Last Updated : 30 Jun, 2018 09:44 AM

 

Published : 30 Jun 2018 09:44 AM
Last Updated : 30 Jun 2018 09:44 AM

பாறையை உருக்கி தண்ணீராக்கும் ரசவாதமெல்லாம் இலக்கியம் செய்யாது!: சுபா பேட்டி

மிழில் இளம் தலைமுறை வாசகர்களின் நெஞ்சிலும் நினைவிலும் என்றென்றும் நிற்கும் எழுத்தாளர்களின் பெயர்களில் ஒன்று சுபா. இரண்டு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய புதிய வகையை அவர்களே தமிழில் பிரபலப்படுத்தினார்கள். அவர்களின் எழுத்துகளைக் கடந்துதான் இளம்வாசகர்கள் இலக்கிய உலகத்துக்குள் அடியெடுத்துவைத்தவர்கள் பலர். வெகுஜன எழுத்தின் சுவாரஸ்ய பாணிக்குப் புதிய அடர்த்தியைத் தந்ததில் இவர்களின் பங்கு அதிகம்.

ஏன் எழுதுகிறீர்கள்?

சற்று காட்டமான கேள்வி. மனதுக்கு மிகமிகப் பிடித்த ஒரு செயலை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்பது எப்படித் தொனிக்கிறது என்றால், ‘ஏன் மூச்சுவிடுகிறீர்கள்?’, ‘ஏன் சாப்பிடுகிறீர்கள்?’ என்றெல்லாம் கேட்பதுபோல் இருக்கிறது. ‘நம்மாலெல்லாம் எழுத முடியுமா?’ என்று சிறு வயதில் ஏங்கிய ஏக்கத்தின் விளைவே எழுத முயன்றது.

‘நீ எழுதுவதைப் படிக்கத் தயாராயிருக்கிறோம்’ என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்ட ஒரு வரம் இது. நல்லதோர் வரத்தை நலம் கெடப் புழுதியில் வீசத் தயாராயில்லாத வரை, எப்படி எழுதாமல் இருக்க முடியும்?

எந்த நேரம் எழுதுவதற்கு உகந்ததாக இருக்கிறது?

உரிய ஆராய்ச்சிகள் முடிந்து, எழுத வேண்டியது உள்ளே உருப்பெற்றுவிட்டால், உணவு நேரம், உறங்கும் நேரம், வாகனம் ஓட்டும் நேரம் தவிர்த்து எல்லா நேரமும் எழுத உகந்ததாகவே இருக்கிறது. முன்பு பேப்பர் பேனா, இப்போது பேட்டரி தீராத மடிக்கணினி வசமிருந்தால் போதும்.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

இந்தக் கிண்டல்தானே வேண்டாமென்கிறது! எழுத்து வாழ்க்கை பூர்த்தியா? இருப்பதை வைத்துக்கொண்டு, பூஜ்ஜியத்துக்குள்ளேயே இன்னும் சுற்றிக்கொண்டிருப்பதாக உணர்கிறோமே தவிர, எதையும் பூர்த்தியாக்கிவிட்டதாக ஒரு நாளும் நினைக்கவில்லை. ஏதோ ஒரு நாள், ஆயுள் பூர்த்தியாகலாம். எழுத்து வாழ்க்கை? நெவர்!

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

எழுத்தாளனாகச் சோர்வாக உணர்ந்த பல சந்தர்ப்பங்கள்: அபத்தமான கேள்விகள் வீசப்படும்போது. இப்போது சொல்லி, ‘நேற்றே கிடைக்குமா?’ என்று பத்திரிகைகள் நெருக்கடி கொடுக்கும்போது. ‘சார், கோ படத்துல நீங்க நடிச்சிருக்கீங்கதான?’ என்று கேட்டு, அந்தத் திரைப்படத்துக்கு எழுதியவர்களை வெறும் நடிகர்களாகப் பார்க்கும் சிலரைச் சந்திக்கும்போது. இன்னும் இப்படிச் சில... பதிலின் முதல் வரியை மறுபடியும் படியுங்கள். எழுத்தில் என்ற வார்த்தை இருக்காது. அதெல்லாம்கூட எழுத்தாளனின் சோர்வுதான்.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

ஒருவருக்கொருவர் நாங்களே ஆரம்பத்தில் கொடுத்துக்கொண்ட அறிவுரைகள்தாம்: ‘போதாது, இன்னும் படி.. போதவே போதாது, இன்னும் எழுதிப் பழகு!’

இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஒவியம்... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

எழுதும் நேரமும், எழுதாத நேரமும், படிக்கும் நேரமும், படிக்காத நேரமும், ஏன் விழித்திருக்கும் நேரமெல்லாம் மண்டைக்குள்ளே ரசித்த பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். அது எம்எஸ்வியாக இருக்கலாம், எஸ்.டி.பர்மனாக இருக்கலாம், ஆர்.டி.பர்மனாக இருக்கலாம், இளையராஜாவாக இருக்கலாம், ரஹ்மானாக இருக்கலாம், தேவாவாக இருக்கலாம், வித்யாசாகராக இருக்கலாம், இன்னும் பற்பல பாடகர்களின் (கர்னாடகம், ஹிந்துஸ்தானி, பஜன், கஸல்) வெவ்வேறு பாடல்களாக இருக்கலாம். மண்டைக் குள் ஏதோ ஒரு பாடல் ஓடாமல் விடிவதுமில்லை, நாள் முடிவதுமில்லை. பயணமும், சினிமாவும் பிடித்தவை. ஆனால், இசையின்றி இல்லை வாழ்க்கை.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

ஆசையுடன் வாங்கிவந்து, அட்டை தாண்டாமல், பக்கங்களில் இன்னும் விரல் படாமல் அலமாரியில் காத்திருக்கும் நூறு புத்தகங்களில் எதைச் சொல்வது?

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

எது இலக்கியம் என்பதிலேயே நூறாயிரம் கருத்து இருக்கிறது. மகாத்மா காந்தி, சத்ரபதி சிவாஜி போன்றோருக்கு அவர்களுடைய மிகச் சிறிய வயதில் அவர்களுடைய அம்மாக்கள் சொன்ன கதைகள் மூலம் சில பண்புகள் கிடைத்திருப்பதாக அறிகிறோம். மற்றபடி, பண்படத் தயாராக ஒரு மனம் நெகிழ்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாயத்துக்கு வாய்ப்பு உண்டு. அப்படி நெகிழ்ந்திருக்கும் ஒரு மனதுக்கு, ஒரு புத்தகம், ஓர் அனுபவம், ஒரு பயணம், ஓர் இசை எது வேண்டுமானாலும் அதை நிகழ்த்திவிட முடியும். இறுகிப்போன ஒருவரை மேற்சொன்னவை கொஞ்சம் அசைத்துப்பார்க்கலாமே தவிர, பண்படுத்த வாய்ப்பில்லை. குழப்பத்துடனிருந்த சில வாசகருக்குச் சில கதைகள் தீர்வு கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ ஒரு கதை முடிவு ஒருவருக் குத் தெளிவு கொடுத்திருக்கலாம். மற்றபடி பாறையை உருக்கித் தண்ணீராக்கும் ரசவாதமெல்லாம் எந்த இலக்கியத்துக்கும் கிடையாது.

- த.ராஜன்,

தொடர்புக்கு:rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x