Published : 06 Jan 2018 12:36 PM
Last Updated : 06 Jan 2018 12:36 PM

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விருதுகள் 2018

                 ரூ 10 லட்சம் விருது... 6 ஆளுமைகள் கௌரவிப்பு

நாட்டின் புகழ்மிக்க இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கிலத்தைத் தாண்டி தமிழிலும் அடியெடுத்துவைக்கிறது! தமிழகத்தின் தலைநகரை இனி ஆண்டுதோறும் குதூகலப்படுத்தவிருக்கும் இந்தத் தமிழ் இலக்கிய உற்சவத்தின் ஒரு பகுதியாக தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டாடும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்-தமிழ்’ விருதுகள் வழங்கப்பட உள்ளன. சமகாலத் தமிழைத் தன்னுடைய எழுத்துகளால் அலங்கரிக்கும் ஆறு ஆளுமைகளுக்கு வழங்கப்படவுள்ள இந்த விருதுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் மூத்த படைப்பாளிகளின் பெயர்களில் வழங்குவதில் பெருமை அடைகிறோம். ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ரூ.5 லட்சம் பணமுடிப்புத் தொகையையும், விருதுப் பட்டயத்தையும் சான்றிதழையும் உள்ளடக்கியது. இந்த விருது மட்டும் ஜனவரி 14, 15, 16-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கில நிகழ்வில் வழங்கப்படுகிறது. ஏனைய ஐந்து விருதுகளும் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்புத் தொகையையும், விருதுப் பட்டயத்தையும், சான்றிதழையும் உள்ளடக்கியவையாகும். சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி, ‘சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் அரங்’கில் நாளை (ஜன.7) காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6.15 மணி வரை நடைபெறவுள்ள ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கியத் திருவிழாவில் இந்த 5விருதுகளும் அளிக்கப்படவுள்ளன.

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’

வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திரா பார்த்தசாரதி

இ.பா. என்று வாசகர்களால் அழைக்கப்படும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் இயற்பெயர் ரெங்கநாதன் பார்த்தசாரதி. சென்னையில் பிறந்த இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் வளர்ந்தார். அவருக்குத் தற்போது வயது 87. நாவல்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் என்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். அவரது இலக்கியச் செயல்பாட்டுக்குச் சற்றும் குறையாதது அவரது நாடகச் செயல்பாடு. தனது ‘ராமானுஜர்’ நாடகத்துக்காக ‘சரஸ்வதி சம்மான்’ விருதை இந்திரா பார்த்தசாரதி பெற்றார். சாகித்ய அகாடமி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகிய மூன்று விருதையும் அநேகமாக இந்திரா பார்த்தசாரதி மட்டுமே பெற்றிருக்கிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் அரசியல் சார்ந்து அதிகமாகப் புனைவுகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர். இவரது நாவல்களிலும் கதைகளிலும் நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சினைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. டெல்லி பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர் இந்திரா பார்த்தசாரதி. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் இந்தியத் தத்துவத்தையும் பண்பாட்டையும் கற்பித்திருக்கிறார். கீழ வெண்மணி படுகொலையைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் ‘குருதிப்புனல்’. இ.பா. எழுதிய ‘உச்சி வெயில்’ எனும் குறுநாவல் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் 1990-ல் திரைப்படமானது. இதை இயக்கியவர் சேது மாதவன். தமிழில் இந்தத் திரைப்படத்துக்குத்தான் முதன்முதலில் குடியரசுத் தலைவரின் ‘தங்கத் தாமரை’ விருது வழங்கப்பட்டது. இலக்கியம், நாடகம் என்று இரு துறைகளிலும் பெரும் பங்காற்றியிருக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கு ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழா சார்பாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் நூல்களுள் சில: குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, ஏசுவின் தோழர்கள், சுதந்திர பூமி, தந்திர பூமி, வேர்ப்பற்று, வெந்து தணிந்த காடுகள், உச்சி வெயில்; இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்.

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள்: ராமானுஜர், ஔரங்கசீப், மழை, நந்தன் கதை, போர்வை போர்த்திய உடல்கள்.

இதுவரை பெற்ற விருதுகளுள் சில: சாகித்ய அகாடமி விருது, சரஸ்வதி சம்மான் விருது, பாரதீய பாஷா பரிஷத் விருது, பத்மஸ்ரீ விருது.

