Last Updated : 10 Dec, 2017 09:31 AM

 

Published : 10 Dec 2017 09:31 AM
Last Updated : 10 Dec 2017 09:31 AM

எம்எஸ் அச்சுக் கலையின் அழகியலாளர்!

ண்பர்களால் எம்எஸ் என்று அன்பு பாராட்டப்பட்ட எம்.சிவசுப்பிரமணியன் 88-வது வயதில் டிசம்பர் 3, 2017 அன்று மறைந்தார் (பிறப்பு 1929). ஆனால் என்னுடைய துக்கம் அவர் உயிர் பிரிந்த அன்று ஏற்படவில்லை. அலுவலகத்துக்கு அவர் வர முடியவில்லை என்றானதும், கடந்த மாதம் அ.கா.பெருமாளும் நானும் அவரைப் பார்க்க திருப்பதிசாரம் வீட்டுக்குச் சென்றோம். அவரது நண்பர்கள், தமக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்க அவரை எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சகாக்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரை எம்எஸ் இனி சந்திக்க முடியாது என்பதை உணர்ந்தபோதே அந்தத் துக்கம் ஏற்பட்டது. “வாசிக்க முடியவில்லை” என்றார். “மெய்ப்பு பார்க்க முடியும்” என்று அவர் சொன்னது அவரது ஆவலைத்தான் வெளிப்படுத்தியது. இவை இல்லாமல் எம்எஸ்ஸுடைய வாழ்க்கை பொருள் பொதிந்து மிளிராது. நான் சந்தித்துவிட்டு வந்த சில நாட்களில் அவர் ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து அம்மாவைச் சந்தித்துக் கிட்டத்தட்ட இறுதியாக விடைபெற்றுக்கொண்டார். (புது மணப்பெண்ணாக அம்மாவைப் பார்த்தவர்!)

எம்எஸ்ஸை ஒரு தாயைப் போலக் கவனித்துவந்த மருத்துவர் எல்.மகாதேவனுடனும் அவரது உதவியாளர்களுடனும் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தேன். எம்எஸ் மருந்துகள் உண்பதைத் தவிர்ப்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விரும்பாததும் தெரிந்தது. சில நெருக்கடிகளால் பல ஆண்டுகள் நாகர்கோவிலில் வாடகை வீடுகளில் வசித்துவிட்டுக் கடந்த ஆண்டுதான் தனது சொந்த திருப்பதிசாரம் வீட்டுக்குத் திரும்பியிருந்தார் எம்எஸ். முன்னோர் வாழ்ந்த தனது வீட்டில்தான் உயிர் பிரிய வேண்டும் என்பதில் அவருக்கு நிர்ப்பந்தம் இருந்தது. புற உலக வாழ்க்கை மதிப்பானதாக அமைந்த எம்எஸ்ஸுக்கு அகத்தின் வாழ்க்கை முடிச்சுகளின் முடிச்சாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே மகனின் இழப்பால் புத்திர சோகத்தை அனுபவித்தார். பல விருப்பங்கள் நிறைவேறாது கலங்கி நின்ற அவரது வாழ்வில் இறுதி விருப்பமான சொந்த வீட்டில் இயற்கை எய்துதல் நடந்தேறியது.

