Last Updated : 01 Dec, 2017 11:04 AM

 

Published : 01 Dec 2017 11:04 AM
Last Updated : 01 Dec 2017 11:04 AM

பார்த்திபன் கனவு 9: புதிய ராமாயணம்

‘‘எ

தற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை?” என்று சிரித்துக்கொண்டே குந்தவி கேட்டாள்.

‘‘ஆமாம், ஆமாம்! அப்படி நீ இருந்தால் காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்” என்ற செய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களில் யாரும் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்! அப்புறம் உன் கல்யாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்.”

‘‘ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா?” என்று குந்தவி கேட்டாள்.

‘‘அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்தபோது ஒருநாள் வில்லைத் தெரியாத்தனமாகத் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கல்யாணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். கடைசியில், சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா? விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார். இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்துவிட்டது. உடனே ஜனகர், ‘‘ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்துவிட்டாயே! ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கல்யாணம் பண்ணிக்கொள்” என்றார். இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று!”

குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே, ‘‘அப்பா! நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது புதிய இராமாயணமாயிருக்கிறதே!” என்றாள்.

சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், ‘‘ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா! நான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லை” என்று சொன்னாள்.

சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டு, ‘‘அது என்ன சமாசாரம்? கல்யாணம் உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம்?” என்று கேட்டார்.

அப்போது குந்தவி ‘‘கல்யாணம் செய்துகொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்” என்றாள்.

‘‘அப்படியா சமாசாரம் குந்தவி? இன்னொரு தடவை சொல்லு” என்றார் சக்கரவர்த்தி.

‘‘அதெல்லாம் ஒரு தடவைக்குமேல் சொல்ல மாட்டேன் அப்பா! நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே. ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்?”

‘‘ஓ ஆபத்பாந்தவா... அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக்கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில் அவ்விதமிருக்கிறதோ? அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்” என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார்.

‘‘உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிறீர்களா, இல்லையா? இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்” என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று, அம்பாரியில் இருந்து கீழே குதிப்பதுபோல் பாசாங்கு செய்தாள்.

‘‘வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே!” என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப் பாகனைக் கூப்பிட்டு யானையை நிறுத்தச் சொன்னார்.

யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டுவரும்படி சமிக்ஞை காட்டினார். அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, ‘‘நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்துகொள்கிறோம்” என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்தில் இருந்து பிரிந்து குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது. சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x