Published : 14 Jul 2018 08:53 AM
Last Updated : 14 Jul 2018 08:53 AM

தொடுகறி:80 வயதில் 2,224 பக்க நாவல்!

அறநிலையத் துறை துணை ஆணையராக இருந்து ஓய்வுபெற்றவர் ‘ஜுவாலா முகி’ ராஜு. மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண்ணின் கதையை 2,224 பக்கங்களில் ‘குஞ்ஞாலி’ எனும் நாவ லாக எழுதியுள்ளார். விபத்தொன்றி னால் பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் 2 தொகுதிகளாக இந்த நாவலை எழுதி முடித்துள்ளார். “ஏதோ வேகத்தில் நாவலை எழுதி முடித்தேனேயொழிய என்னால் படிக்க முடியவில்லை, ஒரு உதவியாளர் மூலமாகத்தான் கொண்டு வர முடிந்தது” என்றார் ராஜு. யாரையும் எந்த வயதிலும் எழுத்து தேவதை விட மாட்டாள்போலும்!

 கல்யாண்ஜி முதல்  கல்யாண்ஜி வரை!

புதுமைப்பித்தன் தனது மனைவிக்கு எழுதிய ‘கண்மணி கமலாவுக்கு’ எனும் நூலை 1994-ல் வெளியிட்டு பதிப்புலகில் நுழைந்தவர் இளையபாரதி. அவர் 2003-ல் தொடங்கிய வஉசி நூலகம் இப்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் வகையில் 20 நூல்களை ஒரே நேரத்தில் வெளியிடவிருக்கிறார். கல்யாண்ஜியின் முதல் தொகுப்பான ‘புலரி’ தொடங்கி அவரது சமீபத்திய தொகுப்பான ‘ரணங்களின் பூச்செண்டு’ வரை இடம்பெற்ற கவிதைகள் அனைத்தையும் உள்ளடக் கிய 860 பக்க பெரும் தொகுப்பும் உருவாகியிருக்கிறது. இன்று (ஜூலை 14) மாலை 6 மணியளவில் சென்னை - முத்தமிழ்ப் பேரவை, திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கில் நடை பெறுகிறது வெளியீட்டு விழா.

இந்திரன் 70!

கலை விமர்சகர் இந்திரனின் 70-வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிவருகிறது ஓவிய உலகம். அதில் ஒரு பகுதியாக, 30 ஓவியர்களின் ‘எ ட்ரிப்யூட் டு இந்திரன்’ கண்காட்சி இன்று (ஜூலை 14) மாலை 5 மணிக்கு புதுவை அரவிந்தர் ஆசிரமம் ஓவியக் கூடத்தில் நடைபெறவிருக்கிறது. ஜூலை 21 வரை கண்காட்சி நடைபெறுகிறது.

போகன் சங்கருக்கு ஆத்மாநாம் விருது!

ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ மூலமாக 2015-ம் ஆண்டு முதல் ஆத்மா நாம் பெயரில் விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது, ‘சிறிய எண்கள் உறங்கும் அறை’ நூலுக்காக போகன் சங்கருக்கு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் போகன்!

மொத்தமாக வருகின்றன ம.லெ.தங்கப்பா நூல்கள்!

தமிழறிஞரும் பன்மொழிப் புலவருமான ம.லெ.தங்கப்பாவின் மறைவுக்குப் பிறகு, அவரது வாரிசுகள் தங்கப்பாவின் நூல்களை ஒழுங்குபடுத்தி மொத்தமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ‘மொழி மானம்’, ‘உரிமைக் குரல்’ உள்ளிட்ட15 தமிழ் நூல்களையும், ‘முத்தொள்ளாயிரம்’ மொழிபெயர்ப்பு உட்பட 4 ஆங்கில நூல்களையும் வானகப் பதிப்பகத்தின் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். 2010-ல் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமியின் ‘பால புரஸ்கார் விருது’ பெற்ற ‘சோளக்கொல்லை பொம்மை’ நூலும், 2012-ல் மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ எனும் சங்கக் கவிதைகள் மொழிபெயர்ப்பு நூலும் இதில் அடக்கம். தங்கப்பா கடைசியாக எழுதிய ‘வாழ்க்கை மேல் காதல்’ எனும் நூலையும் விரைவில் வெளியிடவிருக்கிறார்கள். நூல்களைப் பெற: 0413 – 2252843, 9444549439

தொகுப்பு: மானா பாஸ்கரன், மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x