எம்எஸ் தனது அந்தரங்கத்தை மிகவும் விரும்பிப் பொன்போலப் பேணியவர். அவரது ஒரு முழு நாளை அறிந்தவர்கள் அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். அவரது மொத்த செயல்பாடுகளை யாரும் அறிய மாட்டார்கள். யாரோ ஒருவர் அலுவலக வாயிலில் நிற்பார். எம்எஸ் முன் நிற்கும் பாங்கே அவரது அபரிமிதமான மரியாதையைக் காட்டுவதாக இருக்கும். அவரை எம்எஸ் யதேச்சையாக அறிமுகப்படுத்தும்வரை அப்படி ஒரு உறவு இருப்பதை அறிய முடியாது. அவருக்கு எம்எஸ் ஆற்றிய உதவியையும் அறிய முடியாது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தட்டச்சராகப் பணியாற்றிய அரசு அலுவலகத்தில் தனது பணியைச் செய்ய ஒரு பெண்மணியை உதவியாளராக அவரே நியமித்துவிட்டு தனது ‘சமூகக் கடமை’களை ஆற்றக் கிளம்பியவர். மாலைக்குள் செய்யப்பட வேண்டிய அலுவலகப் பணிகளைக் கச்சிதமாகச் சரிபார்த்து நிறைவேற்றிவிடுவார். அத்தோடு அதிகாரிகளின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற எம்எஸ் போன்ற சகா கிடைப்பது அரிது. எனவே இப்படியெல்லாம் நடந்தது! சமூகக் கடமைகளாவன, அச்சகங்களில் எழுத்தாளர்களின் நூல்களை அச்சேற்றுதல், சிற்றிதழ்களின் நிழல் ஆசிரியராகச் செயல்படுதல், தட்டச்சுப் பயிற்சியாளராகவும், தட்டச்சுப் பொறிகளின் நிபுணராகவும் செயல்படுதல்... ஒருகாலத்தில் நாகர்கோவில் பூங்காவில் சிறப்பாக இயங்கிய, அரிய நூல்கள் பல கொண்ட நூலகத்தின் அறிவிக்கப்படாத நூலகர். பல பத்தாண்டுகளாக நாகர்கோவிலில் நடக்கும் ஒரு தட்டச்சுப் பயிற்சித் தேர்வின் ஆய்வாளர். ‘மலையாள மனோரமா’ ஆண்டு மலரின் ஆலோசகர். சிவகாசிப் பதிப்பாளர் ஒருவருக்கு அகராதி தொகுப்பாளர், திருக்குறள் உரையாளர்! இப்பணிகளில் தனக்கு ஏதேனும் ஒரு தொகை கிடைத்தால் அதை அவர் அறிந்த, வசதி குறைந்த பெண்கள் பலருக்குப் பிரித்து வைப்புநிதியாகப் போட்டுக் கொடுத்துவிடுவார். இது வேறு சிலர் சொல்ல சந்தர்ப்பவசமாக நான் அறிந்தது. இன்னும் எத்தனை இருக்குமோ! ஒரு முறை எம்எஸ் தன்னைப் பற்றிய குறிப்பெழுதியபோது, பிறர் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காண்பவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

1987-ல் சுந்தர ராமசாமி ‘காலச்சுவடு’ இதழைத் தொடங்கியபோது நண்பர்கள் பலர் உதவினார்கள். அச்சுப் பொறுப்பை முழுமையாக எடுத்துக்கொண்டவர் எம்எஸ். உறுதியான, நுட்பமான அச்சு அழகியலறிந்த எம்எஸ்ஸுடைய ஆதரவும் இருப்பும் இல்லாமல் ‘காலச்சுவடு’ திட்டமே சுராவுக்குத் தோன்றியிருக்காது என்பதுதான் என் எண்ணம். இதழ் இடையில் நிறுத்தப்பட்டு, 1994-ல் நான் மீண்டும் தொடங்கியபோது அப்பா (சுரா) எனக்கு வழங்கிய ஆதரவு முக்கியமாக இரண்டு. ஒன்று, ‘காலச்சுவடு’ பெயரை எனக்கு மாற்றிக் கொடுத்தது. இரண்டு, எம்எஸ்ஸை எனக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டிக்கொண்டது. இது என்னுடைய வாக்கியம். அசலில் அது உணர்த்துதலாகவே இருந்திருக்கும். எம்எஸ், 'சரி' என்றுகூட ஒரு சொல்லை உதிர்த்திருக்க மாட்டார். முகத்தில் மோனலிசாவைப் பின்வாங்க வைக்கும் புன்னகை போன்ற கோடுகள் படர்ந்திருக்கும்; அதை மகிழ்ச்சி அல்லது ஒப்புதலின் திசையிலான உணர்வுகள் என்று சொல்லலாம் அல்லது அகம் சலனமடைவதன் முகச்சலனம் என்றும் கொள்ளலாம். ஆனால் இந்த அக்டோபர் முடிந்து, நடக்க முடியாமல் ஆகும்வரை, படியேறி அலுவலகம் வந்துகொண்டிருந்தார்.

