Published : 01 Sep 2017 10:59 AM
Last Updated : 01 Sep 2017 10:59 AM

பார்த்திபன் கனவு 19: படை கிளம்பல்

றையூரில் அன்று அதிகாலையில் இருந்து அல்லோலகல்லோலமாக இருந்தது. பார்த்திப மகாராஜாவின் பட்டாபிஷேகத்தின்போதும் மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் விஜயத்தின்போதும்கூட, உறையூர் வீதிகள் இவ்வளவு அழகாக அலங்கரிக்கப்படவில்லை என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.

வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களாலும் மாவிலைகளாலும் செய்த தோரணங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களில் எல்லாம் புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்கள். பிறகு, ஆடை ஆபரணங்களினால் நன்கு அலங்கரித்துக்கொண்டு, போருக்குப் படை கிளம்புவதை வேடிக்கை பார்ப்பதற்காக வாசல் திண்ணைகளிலோ, மேல் மாடிகளின் சாளரங்களின் அருகிலோ வந்து நின்று கொண்டார்கள்.

விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையில் உள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின. குதிரைகள் கனைக்கும் சத்தம், யுத்த வீரர்கள் ஒருவரையொருவர் கூவி அழைக்கும் குரல், அவர்கள் இடையிடையே எழுப்பிய வீர முழக்கங்களின் ஒலி, வேல்களும் வாள்களும் ஒன்றோடொன்று உராயும்போது உண்டான கண கண ஒலி, போருக்குப் புறப்படும் வீரர்களை அவர்களுடைய தாய்மார்கள் வாழ்த்தி அனுப்பும் குரல், காதலிகள் காதலர்களுக்கு விடை கொடுக்கும் குரல் - இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கலகல சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள். வரிசை வரிசையாகக் குதிரைப் படைகளும், யானைப் படைகளும், காலாட் படைகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. எல்லாப் படைகளுக்கும் முன்னால் சோழர்களின் புலிக்கொடி வானளாவிப் பறந்தது. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை போன்ற் வாத்தியங்களை முழக்குகிறவர்கள் படைகளுக்கு இடையிடையே நிறுத்தப்பட்டார்கள். பெரிய பேரிகைகளைச் சுமந்த ரிஷபங்களும் ஆங்காங்கு நின்றன. பட்டத்துப் போர் யானை அழகாக அலங்கரிக்கப்பட்டு அரண்மனை வாசலில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.

இந்த மாதிரி அணிவகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது, போர் வீரர்கள் அடிக்கடி “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அரண்மனை முன்வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அரண்மனைக்குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக்கொண்டு வெளியே வந்தார்கள்.

வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள்.

- அடுத்த வெள்ளியன்று

மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x