Published : 08 Dec 2017 10:56 AM
Last Updated : 08 Dec 2017 10:56 AM

பார்த்திபன் கனவு 10: உறையூர்த் தூதன்

இயற்கையாக பூமியில் எழுந்த சிறு குன்றுகளை அழகிய ரதங்களாகவும், விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்துக்கு சக்கரவர்த்தியும், குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல் யானையும், கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாக பூமியில் எழுந்த பாறைகளைச் செதுக்கிச் செய்த வடிவங்கள்தாம்.

அவற்றுள் யானையின் சமீபமாக சக்கரவர்த்தி வந்தார்.

“குந்தவி! இந்த யானையைப் பார்த்தாயா? தத்ரூபமாய், உயிருள்ள யானை நிற்பது போலவே தோன்றுகிறதல்லவா? முப்பது வருஷத்துக்கு முன்னால் இங்கே இந்த யானை இல்லை; ஒரு மொட்டைக் கற்பாறைதான் நின்றது!”

“இந்தக் கோயில்கள் எல்லாமும் அப்படித்தானே மொட்டை மலைகளாய் இருந்தன?” என்று குந்தவி கேட்டாள்.

“ஆமாம் குழந்தாய்! இன்று நீயும் நானும் வந்திருப்பது போல் முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தகப்பனாருடன் நான் இங்கு வந்தேன். உன் தாத்தாவைப் பற்றித்தான் உனக்கு எல்லாம் தெரியுமே. சிற்பம், சித்திரம் என்றால் அவருக்கு ஒரே பைத்தியம்!”

“உங்களுக்குப் பைத்தியம் ஒன்றும் குறைவாயில்லையே?” என்று குந்தவி குறுக்கிட்டாள்.

சக்கரவர்த்தி புன்னகையுடன், “என்னைவிட அவருக்குத்தான் பைத்தியம் அதிகம். செங்கல்லினாலும், மரத்தினாலும் அவர் ஆயிரம் கோயில்கள் கட்டினார். அப்படியும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. என்றும் அழியாத பரம்பொருளுக்கு, என்றும் அழியாக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்க விரும்பினார். அந்தக் காலத்திலேதான் ஒருநாள் அவரும், நானும் இந்தப் பக்கம் சுற்றிக்கொண்டு வந்தோம்.

அப்போது எனக்கு உன் வயதுதான் இருக்கும். தற்செயலாக ஆகாசத்தைப் பார்த்தேன். வெண்ணிறமான சிறு சிறு மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் அவ்வப்போது வெவ்வேறு ரூபங்கொண்டு தோன்றின. ஒரு சிறு மேகம் யானையைப் போல் காணப்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பாறையண்டை வந்தேன். கையில் கொண்டு வந்திருந்த காசிக் கட்டியினால் யானையின் உருவத்தை இதன்மேல் வரைந்தேன்.

அதை அப்பா பார்த்துக்கொண்டே இருந்தார். யானை உருவத்தை நான் எழுதி முடித்ததும் என்னைக் கட்டி தூக்கிக்கொண்டு கூத்தாடத் தொடங்கினார். ‘நரசிம்மா! என்ன அற்புதமான யோசனை உன் யோசனை! இங்குள்ள பெரிய பாறைகளை எல்லாம் கோயில்களாக்கி விடுவோம். சின்னச் சின்னப் பாறைகளை எல்லாம் வாகனங்களாகச் செய்துவிடுவோம். இந்த உலகமுள்ள அளவும் அழியாதிருக்கும் அற்புதச் சிற்பங்களை எழுப்புவோம்!’ என்று வெறி பிடித்தவர்போல் கூறினார்.

அவ்விதமே சீக்கிரத்தில் இங்கே சிற்ப வேலைகளை ஆரம்பித்தார். அதுமுதல் இருபது வருஷகாலம் இந்தப் பிரதேசத்தில் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான கல்லுளிகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நான் வட தேசத்துக்குப் படையெடுத்துப் போனபோதுதான் நின்றது...”

இவ்விதம் சொல்லி சக்கரவர்த்தி நிறுத்தி ஏதோ யோசனையில் ஆழ்ந்தவர் போல் இருந்தார்.

சற்றுப் பொறுத்து குந்தவி, “ஆமாம் அப்பா, இருபது வருஷமாய் நடந்துவந்த சிற்பப் பணியை நிறுத்திவிட்டீர்களே என்ற சந்தோஷத்தினால்தான் உங்கள் பெயரை இந்தப் பட்டினத்துக்கு வைத்தார்கள் போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டுக் குறும்பாக புன்னகை செய்தாள். அதைக் கேட்ட சக்கரவர்த்தி உரக்கச் சிரித்துவிட்டு, “இல்லை அம்மா! இந்தச் சிற்பப்புரி தோன்றுவதற்கு நான் காரணமாய் இருந்தபடியினால் என் தகப்பனார் இப்பட்டினத்துக்கு என் பெயரை அளித்தார்.

‘நரசிம்மன்’ என்ற பெயருடன் எத்தனையோ ராஜாக்கள் வரக்கூடும். ‘மாமல்லன்’ என்ற பட்டப் பெயர் வேறொருவரும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று யோசித்து, அப்பா இந்தப் பட்டினத்துக்கு ‘மாமல்லபுரம்’ என்று பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என் மேலேதான் எவ்வளவு ஆசை!” என்று கூறி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார்.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x