அவரது கரும சிரத்தையையும் ஒழுங்கையும் காணும் பலர் அவரைக் ‘காலச்சுவடு’ பணியாளர் என்று பிழையாக எண்ணிவிடுவது உண்டு. அவர் பங்களிப்பாளர். இங்கிருந்து சுமார் அரை டஜன் பதிப்பகங்களுக்கான பணிகளை மேற்கொண்டுவந்தார். அதேபோல, அவரைப் பிழை திருத்துநர் என்று வரையறுப்பதும் பகுதி உண்மைதான். எழுத்துரு தேர்வு, பதிப்பு நுட்பங்கள், பிழை திருத்தும் முறைகள், பக்க வடிவமைப்பு, சமகால நடைக்கான இலக்கணம் என்று அவர் பங்களிப்பு விரிவானது. எம்எஸ் அச்சுக்கலையின் அழகியலாளர். அலுவலகப் பணியாளர்களுக்கு அவர் ஒரு பயிற்சியாளர், சந்தேக நிவாரணி, பிழை சுட்டிக் காப்பவர், உற்ற உதவிகள் பல செய்யும் தோழர்.

ஒரு காலகட்டம் வரையிலான தமிழ் நவீன இலக்கியம், செம்மொழி இலக்கியங்கள், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் புலமை - வடமொழி, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பரிச்சயம் - இந்திய, உலகத் திரைப்படங்கள் சார்ந்த ஞானம் என இவற்றிலெல்லாம் எண்ணற்ற பிழைகளை அச்சேறிவிடாமல் அவர் தடுக்கத் துணைநின்றன. ஆங்கிலம் இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து அவர் மொழிபெயர்த்த பணி முக்கியமானது. அவரது மொழிபெயர்ப்பில் கிட்டத்தட்ட 10 நூல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல பல மொழிபெயர்ப்புகளில் நுட்பமான பிழைகளை நீக்கி அவர் மேம்படுத்திய பணியும் மிக முக்கியமானது.

ஒருமுறை டீ குடிக்கும் நேரத்தில் தலைப்புச் செய்திகளை ஓடவிட்டேன். ‘வீரப்பன் கொல்லப்பட்டான்’ என்ற செய்தி மின்னியது. எம்எஸ்ஸை அழைத்துச் சொன்னேன். காட்சிகளை முகத்தில் சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தவர் ‘ஆம்புலன்சில் Salem என்பதற்கு Selem என்று தவறாக எழுதியிருக்கிறார்கள்’ என்றார். நானும் முகத்தைச் சலனமின்றி வைத்துக்கொண்டேன்!

நீண்ட காலம் அவரை அறிந்தவர்கள் துக்கத்தில் கலங்கி நிற்பது இயல்பு. ஆனால் ஒருவரைத் தன்பால் ஈர்க்க எம்எஸ்ஸுக்கு அதிக நேரமோ அதிக சொற்களோ அவசியமில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இ.ஜி.ராஜேந்திரன் என்ற பெரியவர் தனது ஆங்கில நாவலைப் பதிப்பிக்க ஆலோசனை வேண்டி வந்தார். அந்த நூல் பணியை எம்எஸ் எடுத்துக்கொண்ட பாங்கு தல்ஸ்தோயின் நாவலை அவரிடம் ஒப்படைத்ததற்கு நிகரானது. இது மிகை இல்லை என்பதை அவரை அறிந்தவர்கள் ஆமோதிப்பார்கள். எம்எஸ்ஸின் ஆலோசனைகளை ஏற்று அவர் நாவலைச் சீர்படுத்தினார். பிரசுரமான நூலைத் தான் எவ்வளவு முயன்றும் எம்எஸ்ஸிடம் கையளிக்க முடியவில்லையே என்று கண் கலங்கியபடி இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள அருமனையிலிருந்து வந்திருந்தார். அவரது நூலே எம்எஸ் மேற்பார்வையிட்ட கடைசி நூலாக இருக்கலாம். அதற்கு அடுத்த வாரம் எம்எஸ்ஸின் வருகை நின்றுவிட்டது.

நிறை வாழ்க்கை வாழ்ந்தவர். கிடைத்த உறவுகளை, சந்தர்ப்பங்களை, பயணங்களை பொக்கிஷமாக அனுபவித்தவர். வயோதிகத்தில் சீரழியாமல் மறைந்தார். அதில் பூரண மகிழ்ச்சி. கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தவறாமல் குமரி முனைக்குச் செல்வார். பௌர்ணமியின் காதலர் பௌர்ணமி அன்று விடைபெற்றுக்கொண்டார்!

- கண்ணன், பதிப்பாளர், ‘காலச்சுவடு’ ஆசிரியர், தொடர்புக்கு: kannan31@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x