Last Updated : 22 Sep, 2017 09:33 AM

 

Published : 22 Sep 2017 09:33 AM
Last Updated : 22 Sep 2017 09:33 AM

பார்த்திபன் கனவு-22: ரணகளம்!

யா

னையின் தேகத்தில் பல இடங்களில் காயம்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நடக்க முடியாமல் அது தள்ளாடி நடந்தது என்பது நன்றாகத் தெரிந்தது. கீழே கிடந்த போர் வீரர்களின் உயிரற்ற உடல்களை மிதிக்கக் கூடாதென்று அது ஜாக்கிரதையாக அடி எடுத்து வைத்து நடந்தது. துதிக்கையை அப்படியும் இப்படியும் நீட்டி அங்கே கிடந்த உடல்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால், அந்த யானை எதையோ தேடி வருவதுபோல் தோன்றியது.

சற்று நேரத்துக்கெல்லாம், அந்தப் பட்டத்து யானையானது, உயிரற்ற குவியலாக ஒன்றன்மேல் ஒன்றாகக் கிடந்த ஓர் இடத்துக்கு வந்து நின்றது. அந்த உடல்களை ஒவ்வொன்றாக எடுத்து அப்பால் மெதுவாக வைக்கத் தொடங்கியது. இதைக் கண்டதும் சிவனடியார் இன்னும் சற்று நெருங்கிச் சென்றார். சமீபத்தில் தனித்து நின்ற ஒரு கருவேல மரத்தின் மறைவில் நின்று யானையின் செய்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை, அந்த உயிரற்ற உடல்களை ஒவ்வொன்றாக எடுத்து அப்புறப்படுத்திற்று. எல்லாவற்றுக்கும் அடியில் இருந்த உடலை உற்று நோக்கிற்று. அதைத் துதிக்கையினால் மூன்று தடவை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. பிறகு அங்கிருந்து நகர்ந்து சற்றுத் தூரத்தில் வெறுமையாயிருந்த இடத்துக்குச் சென்றது. துதிக்கையை வானத்தை நோக்கி உயர்த்திற்று. சொல்ல முடியாத சோகமும் தீனமும் உடைய ஒரு பெரிய பிரலாபக் குரல் அப்போது அந்த யானையின் தொண்டையிலிருந்து கிளம்பி, ரணகளத்தைத் தாண்டி, நதியின் வெள்ளத்தைத் தாண்டி, நெல் வயல்களையெல்லாம் தாண்டி, வான முகடு வரையில் சென்று, எதிரொலி செய்து மறைந்தது.

அவ்விதம் பிரலாபித்து விட்டு அந்த யானை குன்று சாய்ந்தது போல் கீழே விழுந்தது. சில வினாடிக்கெல்லாம் பூகம்பத்தின்போது மலை அதிர்வதுபோல் அதன் பேருடல் இரண்டு தடவை அதிர்ந்தது. அப்புறம் ஒன்றுமில்லை. எல்லையற்ற அமைதிதான். சிவனடியார் கருவேல மரத்தின் மறைவில் இருந்து வெளிவந்து, யானை தேடிக் கண்டுபிடித்த உடல் கிடந்த இடத்தை நோக்கி வந்தார். அதன் அருகில் வந்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பார்த்திப மகாராஜாவின் உடல்தான் அது என்பதைக் கண்டார்.

உடனே அவ்விடத்தில் உட்கார்ந்து அவ்வுடலின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார். பிறகு, தலையை எடுத்து தம் மடிமீது வைத்துக் கொண்டார். கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் ஜலம் எடுத்து முகத்தில் தெளித்தார். உயிரற்றுத் தோன்றிய அந்த முகத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் ஜீவகளைத் தளிர்த்தது. மெதுவாகக் கண்கள் திறந்தன. பாதி திறந்த கண்களால் பார்த்திபன் சிவனடியாரை உற்றுப் பார்த்தான்.

“சுவாமி....தாங்கள் யார்?” என்ற தீனமான வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வந்தன.

“அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான் அப்பா! இன்று நடந்த யுத்தத்தில் உன்னுடைய ஆச்சரியமான வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பேர்ப்பட்ட மகாவீரனைத் தரிசிக்க வேண்டுமென்று வந்தேன்.பார்த்திபா! உன்னுடைய மாசற்ற சுத்த வீரத்தின் புகழ் என்றென்றும் இவ்வுலகில் இருந்து மறையாது!” என்றார் அப்பெரியார்.

“யுத்தம் - என்னவாய் முடிந்தது, சுவாமி!” என்று பார்த்திபன் ஈனஸ்வரத்தில் கேட்டான். அவனுடைய ஒளி மங்கிய கண்களில் அப்போது அளவிலாத ஆவல் காணப்பட்டது.

- கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x