Published : 23 Jun 2018 09:39 AM
Last Updated : 23 Jun 2018 09:39 AM

நூல் நோக்கு: சிறுபான்மையினர் விஷயத்தில் உண்மையை மறைப்பது ஏன்?

சிறுபான்மையினர் விஷயத்தில் உண்மையை மறைப்பது ஏன்?

முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்விநிலையை 2004-ல் ஆய்வுசெய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக இருந்தவர் ராஜிந்தர் சச்சார். 60 ஆண்டு கால விடுதலை பெற்ற இந்தியா வில் முஸ்லிம்களின் அவலநிலையை மிகத் தெளிவாகப் படம் பிடித்ததோடு அதற்கான தீர்வுகளையும் பரிந்துரைத்தது அவர் அளித்த அறிக்கை. கடந்த ஏப்ரலில் சச்சார் மறைவைத் தொடர்ந்து, அவரது மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து பல்வேறு செய்தி இதழ்களில் வெளியான முக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் எம்.எச்.ஜவாஹிருல்லா. மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் வீ.சுரேஷ், என்.டி.பஞ்சோலி, புஷ்கர் ராஜ், சட்டத் துறைப் பேராசிரியர் தாஹிர் மஹ்மூத், பத்திரிகையாளர்கள் அலி குர்பான், சீமா சிஷ்தி, சச்சாரின் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் பணியாற்றிய சையத் ஜாபர் மஹ்மூத் ஆகியோர் சச்சாரையும் அவரது பணிகளையும் நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பாபர் மசூதிப் பிரச்சினை பற்றி ‘மெயின்ஸ்ட்ரீம்’ இதழிலும் சிறுபான்மையினர் பற்றி ‘மில்லி கெஜட்’ இதழிலும் சச்சார் எழுதிய கட்டுரைகளோடு மதச்சார்பின்மை குறித்து அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி யும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ‘ப்ரண்ட்லைன்’ இதழுக்கு சச்சார் அளித்த பேட்டி இத்தொகுப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று. மதவாரியான மக்கள்தொகையானது மக்களின் முழுமையான சமூக, பொருளாதாரப் புள்ளிவிவரங்களோடு வெளியிடப்படாததற்குக் காரணம், அவை வெளியிடப்பட்டால் சிறுபான்மையினர் விஷயத்தில் இதுவரை அரசுகள் சரியாக நடந்துகொள்ளாததை அம்பலப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் சச்சார். இத்தொகுப்பு, மனித உரிமை ஆர்வலர் சச்சாரைப் பற்றிய அறிமுகம் மட்டுமல்ல, அவருக்குச் செலுத்தப்பட்டிருக்கும் அஞ்சலியும்கூட!

- புதுமடம் ஜாபர்அலி

நீதியரசர்

ராஜிந்தர் சச்சார்:

என்றும் மறவா நினைவுகள்

தொகுப்பு: எம்.எச்.ஜவாஹிருல்லா

மக்கள் உரிமை வெளியீடு, சென்னை - 1

விலை: ரூ.25

044 45564342

அ.ச.ஞானசம்பந்தத்தின் விமர்சகர் முகம்

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தமிழறிஞர்களில் ஒருவரான அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய நூல்களின் முழுத் தொகுப்பின் முதல் பாகம் காவ்யா வெளியீடாக வெளிவந்துள்ளது. தமிழ்ச்சூழலில், விமர்சனக் கலையை மேலை இலக்கியக் கோட்பாடுகளோடு அறிமுகப்படுத்திய அ.ச.ஞாவின் ‘இலக்கியக் கலை’ என்ற நூல், தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாகவும், எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி நூலாகவும் விளங்கியது. அந்நூல் இத்தொகுப்பின் முதல் பகுதியாகவும், அ.ச.ஞா எழுதிய ஐந்து நூல்களில் இடம்பெற்ற கலை இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் இரண்டாம் பகுதியாக வும் அமைந்துள்ளன. ஐந்தாவது நூலான ‘இன்றும் இனியும்’ பற்றி பதிப்புரையில் குறிப்பிட்டிருக்கலாம். ஈரோட்டுப் பெரியாரும் காஞ்சி பெரியவரும் இலக்கியக் கலைஞர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அ.ச.ஞா. என்றவுடன் சிலருக்கு கம்பனும் இன்னும் சிலருக்குப் பக்தி இலக்கியங்களும் உடனடி நினைவுக்கு வரும். கம்பனையும் சைவத் தமிழ் இலக்கியங்களையும் சமகாலத்தின் நவீனப் பார்வையுடன் ஆராய்ந்து எழுதியவர் அ.ச.ஞா. ஆனால், இந்தப் பெருந்தொகுப்பின் வழியாக அ.ச.ஞாவை வாசிக்கத் தொடங்குபவர்கள், அவர் தமிழ் இலக்கிய விமர்சன உலகின் முன்னோடிகளில் ஒருவர் என்பதை எளிதில் கண்டுகொள்வார்கள். முக்கியமாக, இத்தொகுப்பின் இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ள 35 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் 20-ம் நூற்றாண்டின் கலை, இலக்கிய, சமூக, அரசியல் வரலாற்றுப் பதிவுகளாகவும் அமைந்திருக்கின்றன.

- புவி

அ.ச.ஞா-1: இலக்கியக்கலை

தொகுப்பு: சு.சண்முகசுந்தரம்

காவ்யா, சென்னை - 24

விலை: ரூ.1,000

98404 80232

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x