Last Updated : 02 Jun, 2018 09:22 AM

 

Published : 02 Jun 2018 09:22 AM
Last Updated : 02 Jun 2018 09:22 AM

பத்தாயிரம் புத்தகங்களுடன் ஒரு வாழ்க்கை

பு

த்தகங்களை வாசிப்பதால் வாழ்கிறவர் என்று சொல்லத்தக்க வாழ்க்கை வாழ்பவர் பா.லிங்கம். வேலூர் அருகேயுள்ள புதுவசூரில் இருக்கும் இவரது வீட்டுக்குச் செல்லும் யாரையும், ‘ஏதோவொரு நூலகத்துக்குள் வந்துவிட்டோமோ!’ என்று நினைக்க வைக்கிறது வீடெங்கிலும் நிறைந்திருக்கும் புத்தக அடுக்குகள். மேசையில், நாற்காலியில், பலகை அடுக்குகளில், சன்னலின் கீழே, மாடிப்படிக்கு கீழ்ப் பகுதியில், கட்டிலில் என எந்தப் பக்கம் திரும்பினாலும் வரிசையாக, ஒழுங்கு கலையாமல் அடுக்கப்பட்ட நூல்களே நம்மை வரவேற்கின்றன. பத்தாயிரத்துக்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட உலக-இந்திய-தமிழ் இலக்கிய நூல்களை வைத்திருக்கிறார்.

உலக இலக்கியங்கள் தொடங்கி, உள்ளூர் இலக்கியம் வரை தேடித்தேடி வாசிக்கும் வாசகரான லிங்கம், உலகின் எங்காவது ஒரு மூலையில் நல்ல புத்தகமொன்று வெளியாகியிருக்கிறது என்று தெரிந்த அடுத்த கணமே, அந்த நூலை வாங்கிச் சுடச்சுட வாசித்துவிடுவார். புத்தகக் காதலரான லிங்கத்துக்குக் குடும்பத்தில் உள்ளவர்களை அழைக்க நினைத்தால் சட்டென்று பெயர் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் டானியாவும், அன்னாவும் அவரின் நுனி நாக்கிலேயே இருக்கும் அளவுக்கு மனசுக்கு மிக நெருக்கமான பெயர்களாகிவிட்டன.

“தஸ்தயேவ்ஸ்கியே என் கடவுள். இலக்கியத்தில் இருக்கிற அன்பையும் காதலையும் எங்கே உண்மை யான வாழ்க்கையில் தவறவிடுகிறோம்?” என்ற கேள்வியால் அலையுறும் மனம் லிங்கத்துடையது. ரஷ்ய இலக்கியம் தொடங்கி தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்கள் வரை படித்திருக் கிறார். ஒரே ஒரு நல்ல வரி இருந்தால்கூட போதும்; உடனே எழுதியவரைக் கூப்பிட்டுப் பாராட்டுவது லிங்கத்தின் வழக்கம். நட்புக்காக எல்லோருடனும் அனுசரித்துப் போகும் லிங்கம், இலக்கியத்தில் எந்த சமாதானத்தையும் ஏற்காதவர். அவரின் வாசிப்புக்கு ஏற்றதையே கொண்டாடுவார்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல். படிப்பும் அங்குதான். மூன்று வேளை உணவுக்காக வாழ்நாள் முழுக்கப் போராடும் வாழ்க்கைச் சூழலில் இலக்கியமும் புத்தகங்களும் ஆடம்பரம். கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவுக்கு வாழ்வின் துயரங்கள் நிரம்பிய ஒரு வாழ்விலிருந்து, உலக இலக்கியத்தின் உன்னதங்களை நான் சென்றடைந்ததே அரிய சாதனைதான்” என்று தன் பாதையைத் திரும்பிப்பார்த்துச் சொல்லும் லிங்கம், நவீன இலக்கியத்தைக் கண்டடைந்த பாதை சுவாரசியமானது. வேளாண் துறை அலுவலராக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றிய லிங்கத்துக்கு தென்னகத்தின் நான்கு மாநிலங்களின் நிலப் பரப்பும் மக்களும் பரிச்சயம். சிவராம் கரந்தின் ‘சோமனின் உடுக்கை’ நாவலைத் தன்னால் அந்த நிலப்பரப்புடன் சேர்த்து உள்வாங்கிக்கொள்ள முடியும் என்கிறார்.

இன்றும் மாதத்துக்கு 5,000 ரூபாய் வரை புத்தகங்க ளுக்காகச் செலவிடுகிறார். முக்கியமான நூல்களை, ஆயிரக்கணக்கில் விலையென்றாலும் யோசிப்பதே இல்லை. உடனடியாகப் பணம் கட்டி வர வைத்து, வந்த வேகத்திலேயே வாசித்தும்விடுகிறார். எழுபதுகளில் வாழ்ந்த இலக்கிய ஆளுமைகள் பலருடனும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் லிங்கம். தஞ்சை பிரகாஷ், சேவற்கொடியோன், ஜெயந்தன், க.நா.சு, சி.எம்.முத்து போன்றவர்களுடன் ஏற்பட்ட நட்பு அவரை நவீன இலக்கிய வாசிப்புக்குக் கொண்டுவந்து சேர்த்தது. விமர்சகர் க.நா.சு., தன் மனைவியுடன் இவரது வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப்போனதை இன்னமும் ஈரமாக நினைவுகூர்கிறார்.

விரும்பிய புத்தகங்களைப் பலமுறை படிப்பது வாசகர்களின் இயல்பே. ஆனால், ஒரு நாளின் பல பொழுதுகளில் தேர்ந்தெடுத்த பக்கங்களைப் படித்துக்கொண்டே இருக்கிறார் லிங்கம். காரணம் புத்தகங்கள் என்பவை அவரைப் பொறுத்தவரை வாசித்தவுடன் கடந்துபோகக் கூடியவை அல்ல. ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் எழுத்தாளனின் ஆன்மாவைக் கண்டடையும் முயற்சியாக நினைத்தே வாசிக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு வரியையும் நூறு முறைகளுக்கு மேலாவது படித்திருப்பார். பேச்சினூடே, வரிகள் மாறாமல் கதாபாத்திரங்களின் உரையாடலை அப்படியே சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.

“என் வாழ்நாளில் இரண்டு புத்தகங்களை மட்டும் வைத்துக்கொள்ளச் சொன்னால், கரம்சோவ் சகோதரர்களையும் சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை யும் மட்டுமே வைத்துக்கொள்வேன்” என்று சொல்லும் லிங்கத்துக்கு 2018-ல் உலகப் புத்தகத் தினத்தையொட்டி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில், ‘சிறந்த புத்தகர்’ விருது வழங்கப்பட்டது. தனது 69-ஆவது வயதிலும் வாழ்வதற்கான உத்வேகத்தை இலக்கியமே கொண்டுவந்து சேர்க்கிறது என்று சொல்லும் லிங்கம் போன்ற புத்தகக் காதலர் கள் இருப்பதுதான் எழுத்துக்கும் எழுத்தாளர் களுக்கும் பெருமை சேர்க்கிற விஷயமாக இன்றைக் கும் உள்ளது.

- மு.முருகேஷ்,

தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x