 

சமகால இலக்கியச் சாதனைக்கான ஜெயகாந்தன் விருது: இமையம்

தமிழ்நாட்டின் ஊர்ப்புறத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தைத் தனது படைப்புகளின் வழியாகக் கடந்த 24 ஆண்டுகளாக முன்வைத்துவருபவர் இமையம். 1994-ல் வெளியான ‘கோவேறு கழுதைகள்’ நாவல் இலக்கிய உலகில் இமையத்தின் வரவை அறிவித்தது. இமையத்தின் இன்று வரையிலான படைப்புலகம் ஐந்து நாவல்கள், ஒரு நெடுங்கதை, ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சாதி ஆணவக் கொலையைப் பற்றிய இவரது ‘பெத்தவன்’ நெடுங்கதை குறுநூலாக வெளியிடப்பட்டு இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகிச் சாதனை படைத்தது. ‘பெத்தவன்’ கதையும் ‘எங் கதெ’ நாவலும் விரிந்த வாசகப் பரப்பை இமையத்துக்குப் பெற்றுத்தந்தன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திராவிடச் சித்தாந்தம், அம்பேத்கரியம், மார்க்ஸியம் போன்ற சிந்தனை மரபுகளால் மிகுந்த தாக்கம் பெற்றவர். 53 வயதாகும் இமையம் விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அதன் ஈரத்துடனும் வலியுடனும் எழுதிவரும் இமையத்துக்கு ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழா சார்பாகச் சமகால இலக்கியச் சாதனையாளருக்கான ‘ஜெயகாந்தன் விருது’ வழங்கப்படுகிறது.

இமையத்தின் நூல்கள்: கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் (நாவல்கள்); மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுசோறு, நறுமணம் (சிறுகதைத் தொகுப்புகள்), பெத்தவன் (நெடுங்கதை)

அபுனைவு எழுத்துக்கான ஏ.கே. செட்டியார் விருது: ராமாநுஜம்

நாடகத் துறை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவரும் ராமாநுஜம் தற்காலத் தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர். சென்னையில் இடதுசாரிக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ராமாநுஜம் கம்யூனிஸம், காந்தியம் உள்ளிட்ட சிந்தனைப் போக்குகளிடையிலான ஒரு உரையாடலைத் தொடர்ந்து தன் கட்டுரைகளில் மேற்கொண்டுவருபவர். சாதத் ஹசன் மண்ட்டோ, டி.ஆர்.நாகராஜ், அர்துரோ வாகனோ என்று முக்கியமான ஆளுமைகளை மொழிபெயர்ப்பின் வழி தமிழுக்குக் கொண்டுவந்த ராமாநுஜத்தின் மிக முக்கியமான பங்களிப்பு சாதியத்தின் வேர்களை அணுக முற்படும் அவருடைய ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூல். ‘சென்னைக் கலைக்குழு’, ‘பல்கலை அரங்கம்’, ‘ஐக்கியா’, ‘பரீக்ஷா’ ஆகிய நாடகக் குழுக்களில் பங்காற்றிய ராமானுஜம் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய நாடகக் குழு‘ஆடுகளம்’. அபுனைவுப் பிரிவுக்காக ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவின் சார்பாக ராமாநுஜத்துக்கு ‘ஏ.கே.செட்டியார் விருது’ வழங்கப்படுகிறது.

ராமாநுஜத்தின் நூல்கள்: காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும் (கட்டுரைத் தொகுப்புகள்);

மண்ட்டோ படைப்புகள், ‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள் - சாதத் ஹசன் மண்ட்டோ, மெளனவதம் - அர்துரோ வாகனோ, தீப்பற்றிய பாதங்கள் - டி.ஆர்.நாகராஜ் (மொழிபெயர்ப்புகள்); ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் (இயக்கி, நடித்த நாடகங்கள்)

பெண் படைப்புக் குரலுக்கான பாரதி விருது!- தமயந்தி

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புவெளியில் தீவிரமாக இயங்குபவர் தமயந்தி. சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரை ஆகிய வகைமைகளில் இதுவரை 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் சிக்கி பலியாகும் பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கைதான் தமயந்தி படைப்புகளின் பிரதான பேசுபொருள். துயரங்களுக்கு இடையிலும் அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன அழகுகளை ரசிப்பவர்களாக தமயந்தியின் பெரும்பாலான பாத்திரங்கள் இருக்கிறார்கள். விளிம்புநிலை மனிதர்கள் மீதான, சுற்றுச்சூழல் மீதான கரிசனமும் தமயந்தி படைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எழுத்து மட்டுமல்லாமல் வானொலி அறிவிப்பாளர், தொலைக்காட்சி ஆவணப் பட இயக்குநர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர் என்று சமூகத்துடன் ஏதாவது ஒரு வகையில் ஊடாடிக்கொண்டிருப்பவர் தமயந்தி. திருநெல்வேலியில் பிறந்த தமயந்தி தற்போது வசிப்பது சென்னையில். வலியில் உழலும் பெண்களின் அசலான படைப்புக் குரலாக வெளிப்படும் தமயந்தி ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவின் ‘பாரதி விருது’ பெறுகிறார்.

