Last Updated : 24 Nov, 2017 09:59 AM

 

Published : 24 Nov 2017 09:59 AM
Last Updated : 24 Nov 2017 09:59 AM

பார்த்திபன் கனவு: பாகம் 2- மாமல்லபுரம்

ந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன.

எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது. அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள்.

இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தன. பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.

கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள் போலிருந்தாள். பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை ஒப்புக் கொண்டார்கள். ‘‘கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே? சித்திரம் வரைவதெங்கே?” என்றார்கள். ‘‘எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி தேவியைப் படைத்திருக்க வேண்டும்!” என்று அவர்கள் சொன்னார்கள்.

‘‘அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்” என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி. ‘‘அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்” என்றார் சக்கரவர்த்தி. ‘‘இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா” என்றாள் குந்தவி.

‘‘நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா! குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம்! சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படியெல்லாம் செய்யக்கூடாது!” என்றார் சக்கரவர்த்தி.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x