Published : 03 Mar 2018 10:12 AM
Last Updated : 03 Mar 2018 10:12 AM

தொடுகறி: அம்மா வழியில் மகள்...

அம்மா வழியில் மகள்...

பொதுவுடமை இயக்கத் தலைவரும், மாதர் இயக்கத்தின் முன்னோடியுமான மைதிலி சிவராமனைப் பற்றி அவரது மகள் கல்பனா எழுதியிருக்கும் நூல் ‘காம்ரேட் அம்மா.’

கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் நோயால் நினைவுகளை இழந்துவரும் மைதிலியின் கையில், ‘காம்ரேட் அம்மா’ நூலைக் கொடுத்ததும், ஏதேதோ நினைவுகளோடு நூலைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன், தனது பாட்டியின் பன்முக ஆளுமை பற்றி ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’ எனும் நூலை மைதிலி சிவராமன் எழுதியுள்ளார். அவரது மகளும் தனது தாயைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார் என்பது தனிச்சிறப்பு!

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது

வாழும் காலத்தில் எழுத்தாளர்களைக் கௌரவித்துக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பைந்தமிழ் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார் வைகோ. கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் என்றெல்லாம் தனது உரைகளில் மேற்கோள் காட்டுபவர் அவர். தமிழ் இலக்கியத்தின் மீதான அவரது புலமை அப்போது வெளிப்படும். எழுத்தாளர்கள் மீதும் அவருக்குப் பெரும் மதிப்பு உண்டு. இந்த அமைப்பு ஆண்டுதோறும் ஒரு எழுத்தாளரைத் தேர்வுசெய்து பொற்கிழியோடு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது. இயற்றமிழ் வித்தகர் விருதினைப் பெறும் முதல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். விருது வழங்கும் விழா மார்ச் 16 வெள்ளிக்கிழமை மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் வைகோவின் சிறப்புரையும் உண்டு.

ஆறு மணி நேரம் நடந்த புத்தக விழா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழா, வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவாக மட்டும் அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக நடந்தேறியிருக்கிறது. பிப்ரவரி 26 அன்று மாலை தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடந்த விழாவில் இறுதிவரை கூட்டம் கலையவில்லை. ‘தாய்மண்’ இதழில் திருமாவளவன் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ‘நக்கீரன் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கிறது. விழாவுக்குத் தலைமை வகித்தவர் முதுபெரும் அரசியல் தலைவர் ஆர். நல்லகண்ணு. மாலை 5 மணிக்கெல்லாம் விழா அரங்குக்கு வந்துவிட்டவர் நிகழ்ச்சி முடியும் வரை அரங்கில் இருந்தார். புத்தகத்தை இரண்டாவது முறையாக வாசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்ன அவர், “பாடப் புத்தகமாக வைக்கத்தக்க புத்தகம் இது!” என பாராட்டியிருக்கிறார். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு அரசியல் அமைப்பில் பணியாற்ற எப்படியான ஒழுங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதை இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார் திருமாவளவன்.

சென்னையில் ‘விளக்கு’ விருது விழா

மெரிக்காவில் செயல்பட்டுவரும் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் பெயரில் தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துவருகிறது. 2018- க்கான புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளர் ராஜ் கௌதமன், கவிஞர் சமயவேல் இருவரும் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வருகிற மார்ச் 10, சனிக்கிழமை அன்று சென்னை ‘மெட்ரோபோல் ஹோட்ட’லில் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

தொகுப்பு: மு.மு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x