Published : 23 Dec 2017 09:08 AM
Last Updated : 23 Dec 2017 09:08 AM

இன்குலாப் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்!

றைந்த கவிஞர் இன்குலாபின் ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலுக்கு 21-12- 2017 அன்று சாகித்ய அகாடமி விருது டெல்லியிலிருந்து அறிவிக்கப்பட்டது. ‘விருது மறுப்பு’ என அறிவித்து, மாலையில் அதற்கான அறிக்கையையும் அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு அளித்துள்ளனர். இந்தச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு பல விஷயங்களைப் பற்றியும் பேசலாம்.

“அப்பா அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எந்தவொரு வடிவத்திலும் எங்கும் எதிர்த்துவந்தவர். குடும்பத்தில் அவரவர் விருப்பத்துக்கு மாறாக ஏதும் நடந்ததில்லை – அடுத்தவரின் விடுதலையைப் பறிக்காதவரை… ஒரு வீட்டில் ஒருவர் இஸ்லாமியராகவோ பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ இந்துவாகவோ அல்லது கடவுள் மறுப்பாளராகவோ இருப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது” என இன்குலாப்பின் மகள் ஆமினா பர்வின் ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார். எந்தவொரு அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எந்தவொரு வடிவத்திலும் எதிர்த்துவந்த இன்குலாப், குடும்ப அதிகார எதிர்ப்பை முதற்புள்ளியாகக் கருதினார். அதிகார எதிர்ப்பு என்பது அவரைப் பொறுத்தவரை – ஜனநாயகம் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுச் செழிக்க வேண்டும் என்பதற்காகவே.

வைரமுத்துவிடம் இன்குலாப் விருது பெற்றது என் போன்றோருக்கு ஒப்புதலில்லை. “இந்த விருது வழங்கலில் உங்களுக்கான அங்கீகாரம் என்பது முதன்மையல்ல; உங்களை முன்னிறுத்தி, தனக்கு ஒரு அங்கீகாரமாக ஆக்குதல் நோக்கம்: அந்த ஆபத்து இதில் அடங்கியுள்ளது” என எடுத்துரைத்தேன். விருது பெற்றுக்கொண்டமைக்கான விளக்கத்தை ஒரு நேர்காணலில் அவர் இப்படிக் கூறியிருப்பார்: “விருதுகள் ஒரு படைப்பாளியைக் கூடுதலாக அறியச் செய்வதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் உதவுகின்றன. என் இலக்கிய முயற்சிகளை இடதுசாரிகள்கூட மறந்த, புறக்கணித்த ஒரு காலம் இருந்தது. இப்போதும் அது முழுமையாக மாறிவிட்டது என்று சொல்ல மாட்டேன். புறக்கணிப்பின் வன்மத்தை மறக்க விரும்புகிறேன். அந்தச் சூழலில் என்னை வேண்டிக் கேட்டுக்கொண்ட விருதை எப்படி மறுப்பேன் நான்? சிந்தித்துப் பார்த்தால் விருது வழங்கும் எந்த நிறுவனமும் செல்வாக்கு வட்டம் கடந்ததாய் இல்லை. சாகித்ய அகாடமி, ஞானபீடம் இவற்றின் பீடங்கள் கேள்விக்கப்பாற்பட்டதாகிவிடுமோ? இன்று விருதுகள் குறித்து எனக்கு மயக்கம் இல்லை.”

இங்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். உண்மைதான்: சாகித்ய அகாடமி விருது இலக்கிய அரசியலில் இருக்கிறது; ஞானபீட விருது அளிக்கிற மனசு வட இந்தியாவில் இருக்கிறது; நோபல் விருது வழங்கும் மனம் மேலைநாட்டில் இருக்கிறது. “இன்று விருதுகள் குறித்து எனக்கு மயக்கம் இல்லை” என்ற அவரின் தெளிவிலிருந்து, சாகித்ய அகாடமி மறுப்பை இன்குலாபின் குடும்பத்தினர் வந்தடைந்திருக்கிறார்கள்.

