Last Updated : 06 Apr, 2018 09:00 AM

 

Published : 06 Apr 2018 09:00 AM
Last Updated : 06 Apr 2018 09:00 AM

பார்த்திபன் கனவு 25: தந்தையும் மகளும்!

“எ

தற்காகப் பரிதாபப்படுகிறாய், அம்மா. ராஜத் துரோகம் ஜெயிக்கவில்லையே என்று பரிதாபப்படுகிறாயா?’’

‘‘இல்லை இல்லை. இந்த ராஜகுமாரன் இப்படி ஏமாந்து போய்விட்டானே என்றுதான். ஆமாம் அப்பா! இந்த மாதிரி நடக்கப்போகிறது என்று உங்களுக்கு முன்னாலேயே தெரிந்திருக்கிறதே, அது எப்படி?’’

‘‘என்னிடந்தான் மந்திர சக்தி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமே? ஆமாம், அப்பர் பெருமானின் பதிகம் பாடப் போகிறாயா? இல்லையா?’’ என்று மீண்டும் சக்கரவர்த்தி கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றார்.

‘‘அப்பா எனக்கு ஒன்று தோன்றுகிறது.

இந்தத் தடவை மட்டும் அந்த ராஜகுமாரனை நீங்கள் மன்னித்து விட்டால்...’’

‘‘என்ன சொன்னாய் குந்தவி? பெண்புத்தி என்பது கடைசியில் சரியாய்ப் போய்விட்டதே. அன்றைக்கு அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றாயே. அதனால்தான் பெண்களுக்கு ராஜ்ய உரிமை கிடையாது என்று பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள்...’’

‘‘சுத்தப் பிசகு! பெண்களுக்கு ராஜ்ய உரிமை இருந்தால் உலகத்தில் சண்டையே இராது. அந்த ராஜகுமாரனை மட்டும் நான் சந்தித்துப் பேசினேனானால், அவனுடைய மனத்தை மாற்றிவிடுவேன். முடியுமா, முடியாதா என்று பார்க்கலாமா, அப்பா?"

‘‘முடியலாம்... குழந்தாய் முடியலாம். அவனுடைய மனத்தை மாற்றுவது உன்னால் முடியாத காரியம் என்று நான் சொல்லவில்லை. உனக்கு முன்னால் எத்தனையோ ஸ்திரீகள் புத்திசாலிகளை அசடுகளாக்கி இருக்கிறார்கள். வைராக்கிய சீலர்களைப் பைத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரர்களைக் கோழைகளாக்கி இருக்கிறார்கள். இதற்கு மாறாக சாதாரண மனுஷ்யர்களைப் புத்திசாலிகளாகவும், வைராக்கிய புருஷர்களாகவும், வீரர்களாகவும் செய்த ஸ்திரீகளும் இருந்திருக்கிறார்கள். பெண் குலத்துக்கு இந்தச் சக்தி உண்டு. உண்மைதான்; நீ நினைத்தாயானால், விக்கிரமனைச் சுதந்திரம் என்ற பேச்சையே மறந்துவிடும்படி செய்து விடலாம். ஆனால், உன்னுடைய சாமர்த்தியத்தை நீ கொஞ்சம் முன்னாலேயே காட்டியிருக்க வேண்டும். அவன் குற்றம் செய்வதற்கு முன் உன் பிரயத்தனத்தைச் செய்திருக்க வேண்டும். இனிமேல் பிரயோஜனமில்லை அம்மா! குற்றவாளியைத் தண்டித்தே தீரவேண்டும். இன்று விக்கிரமனைச் சும்மா விட்டுவிட்டால் நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் கலகம் செய்யக் கிளம்புவான். அப்புறம் ராஜ்யம் போகிற வழி என்ன?’’

இந்த வார்த்தைப் புயலில் அகப்பட்ட குந்தவி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள். சற்று நேரம் பொறுத்து, ‘‘அப்பா! அவனுக்கு என்ன தண்டனை விதிப்பீர்கள்?’’ என்று கேட்டாள்.

‘‘இப்போது சொல்ல முடியாது குந்தவி! நாளைக்கு தர்மாசனத்தில் உட்கார்ந்து விசாரணை செய்யும்போது என்ன தண்டனை நியாயமென்று தோன்றுகிறதோ, அதைத்தான் அளிப்பேன்.

நியாயத்தில் இருந்து ஓர் அணுவளவேனும் தவறினார்கள் என்ற அவச்சொல் இதுவரையில் பல்லவ வம்சத்துக்கு ஏற்பட்டதில்லை, இனிமேலும் ஏற்படாது’’ என்றார் சக்கரவர்த்தி.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x