Last Updated : 15 Dec, 2017 11:30 AM

 

Published : 15 Dec 2017 11:30 AM
Last Updated : 15 Dec 2017 11:30 AM

பார்த்திபன் கனவு: இரண்டாம் பாகம்- உறையூர்த் தூதன்!

“ஆ

மாம்; தாத்தாவுக்கு உங்கள் பேரில் இருந்த ஆசையில் நூறில் ஒரு பங்குகூட உங்களுக்கு என் அண்ணா மேல் கிடையாது. இருந்தால் அண்ணாவைக் கப்பல் ஏற்றிச் சிங்களத்துக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டாள் குந்தவி.

“குழந்தாய், கேள்! என்னுடைய இளம் வயதில் எனக்கு எத்தனையோ மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின, ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தூர தேசங்களுக்கெல்லாம் போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன். அதற்கு என் தந்தை அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது. எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே- என்றுதான் உன் தமையனைச் சிங்கள தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி அனுப்புவேன்” என்றார் சக்கரவர்த்தி.

“அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை போலிருக்கிறது” என்று குந்தவி சொல்வதற்குள்ளே, “உன்னைக் கப்பல் ஏற்றி அனுப்ப எனக்குப் பூர்ண சம்மதம்! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்துவிட்டாயே, என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன் பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? - என்று எனக்குத் தோன்றுவதுண்டு” என்றார் சக்கரவர்த்தி.

 

 

 

 

“நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்ஸன் செய்ததைப் போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும் கப்பலேறிப் போய்விட்டான்” என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக் கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி “வா! குழந்தாய்! இன் னொரு தடவை சாவகாசமாய்ப் பார்க்கலாம், ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்றதும் குந்தவி அவரண்டை வந்து “அப்பா! இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள் ஆரம்பிக்க போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்குமல்லவா? இந்தக் கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள். சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி பின்வருமாறு சொன்னார்:

“இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான் பூர்த்திபெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார். அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான் இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச் செய்து முடிக்கக்கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை!”

- மீண்டும் கனவு விரியும்...

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x