Published : 30 Jun 2018 09:53 AM
Last Updated : 30 Jun 2018 09:53 AM

இசை வடிவில் போராட்டம்

தொழிலாளர்களுக்கும், வனத்துக்கும் நஞ்சை விதைத் திருந்தது கொடைக்கானலிலுள்ள யூனிலீவர் நிறுவனம். 15 வருடப் போராட்டத்துக்கும், பரவலாகப் பரவிய ராப் பாடலுக்கும் பிறகே ஓரளவு செவிமடுத்தது. ஆனாலும், ஐரோப்பாவில் கழிவுகளை அகற்றும் முறையை இந்தியா வில் பின்பற்ற அந்நிறுவனம் மறுக்கிறது. எனவே, இதை எதிர்க்கும் விதமாக டி.எம்.கிருஷ்ணா, சோஃபியா அஷ்ரஃப், அம்ரித் ராவ் ஆகியோர் இணைந்து ‘கொடைக்கானல் ஸ்டில் வோண்ட்’ எனும் பாடலை நேற்று வெளியிட்டார்கள்.

முதல் பெண் பதிப்பாளர்!

பதிப்பகத் துறையின் முதல் பெண் பதிப்பாளராக 1,000 நூல்களை வெளியிட்டுள்ள வனிதா பதிப்பக உரிமையாளரான பெ.அம்சவேணி, கடந்த ஜூன் - 20 அன்று காலமானார். லாப நோக்கின்றி திருக்குறள் பரப்புவதைப் பணியாகக்கொண்டு செயல்பட்டவர். பெ.அம்சவேணி நூல் வெளியீட்டு விழாவும், பெ.அம்சவேணி பயிலரங்கம் தொடக்க விழாவும் சென்னை நங்கைநல்லூர் மகளிர் மன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழுக்கு வருகிறார் எரிக் ஹாப்ஸ்வாம்!

உலகப் புகழ்பெற்ற மார்க்ஸிய ஆய்வறிஞர் எரிக் ஹாப்ஸ்வாம் எழுதிய சமூகம்சார் கொள்ளையர்கள் (பேண்டிட்ஸ்), கலகங்கள் (பிரிமிடிவ் ரெபெல்ஸ்) ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்பை நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடவிருக்கிறது. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்தநாளையொட்டி, ந.முத்துமோகனை பதிப்பாசிரியராகக் கொண்டு என்சிபிஎச் வெளியிடும் மார்க்ஸிய தத்துவ நூல் வரிசையில், சமகால ஐரோப்பிய இடதுசாரிப் போக்குகளை விவரிக்கும் எரிக் ஹாப்ஸ்வாம், தாரிக் அலி, லூயிஸ் அல்தூஸர், கிறிஸ்டோபர் காட்வெல், ஜான் நிக்ஸன், எர்னெஸ்ட் ப்ளாக், எட்டியேன் பாலிபர், அலெக்சாண்டிர கொலந்தாய், கெவின் பி.ஆண்டெர்ஸன், டிமோத்தி ஸ்னைடர், மைக்கேல் ஃபிலிப்பினி, கியரென் ஆலன் ஆகியோரின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டு ஃப்ராங்க்பர்ட் புத்தகக்காட்சியில் பார்வையாளராகக் கலந்துகொண்ட என்சிபிஎச், முன்னணி ஆங்கிலப் பதிப்பகங்களிட மிருந்து மொழிபெயர்ப்பு உரிமையைப் பெற்றுவந்திருக்கிறது. ஜனவரி புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகங்களை எதிர்பார்க்கலாம்.

தமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாட்டில் இயங்கிவரும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் அமைப்புகளுள் அதிகமானவரைத் தன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கும் அமைப்பு, தமுஎகச. சமூக அக்கறையுடன் கூடிய கலை இலக்கியத்தை முன்னெடுத்துவரும் தமுஎகச, இளம் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் தாம் நடத்தும் கலை இரவுகளில் மேடை அமைத்துக்கொடுத்து அவர்களை வளர்த்தெடுத்துவருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த தமுஎகச மாநில மாநாட்டில் கௌரவத் தலைவராக ச.தமிழ்ச்செல்வனும், தலைவராக சு.வெங்கடேசனும், பொதுச் செயலாளராக ஆதவன் தீட்சண்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்!

தொகுப்பு: ரா.பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x