சாகித்ய அகாடமி அமைப்பு தன்னாட்சியானது, சுயமானது என்கிறார்கள் சிலர். அரசு நிதிநல்கையில் இயங்கும் எந்த ஒரு அமைப்பும் சுயாட்சி நிறுவனமாக எவ்வாறு இயங்க இயலும்? ஜனநாயக உணர்வுடன், நேர்மையான குறிக்கோளுடன் இயங்கும் சிலர் தலைமையால், செயல்பாடுகளால் அதற்கு ஜனநாயக வடிவம் கிடைக்குமே தவிர, எந்த ஒரு அரசு நிறுவனமோ, அரசுசார் நிறுவனமோ தானே தன்னாட்சியுடன் இயங்க முடியாது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், புனேயில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். 2015 பிப்ரவரியில் மராட்டிய மாநிலத்தில் பன்சாரே என்ற மக்கள் அறிஞரைக் கொலைசெய்தனர். அவர்களோடு முற்றுப் பெறாத கொலைக்களக் காதை, எழுத்தாளர் கல்புர்கியின் உயிரைப் பறித்ததோடு அல்லாமல், கௌரி லங்கேஷ் வரை தொடர்கிறது. இந்த எழுத்தாளர்கள், அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி சாகித்ய அகாடமி ஆற்றிய எதிர்ப்பு எத்தகையதாக இருந்தது என்பது அந்த அமைப்பின் சுயத்தன்மைக்குச் சான்றாகும். இன்குலாப் குடும்பத்தினரும் இதை ஒரு பொதுப் பாடமாக்கி, “அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும் இனவாதமும் வர்க்கபேதமும் வன்முறையும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலைசெய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துகளுக்கும் துரோகம் இழைப்பதாகும்” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எல்லா அதிகாரங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது இன்குலாபின் கவிதை. அவர் கவிதையால் நினைக்கப்படுவார், எழுதிய எழுத்தால் நினைக்கப்படுவார். எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார். எல்லோராலும் நினைக்கப்படும் வாழ்வினும் மேலானது உண்டோ? நினைக்கப்படும் தகுதி அறுந்துபோய்விடக் கூடாது என்பதற்காகவே குடும்பத்தினர் இந்த விருதை மறுத்துள்ளனர்.

“ரொம்ப அடிப்படையானது, நாம் யாரோடு மனதால் ஒன்றுபடுகிறோம் என்பதுதான். அதைத் தடை செய்வதற்கு வழிவழியாக வந்த பண்பாட்டின் அதிகாரம் இருக்கிறது. மதத்தின் அதிகாரம் இருக்கிறது.

சாதியின் அதிகாரம் இருக்கிறது. அரசியல் அதிகாரம் இருக்கிறது. இவ்வளவுக்கும் அப்பால் நான் யார்? யாரோடு நிற்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பும்போது, ஒரு நியாயம் எனக்குத் தெரியவருகிறது. அந்த நியாயங்களுக்கு இந்த அதிகாரங்களெல்லாம் தடையாக இருந்தால் அந்த அதிகாரத்தை உடைத்துவிட்டு, தாண்டிப் போய் அவர்களுடன் நிற்க வேண்டும்” என்றார் இன்குலாப்.

இந்த அதிகாரத்துக்கு எதிராகத்தான் பிரான்ஸின் ழீன் பால் சார்த்தர் இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட நோபல் விருதை நிராகரித்தார் (1964). சார்த்தரின் வழியில்தான் இன்குலாப் பயணம் செய்தார், இப்போது அவரது குடும்பத்தினர் அவரது பயணத்தைத் தொடர்கிறார்கள். 2006-ல், தமிழக அரசின் கலைமாமணி விருதை அவர் பெற்றுக்கொண்டது பற்றிக் கேள்வியெழுந்தது.

அவ்வாறு செய்வது ஒரு சமரசம் என விமர்சிக்கப்பட்டது. ஈழத் தமிழா் படுகொலையைக் கண்டுகொள்ளாத அன்றைய தமிழக அரசைக் கண்டித்துக் கலைமாமணி விருதையும் தங்கப் பதக்கத்தையும் திருப்பி அனுப்பித் தன்னைக் கௌரவப்படுத்திக்கொண்டார்.

விருதுகள் பற்றி இன்குலாப் கூறிய கருத்தை அவரின் குடும்பத்தினர் தம் அறிக்கையில் இப்படிச் சுட்டிக்காட்டியுள்ளனர். “எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால், எதிர்ப்பும் கண்டனமும் தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்… அவ்வப்போது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.”

மேலும், “இன்குலாபுக்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டிப் பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு. அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்” என்று மக்களின் பரப்பை நோக்கி நடந்துள்ளார்கள் குடும்பத்தினர்.

- பா.செயப்பிரகாசம்,

மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: jpirakasam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x