Published : 02 Jun 2018 09:21 AM
Last Updated : 02 Jun 2018 09:21 AM

தொடு கறி: ஒரு நாயகி உதயமாகிறார்!

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கிவிட்ட மதுரையைச் சேர்ந்த கலைமதியின் கதைகள், இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில், ‘மொட்டைமாடியில் முசோலினி’ எனும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அவர் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் புத்தகங்களும், பள்ளி ஆசிரியர் சொன்ன கதைகளும், இலக்கியக் கூட்டத்துக்கு உடன் அழைத்துச்செல்லும் அப்பாவும் ஒரு படைப்பாளியாக உருவாவதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் இளம் எழுத்தாளரே!

தமிழ்நாட்டுக்கு மார்க்ஸ் வந்தார்...

தாமரை இலக்கிய இதழின் ஆசிரியர் சி.மகேந்திரன், கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்தநாளையொட்டி, ‘தமிழ்நாட்டுக்கு மார்க்ஸ் வந்தார்’ என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட இருக்கிறார். தமிழ்க் கலாச்சாரச் சூழலில் கார்ல் மார்க்ஸின் தாக்கத்தை வரலாற்றுரீதியில் பதிவுசெய்யும் முயற்சி இது என்கிறார். மேலும், தனது தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் வட சென்னையைக் களமாகக் கொண்டு நாவல் ஒன்றையும் எழுதத் தொடங்கியிருக்கிறார். கூடவே, தமிழக நதிகளின் வரலாற்றைப் பற்றி ஏற்கெனவே அவர் எழுதிய ‘ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்’ நூலை விரிவுபடுத்தியும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

கண்ணதாசனும் கவிதைகளும்!

கவிஞர் பழநிபாரதி ‘க. வீட்டிற்குப் போயிருந்தேன்’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை நூல் எழுதிக்கொண்டிருக்கிறார். தலைப்பில் குறிப்பிடும் ‘க’ என்பது கண்ணதாசன். ஆம், கண்ணதாசனைப் பற்றிய கவிதைகள் ததும்பும் நூலாக இப்புத்தகம் இருக்கும். ‘இந்து தமிழ்’ வாசகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு கவிதை:

‘கண்ணதாசன் வீட்டில்

அவர் மட்டும்தான் இருந்தார்

அவருக்குள்

யார் யாரோ இருந்தார்கள்!’

சினிமா பயில்பவர்களுக்கு ஒரு விருந்து!

மிழின் முதல் க்ரவுட்-ஃபண்ட் படமும், கடைசி கருப்பு வெள்ளைப் படமுமான ‘குடிசை’ படத்தின் பெயரால் அறியப்படும் ஜெயபாரதி, சுயமாகவே திரைப்படத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர். தனது திரையுலக அனுபவங்களைக் கொண்டு திரைப்படத் தொழில்நுட்பங்களைக் குறித்த நூல் ஒன்றை ‘சினிமாக்காரர்கள்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். ஜூன் 10-ம் தேதி தியாகராய நகர் பாரத் கலாச்சார் மையத்தில் நல்லி குப்புசாமி செட்டியால் வெளியிடப்படவிருக்கிறது. “திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கத் தகுந்தது” என்று இந்நூல் குறித்துக் கூறுகிறார் வண்ணநிலவன்.

தொகுப்பு: மானா, முமு, அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x