Last Updated : 13 Oct, 2017 10:15 AM

 

Published : 13 Oct 2017 10:15 AM
Last Updated : 13 Oct 2017 10:15 AM

பார்த்திபன் கனவு!- 2 (இரண்டாம் பாகம்)

சிவனடியார்!

கீ

ழ்வானம் வெளுத்துப் பல பலவென்று பொழுது விடியும் சமயத்தில் மேற்சொன்ன வீரன் குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன் குதிரையில் இருந்து கீழே குதித்து அவசர அவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும் மண் குதிரை களுக்கும் மத்தியில்தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரை மீது கட்டியிருந்த ஒரு மூட்டையை எடுத்து அவிழ்த்தான். அதற்குள் இருந்த புலித் தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத் தொடங்கினான். சற்று நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்ய தேஜஸுடன் கூடிய சிவயோகியாகத் தோற்றம் கொண்டான்.

ஆம்; வெண்ணாற்றங் கரையில் ரணகளத்தில் பார்த்திபனுக்கு வரமளித்த சிவனடியார்தான் இவர்.

தம்முடைய பழைய உடை களையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் மூட்டையாகக் கட்டி, உடைந்து விழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால் வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒரு தடவை அன்பு டன் தடவிக் கொடுத்தார். குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டது போல் மெதுவான குரலில் கனைத்தது.

பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பி ஒற்றையடிப்பாதை வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார்.

மறுபடியும் மேற்கு நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.

ஒரு நாழிகை வழி நடந்த பிறகு சூரியன் உதயமாகும் தருணத்தில் இந்தச் சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே படகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில் வந்து நின்று, “பொன்னா!” என்று கூப்பிட்டார்.

உள்ளிருந்து “சாமியார் வந்திருக்கிறார் வள்ளி” என்று குரல் கேட்டது. அடுத்த விநாடி பொன்னன் குடிசைக்கு வெளியே வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடு வள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார்.

“பொன்னா! மகாராணியும் இளவரசரும் வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

“ஆம் சுவாமி! இன்னும் கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் ‘மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா?”

“ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நீ உடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா!" என்றார் சிவனடியார்.

“இதோ போகிறேன், வள்ளி சாமியாரைக் கவனித்துக் கொள்!” என்று சொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் படகு தண்ணீரில் போகும் சல சலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x