Published : 02 Jun 2018 09:31 AM
Last Updated : 02 Jun 2018 09:31 AM

நல்வரவு: பனை விதைக்குள் செங்குத்து நிழல் சென்றாயன்

சென்றாயனின் கவிதை தனக்கான மொழியை வெக்கையில் இருந்து தருவித்துக்கொண்டிருக்கிறது. நிஜத்தைத் தாண்டி குதித்துவிடக் கூடாது என்பது எல்லா கவிதைகளிலும் வரையப்படாத சித்திரமாகப் படிந்துகிடக்கிறது. இப்புத்தகத்தில் உள்ள இரண்டு சிறு கவிதைகளை மட்டும் வாசியுங்கள் சென்றாயனின் நீலவானம் நம் மீது விரியும்: ‘இருள் கரைந்த/நீர் மேனியில் தழும்புகிற/வட்ட நிலாவின் ஆழத்தில்/குவிந்த மீன்களின் துடுப்பசைவில்/ கரை சேர இயலாது இரவெல்லாம்/ கதகதப்பில் குளம்.’ இன்னுமொரு கவிதை: நெரிசலற்ற விசாலமான/மின்ரயில் பெட்டியில்/தாளக்கருவி மார்பில் பிடித்து/கால்நீட்டி இரவுப் பாடகன் அயர்கிறான்/அவனது நித்திரையை/முன்னோக்கி இழுத்துச் செல்கிறது/ இன்னொரு இரவுப் பாடலுக்கு’.

பனை விதைக்குள் செங்குத்து நிழல் சென்றாயன்

வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல் - 624 001.

9715168794

விலை: ரூ. 60

‘தி இந்து’வில் ‘காதல் வழிச் சாலை’ தொடர் எழுதிய மனநல மருத்துவரும் எழுத்தாளருமான எஸ்.மோகன வெங்கடாசலபதியின் கட்டுரைத் தொகுப்பு. மன அழுத்தங்களுக்கான காரணங்களையும் உடலுக்கும் மனதுக்குமான உறவையும் தனக்கே உரிய இனிய, எளிய நடையில் எழுதியிருக்கிறார் மோகன வெங்கடாசலபதி. நடையைத் தியானமாகவும், இசையை மருத்துவராகவும் பரிந்துரைக்கிறார். மனப் பிணியாளர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சிக்கல்களைப் பேசுவதோடு அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது இந்நூல்.

வாங்க, மனசுக்குள் பேசலாம்!

எஸ்.மோகன வெங்கடாசலபதி

மனோரக்ஷா, சேலம் - 636 201

விலை: ரூ. 100

94452 04410

தமிழின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரான செ.கணேசலிங்கனின் அடுத்த படைப்பு. மீனாட்சி, செல்லம்மா இருவர் நட்பும் பள்ளிக் காலத்திலிருந்து தொடர்கிறது. இயற்கை அழகைத் தாண்டிய கலை அழகு சார்ந்த ஆய்வில் ஈடுபடுகிறாள் மீனாட்சி. கறுப்பி என அவளைக் கேலிசெய்யும் மீனாட்சியோ நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நெருக்கமான தோழிகளின் கதைகளை விவரிப்பதன் ஊடாக விரியும் இந்த நாவல், அழகியல் கோட்பாடுகளை மறுவிசாரணைசெய்கிறது. இந்த வயதிலும் அசராமல் எப்படி உழைப்பது என்பதற்குத் தொடர் உதாரணர் கணேசலிங்கன்!

மீனாட்சி கூறும் அழகியல்

செ.கணேசலிங்கன்

குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை-26

விலை: ரூ. 80

9444808941

கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனால் நிறுவப்பட்ட தி.நா.சுப்ரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளில் நடன.காசிநாதன், ர.பூங்குன்றன், எ.சுப்பராயலு, சொ.சாந்த லிங்கம், செ.ராசு, எஸ்.ராமச்சந்திரன், செ.வை.சண்முகம் உள்ளிட்ட 18 ஆராய்ச்சி அறிஞர்கள் ஆற்றிய சொற் பொழிவுகளின் தொகுப்பு. கேரளம், கர்நாடகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள், தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு கல்வெட்டுகள் என தமிழகத்தைத் தாண்டி தென்னிந்தியாவின் வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இக்கட்டுரைத் தொகுப்பு வழங்குகிறது. கல்வெட்டு ஆராய்ச்சித் துறையின் முன்னோடியான தி.நா.சுப்பிரமணியத்தைப் பற்றிய கைலாசபதியின் அறிமுகக் கட்டுரையும் இத்தொகுப்பின் குறிப்பிட்டத்தக்க அம்சங்களில் ஒன்று.

முருகு

பதிப்பாசிரியர்கள்: சு.இராசவேலு, சுகவன முருகன்

தொல்லியல் கழகம், தஞ்சாவூர்

விலை: ரூ.300 9842647101

- மானா பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x