தமயந்தியின் நூல்கள்: தமயந்தியின் சிறுகதைகள், அக்கக்கா குருவிகள், சாம்பல் கிண்ணம், முற்பகல் ராஜ்ஜியம், வாக்குமூலம், வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும், கொன்றோம் அரசியை (சிறுகதைகள்); நிழலிரவு (நாவல்), தங்களில் படரும் கடல் (கவிதை), இந்த நதி நனைவதற்கல்ல (கட்டுரைத் தொகுப்பு)

 

விளிம்பின் உரத்த குரலுக்கான இன்குலாப் விருது: கீரனூர் ஜாகிர்ராஜா

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புவெளியில் தீவிரமாக இயங்குபவர் கீரனூர் ஜாகிர்ராஜா. வாழ்வாதாரத்துக்கு எழுத்தை முன்வைத்து இயங்க முடியாத சூழல் நிலவும் தமிழ்ச் சமூகத்தில், முழுநேர எழுத்தாளராக வாழும் சிலருள் ஒருவர். பொதுச் சமூகத்துக்கும் இலக்கிய வெளிக்கும் அதிகம் பரிச்சயப்படாத இஸ்லாமிய விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைத் தன் படைப்புகளின் வழியே தொடர்ந்து முன்வைத்துவருபவர். தான் சார்ந்த சமூகத்தின் கொண்டாட்டங்கள், வேதனைகள், பிரச்சினைகள் இவற்றோடு அச்சமூகத்தின் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கும் அரிய படைப்பாளிகளில் ஒருவர். பழனிக்கு அருகில் உள்ள கீரனூரில் பிறந்த இவர் தற்போது தஞ்சாவூரில் வசிக்கிறார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள், தொகை நூல்கள், சிறார் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என்று 20-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுவந்திருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கு ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவின் ‘இன்குலாப் விருது’ வழங்கப்படுகிறது.

கீரனூர் ஜாகிர்ராஜாவின் நூல்கள்:மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி, வடக்கேமுறி அலிமா, மீன்குகைவாசிகள், ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் (நாவல்கள்), செம்பருத்தி பூத்த வீடு, பெருநகரக் குறிப்புகள், தேய்பிறை இரவுகளின் கதைகள், கொமறு காரியம் (சிறுகதைத் தொகுப்புகள்), குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை, சுயவிமர்சனம் (கட்டுரைத் தொகுப்புகள்), சேவலும் காகமும், நித்தியாவும் ஜிம்மியும் (சிறார் நூல்கள்)

இளம் படைப்பாளிக்கானபிரமிள் விருது: சயந்தன்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1980-ல் பிறந்த சயந்தனின் இயற்பெயர் சயெந்திரன் கதிர். 37 வயதாகும் சயந்தன் இந்தியா, ஆஸ்திரேலியா என வாழிடங்களைக் கடந்து, தற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார். சுற்றுலாத் துறையில் பணியாற்றுகிறார். இதுவரை இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். இவரது ‘ஆறா வடு’, ‘ஆதிரை’ ஆகிய இரண்டு நாவல்களுமே படிப்பவர்களை உலுக்குபவை. நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. ஈழப் போராட்டத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் வரலாற்று நூல்களைப் போலவே சயந்தனின் நாவல்களும் வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன. மூன்று தலைமுறை ஈழத் தமிழர்களின் சரித்திரத்தையும் சயந்தன் தன் படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறார். ஈழத் தமிழ் இலக்கியத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும் காத்திரமான படைப்புக் குரல்களில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய இளைஞராக சயந்தன் இருக்கிறார். அடுத்ததாக, ‘கலையாடி’ என்ற இவரது நாவல் வெளியாகவிருக்கிறது. ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவின் சார்பாக இளம் படைப்பாளருக்கான ‘பிரமிள் விருது’ சயந்தனுக்கு வழங்கப்படுகிறது.

சயந்தனின் நூல்கள்:ஆறா வடு, ஆதிரை, கலையாடி (நாவல்கள்); பெயரற்றது (சிறுகதைத் தொகுப்பு).

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x