Published : 03 Nov 2017 10:44 AM
Last Updated : 03 Nov 2017 10:44 AM

பார்த்திபன் கனவு: இரண்டாம் பாகம்- அத்தியாயம் 5- சதியாலோசனை

சதியாலோசனை

ற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும், இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து, “சுவாமி!” என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக்கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன் இப்போது, இளங்காளைப் பருவத்தை அடைந்து ஆஜானுபாகுவாக விளங்கினான். அவன் முகத்தில் வீரக் களை திகழ்ந்தது. உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்தின் வேகம் கண்களில் அலையெறிந்தது.

படபடவென்று பேசத் தொடங்கினான்: “சுவாமி! நேற்றிரவு கனவில் என் தந்தை வந்தார். என்னை அழைத்துக்கொண்டு சிராப்பள்ளி மலைக்குப் போனார். அங்கே உச்சியில் பறந்துகொண்டிருந்த பல்லவர்களின் சிங்கக் கொடியைக் காட்டினார்... சுவாமி! இனிமேல் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.

“என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கிறது. விக்கிரமா! சரியான காலம் வரையில் காத்திருக்கும்படிதானே சொன்னேன்? இப்போது காலம் வந்துவிட்டது. நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் சொல். வெறும் பதற்றத்தினால் மட்டும் காரியம் ஒன்றும் ஆகிவிடாது. தீர யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். உன் தந்தை உனக்குக் கொடுத்துவிட்டுப் போன குறள் நூலில் தெய்வப் புலவர் என்ன சொல்லியிருக்கிறார்?

‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப(து) இழுக்கு’

இதை நீ எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.”

“ஆம், சுவாமி! எண்ணித்தான் துணிந்திருக்கிறேன். வரப்போகும் புரட்டாசி பவுர்ணமியன்று சிராப்பள்ளி மலைமீது பறக்கும் பல்லவர் கொடியை எடுத்தெறிந்துவிட்டு அங்கே புலிக்கொடியைப் பறக்கவிடப் போகிறேன். யார் என்ன சொன்னபோதிலும் இந்தத் தீர்மானத்தை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.”

“மிக்க சந்தோஷம் விக்கிரமா! உன் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளும்படி நானும் சொல்லப் போவதில்லை. இந்த நாள் எப்போது வரப்போகிறது என்றுதான் நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உன் தீர்மானத்தை காரியத்தில் நிறைவேற்ற என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்? அதைத் தெரிந்துகொள்ள மட்டும் விரும்புகிறேன். புலிக்கொடியைப் பறக்க விட்டுவிட்டால் போதுமா? அதைக் காத்து நிற்கப் படைகள் வேண்டாமா? பல்லவ தளபதி அச்சுதவர்மன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா?”

“சுவாமி! அந்தக் கவலை தங்களுக்கு வேண்டவே வேண்டாம். சோழநாட்டு மக்கள் எல்லோரும் சித்தமாயிருக்கிறார்கள். பொன்னனைக் கேளுங்கள், சொல்லுவான். புரட்டாசி பவுர்ணமியில் வீரர்கள் பலர் உறையூரில் வந்து கூடுவார்கள்; புலிக்கொடி உயர்ந்ததும் அவர்கள் என்னுடைய படையில் பகிரங்கமாய்ச் சேர்ந்துவிடுவார்கள். உறையூரில் உள்ள பல்லவ சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்து அச்சுதவர்மனையும் சிறைப்படுத்திவிடுவோம்!”

“இந்த அபாயகரமான முயற்சியில் உனக்கு யார் ஒத்தாசை செய்கிறார்கள்? யார் உனக்காகப் படை திரட்டுகிறார்கள்? நீயோ வசந்த மாளிகையைவிட்டு வெளியே போனது கிடையாதே...”

“என் சித்தப்பா மாரப்ப பூபதிதான் எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார். அவர் ரகசியமாக ஒரு பெரிய படை திரட்டி வந்திருக்கிறார்...”

மாரப்ப பூபதி என்றதுமே சிவனடியாரின் முகம் கறுத்தது. அவர் விக்கிரமனை நடுவில் நிறுத்தி “யார்? மாரப்ப பூபதியா இதெல்லாம் செய்கிறான்? அவனிடம் உன் உத்தேசத்தை எப்போது சொன்னாய்?” என்று கேட்டார்.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x