Published : 22 Jun 2018 07:54 AM
Last Updated : 22 Jun 2018 07:54 AM

பார்த்திபன் கனவு 35: சிவனடியார் கேட்ட வரம்

ரா

ணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக்கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார், “நில்லுங்கள்” என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்ததுபோல, அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள்.

“சுவாமி! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மெலிதான குரலில் கேட்டாள்.

“உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா! உன் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம் திரும்பி வருவான் என்றும் சொன்னேன்” என்றார் சிவனடியார்.

அருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, “இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்!” என்றாள்.

“சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று கூறினேன். அந்தச் செய்தி உனக்கு சந்தோஷம் அளிக்கும் என்று எண்ணினேன்...”

“ஆமாம் நினைவு வருகிறது. ஆனால் அது சந்தோஷச் செய்தியா? சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய சத்ருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாய் இருப்பதற்கு யார் காரணமோ, அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மகளைப் பார்த்தா என் மகன் மயங்கிவிட்டான்? விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா..?”

“கொஞ்சம் பொறு அருள்மொழி! அவசரப்பட்டு சாபம் கொடுக்காதே!” என்று சிவனடியார் சிறிது கலக்கத்துடன் கூறினார்.

அவர் மகா புத்திமானாக இருந்தும், அருள்மொழி இவ்வாறு பொங்குவாள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது.

“இதோ பார் அம்மா! உன்னுடைய தீராத கோபத்துக்கு ஆளான நரசிம்மவர்மனுடைய மகள் அந்தப் பெண் என்பது உன் மகனுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரை ஒருவர் அருகில் நெருங்கியதும் இல்லை; ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. தூரத்தில் இருந்தே ஒருவரை ஒருவர் பார்த்ததுதான்! அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகிவிட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம்!” என்றார் பெரியவர்.

“நல்ல வேளை; என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். எங்கே அதுவும் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் சூழ்ச்சியோ என்று நினைத்தேன். சுவாமி! விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர் வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும், தாகத்துக்குத் தண்ணீர் இல்லாமலும் கஷ்டப்பட்டாலும் படட்டும்! ஆனால் அவன் திரும்பி வரவும் வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம்!”

“உன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்றாகச் சோதித்துப் பார், அருள்மொழி! உன் மகன், சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா?”

“அதெல்லாம் அந்தக் காலத்தில் சுவாமி! தங்களிடம் சொல்லுவதற்கு என்ன? வெண்ணாற்றங்கரைப் போருக்கு முன்னால் அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார ஆசை என் மனதில் சில சமயம் தோன்றியதுண்டு.

‘அவ்விதம் ஏற்பட்டால் சோழ வம்சத்துக்கும், பல்லவ குலத்துக்கும் உள்ள பகை தீர்ந்துவிடுமே!’ என்று நினைத்ததும் உண்டு.

ஆனால், எப்போது என் பிராணநாதர் போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன் களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்துவிட்ட பிறகு, என் மகன் சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட, அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்!”

மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x