Published : 29 Sep 2017 11:35 AM
Last Updated : 29 Sep 2017 11:35 AM

பார்த்திபன் கனவு 23: ரணகளம்

 

ரணகளம்

“அதைப்பற்றிச் சந்தேகம் உனக்கு இருக்கிறதா, பார்த்திபா? அதோ கேள், பல்லவ சைன்யத்தின் ஜய கோலாகலத்தை!”

பார்த்திபன் முகம் சிணுங்கிற்று. “அதை நான் கேட்கவில்லை. சுவாமி! சோழ சைன்யத்திலே யாராவது...” என்று மேலே சொல்லத் தயங்கினான்.

“இல்லை, இல்லை. சோழ சைன்யத்தில் ஒருவன்கூடத் திரும்பிப் போகவில்லை அப்பா! ஒருவனாவது எதிரியிடம் சரணாகதி அடையவும் இல்லை. அவ்வளவு பேரும் போர்க்களத்திலே மடிந்து வீர சொர்க்கம் அடைந்தார்கள்!” என்றார் சிவனடியார். பார்த்திபனுடைய கண்கள் மகிழ்ச்சியினால் மலர்ந்தன.

“ஆகா! சோழ நாட்டுக்கு நற்காலம் பிறந்துவிட்டது. சுவாமி! இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொன்னீர்களே? உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” என்றான்.

“எனக்கு ஒரு கைம்மாறும் வேண்டாம். பார்த்திபா! உன்னைப் போன்ற சுத்த வீரர்களுக்குத் தொண்டு செய்வதையே தர்மமாகக் கொண்டவன் நான். உன் மனத்தில் ஏதாவது குறை இருந்தால் சொல்; பூர்த்தியாகாத மனோரதம் ஏதாவது இருந்தால் தெரிவி; நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார் சிவனடியார்.

“மெய்யாகவா? ஆகா என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். சுவாமி! உண்மைதான்; என் மனத்தில் ஒரு குறை இருக்கிறது. சோழநாடு தன் புராதனப் பெருமையை இழந்து இப்படிப் பராதீனம் அடைந்திருக்கிறதே என்பதுதான் அந்தக் குறை. சோழநாடு முன்னைப்போல் சுதந்திர நாடாக வேண்டும்; மகோன்னதம் அடைய வேண்டும்; தூர தூர தேசங்களில் எல்லாம் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன்; என்னுடைய வாழ்க்கையில் அது கனவாகவே முடிந்தது. என்னுடைய மகன் காலத்திலாவது அது நனவாக வேண்டும் என்பது தான் என் மனோரதம். விக்கிரமன் வீரமகனாய் வளர வேண்டும். சோழ நாட்டின் மேன்மையே அவன் வாழ்க்கையின் லட்சியமாய் இருக்க வேண்டும். உயிர் பெரிதல்ல; சுகம் பெரிதல்ல; மானமும் வீரமுமே பெரியவை என்று அவனுக்குப் போதிக்க வேண்டும். அன்னியருக்குப் பணிந்து வாழும் வாழ்க்கையை அவன் வெறுக்க வேண்டும். சுவாமி! இந்த வரம்தான் தங்களிடம் கேட்கிறேன். தருவீர்களா?” என்றான் பார்த்திபன்.

சக்தியற்ற அவனது உடம்பில் இவ்வளவு ஆவேசமாகப் பேசும் வலிமை அப்போது எப்படித்தான் வந்ததோ, தெரியாது.

சிவனடியார் சாந்தமான குரலில், “பார்த்திபா! உன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றுவேன் - நான் உயிரோடு இருந்தால்” என்றார்.

பார்த்திபன், “என் பாக்கியமே பாக்கியம்! இனி எனக்கு ஒரு மனக்குறையும் இல்லை. ஆனால், ஆனால் - தாங்கள் யார், சுவாமி? நான் அல்லும் பகலும் வழிபட்ட சிவபெருமான்தானோ? ஆகா! தங்கள் முகத்தில் அபூர்வ தேஜஸ் ஜொலிக்கிறதே! எங்கள் குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதனேதான் ஒருவேளை இந்த உருவெடுத்து...” என்பதற்குள், சிவனடியார், “இல்லை, பார்த்திபா! இல்லை, அப்படியெல்லாம் தெய்வ நிந்தனை செய்யாதே!” என்று அவனை நிறுத்தினார்.

பிறகு அவர், “நானும் உன்னைப் போல் அற்ப ஆயுளையுடைய மனிதன்தான். நான் யாரென்று நீ அவசியம் தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியானால் இதோ பார்!” என்று சொல்லி, தம் தலை மீதிருந்த ஜடாமுடியையும், முகத்தை மறைத்த தாடி மீசையையும் லேசாகக் கையிலெடுத்தார்.

கண் கூசும்படியான தேஜஸுடன் விளங்கிய அவருடைய திவ்ய முகத்தைப் பார்த்திபன் கண்கொட்டாமல் பார்த்தான்.

“ஆகா தாங்களா?” என்ற மொழிகள் அவன் வாயில் இருந்து குமுறிக்கொண்டு வந்தன.

அளவுக்கடங்காத, ஆழம்காண முடியாத ஆச்சரியத்தினால் அவனுடைய ஒளியிழந்த கண்கள் விரிந்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் கண்கள் மூடிவிட்டன; பார்த்திபனுடைய ஆன்மா அந்தப் பூத உடலாகிய சிறையில் இருந்து விடுதலையடைந்து சென்றது.

மீண்டும் கனவு விரியும்...

ஓவியம்: பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x