Published : 30 Jun 2018 09:43 AM
Last Updated : 30 Jun 2018 09:43 AM

இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடைவெளி குறைவது எப்போது?

லையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளை எழுதிய ‘கயிறு’ நாவல் ஜெயராஜின் இயக்கத்தில் ‘பயநாகம்’ எனும் பெயரில் திரைப்படமாக வெளிவரவிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், தபால்காரராகப் பணியில் சேரும் முன்னாள் ராணுவ வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தகழி எழுதிய ‘செம்மீன்’ நாவலின் திரைவடிவம் தமிழகத்திலும்கூடப் பிரபலமானது. இந்தச் சூழலில், மிகச் சிறந்த படைப்புகளைக் கொண்ட தமிழ் இலக்கிய உலகத்திலிருந்து கதைகளை எடுத்தாள்வதில் தமிழ்த் திரையுலகம் காட்டிவரும் அலட்சியம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. இன்னமும் எழுத்தாளர்களை வசனகர்த்தாக்களாக மட்டுமே பயன்படுத்தும் தமிழ்த் திரையுலகின் போக்கு எப்போது மாறும் என்ற கேள்வியும் எழுகிறது.

ஹாலிவுட் தொடங்கி மலையாளத் திரையுலகம் வரை, புகழ்பெற்ற நாவல்களைப் படமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னுதாரணங்கள் உண்டு. ஹாலிவுட்டில் ‘டாக்டர் ஸிவாகோ’, ‘காட்ஃபாதர்’, ‘தி ஷைனிங்’, ‘அபோகலிப்ஸ் நவ்’ என்று எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். மலையாளத்தில், ‘செம்மீன்’, ‘மதிலுகள்’, ‘நிர்மால்யம்’, ‘நாலு பெண்ணுகள்’ என்று மிகப் பெரிய பட்டியல் உண்டு. வங்கத் திரைப்பட மேதை சத்யஜித் ராய் அவர் எடுத்த திரைப்படங்களுக்கு ரவீந்திரநாத் தாகூர், விபூதிபூஷன் சட்டோபாத்யாயா ஆகியோரின் நாவல்களையும் பயன் படுத்திக்கொண்டார். கன்னட இயக்குநரும் நடிகருமான கிரிஷ் கர்நாட், தானே ஒரு எழுத்தாளர் என்றபோதும் முன்னோடி எழுத்தாளர் பி.எஸ்.பைரப்பாவின் நாவலைத் திரைப்படமாக இயக்கு வதற்குத் தயங்கவில்லை.

தமிழிலும், உதிரிப்பூக்கள் (புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’), சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜெயகாந்தன்), தில்லானா மோகனாம்பாள் (கொத்தமங்கலம் சுப்பு), மோகமுள் (தி.ஜானகிராமன்) என்று குறிப்பிடத்தக்க படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், பிற மொழிகளில் தொய்வில்லாமல் தொடரும் இந்தப் போக்கு தமிழில் மிக அரிதாகத்தான் வெளிப் படுகிறது. புத்தகங்களாக சில ஆயிரம் வாசகர்களிடம் மட்டுமே கட்டுண்டு கிடக்கும் அந்தக் கலை அனுபவங்களைத் திரைப்படங்களின் வழியாக லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும்.

கலை வெளிப்பாட்டிலும் உத்தியிலும் இலக்கியமும் சினிமா வும் வேறுவேறு என்பதை மறுக்க முடியாது. இலக்கியத்தை அப்படியே திரைப்படமாக மாற்றவும் முடியாது. அதேசமயம், இலக் கியத்தைத் தழுவி எடுக்கப்படும் சினிமா தனக்கான தனிக் கலை அடையாளங்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக் கிறது.

இலக்கியங்களில் இடம்பெறும் வித்தியாசமான வாழ்க்கையும் வித்தியாசமான மனிதர்களும் திரைப்படங்களுக்கு வரும்போது, திரைப்படக் கலை இன்னும் கூடுதலான கலையனுபவத்தை வழங்கும். இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளைத் திரைப் படங்களாக்குவது, கவிதைகளைத் திரைப்பாடல்களாகப் பயன் படுத்திக்கொள்வது பற்றியெல்லாம் தமிழகத் திரைத் துறை அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளைத் திரைவடிவமாக்குவது என்பது வெறுமனே கலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. மொழி சார்ந்த செயல்பாடும் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x