்றாலச் சாரலும், தாமிரபரணி ஆற்றின் குளுமையும், பச்சைப்பசேல் என்ற வயல்வெளியும், தித்திக்கும் அல்வா வும் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், நெல்லையின் வரலாற்றில் இருண்ட பக்கங்களும் உண்டு. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராடியபோது தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த 17 பேரின் உறவினர்கள் இருள் கவிழும் மாலைப்பொழுதில் படித்துறையில் மௌனமாய் அழுதுகொண்டிருப்பதைத் தாமிரபரணி தாயும் நினைவுகூர்ந்தபடி கண்ணீர் வடித்து ஓடிக்கொண்டிருப்பாள். அந்தத் தொழிலாளர்கள் 17 என்ற எண்களாலேயே இன்னமும் அறியப்படுகிறார்கள். அவர்களுக்கு முகங்கள் இல்லை. இது ஒருபுறம் என்றால் இன்றும் கந்துவட்டிக் கொடுமை தொடர்வது பேரவலம். பச்சிளங்குழந்தைகள் இரண்டு தீயில் கருகியதைப் பார்த்து உலகமே பதைபதைத்தது. கந்துவட்டி இங்கே ரொம்ப சாதாரணம். கந்துவட்டி வாங்குகிறார்கள் என்று போலிசில் புகார் கொடுப்பதும் சாத்தியமற்றது. இந்த நெல்லை மண்ணின் சமகால நிகழ்வுகளை சிறுகதைகளாக மனதில் படியும்படி எழுதியிருக்கிறார் பாஸ்கரன். சவுதிக்குப் போய் சம்பாதித்துத் தனது இரண்டு அக்காக்களின் திருமணத்தை எப்படியேனும் நடத்திவிட வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த முபாரக்கின் கனவுகள் எப்படிச் சிதைந்துபோயின என்பதை ஒரு சோகக் கவிதையாய் எழுதிச் சென்றிருக்கிறார். எழுத்தாளர் பாஸ்கரன் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்பது கூடுதல் செய்தி.

- இரா.நாறும்பூநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x