Published : 23 Jun 2018 09:04 AM
Last Updated : 23 Jun 2018 09:04 AM

தொடுகறி: புத்தக சீர்வரிசை!

புகைப்படங்களில் நேருவின் சகாப்தம்!

தமிழக அரசியல் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்களில் ஆ.கோபண்ணா எழுதிய ‘காமராஜர் ஒரு சகாப்தம்’ நூல் முக்கியமான ஒன்று. காமராஜரைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் வாழ்க்கைச் சரிதத்தையும் சிறுவெளியீடாகக் கொண்டுவந்த கோபண்ணா, தற்போது, நேருவின் வாழ்க்கைச் சரிதத்தை ஆங்கிலத்தில் கொண்டுவந்திருக்கிறார். நல்ல தரமான தாளில் நூற்றுக்கணக்கான புகைப்படங்களோடு வார்த்திருக்கும் புத்தகம் அலாதியானதாக இருக்கிறது. பிரணாப் முகர்ஜியும், ஹமீத் அன்சாரியும் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். விரைவில் தமிழிலும் இந்தப் புத்தகம் வெளிவர இருக்கிறது. ஆங்கில வடிவம் தமிழிலும் பின்பற்றப்பட்டால், இதுவரை தமிழில் வெளிவந்த வாழ்க்கைச் சரிதங்களிலேயே இதுதான் உயர்தரமான தயாரிப்பாக இருக்கும்.

புத்தக சீர்வரிசை!

பட்டுக்கோட்டை அருகே குறிச்சியிலுள்ள இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளியின் முன்னாள் தாளாளரும், இலக்கிய ஆர்வலருமான தனபால் - கலைச்செல்வி தம்பதி யினரின் மகள் பாரதி - சேரன் மணவிழா சென்ற ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மண விழாவில், தேர்வு செய்யப்பட்ட 100 புத்தகங்களை அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரியுடன் மணமக்களுக்கு வழங்கினார் தனபால். அடுத்தடுத்த தலைமுறைகளிடத்தும் ஊன்றப்படும் வாசிப்புக்கு இப்படியான புத்தக சீர்வரிசை வழிகாட்டட்டும்.

குக்கூ காட்டுப் பள்ளியில் இலக்கிய சந்திப்பு!

ded9fea64570191mrjpg100 

ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள புலியானூர் குக்கூ காட்டுப் பள்ளி எனும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் இலக்கிய சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறது யாவரும் பதிப்பகம். 2010-க்குப் பிறகு எழுதவந்த இளம் எழுத்தாளர்களின் நூல்கள் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. வெட்டிவேர் மிதக்கும் நீரும், மூலிகை டீயும் ஒரு பாரம்பரிய அனுபவத்தைக் கொடுத்ததாக உளம் மகிழ்கிறார்கள்.

இயல் விருதை மறுத்த நுஃமான்!

கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான இயல் விருதை எம்.ஏ.நுஃமான் மறுத்தது இப்போது தெரியவந்திருக்கிறது. கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகிய தமிழின் மிக முக்கியமான வாழ்நாள் சாதனையாளர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்குப் பிந்திய தலைமுறையைச் சேர்ந்த ஜெயமோகனுக்கும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இயல் விருது வழங்கப்பட்டதால் ஓர் எதிர்மறையான பார்வை நுஃமானிடம் உருவாகியிருக்கிறது. இது தொடர்பான மின்னஞ்சலையும் பகிர்ந்திருக்கிறார் நுஃமான்.

மகிழ்வூட்டும் விருது அறிவிப்பு!

சாகித்ய அகாடமியின் இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது ‘அம்புப் படுக்கை’ நூலுக்காக சுனில் கிருஷ்ணனுக்குக் கிடைத் திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவரான இவர் காந்தியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பதாகை எனும் வலைப்பூவில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்த ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பவர். முனைவர் சொ.சேதுபதிக்கு (கிருங்கை சேதுபதி) 'சிறகு முளைத்த யானை’ நூலுக்காக சிறுவர் இலக்கியத்துக்கான பால புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள்!

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x