Published : 18 Jul 2017 11:36 AM
Last Updated : 18 Jul 2017 11:36 AM

கடவுளின் நாக்கு 54: பெயரைக் கேளுங்கள்!

சமூகத்தில் தன் அடையாளங்களை, தனித்துவங்களை ஒளித்துக்கொண்டு வாழ்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன் அந்தக் கட்டிடத்தின் லிஃப்ட் ஆபரேட்டர் ஒருவர் எனக்கு வணக்கம் வைத்தார். பதிலுக்கு நானும் அவருக்கு வணக்கம் சொன்னேன். அலுவலகத்தில் இருந்த நண்பனிடம், லிஃப்ட் ஆபரேட்டர் பெயர் என்னவென்று கேட்டேன். ‘‘ஆறு வருஷமா இங்கே வேலை பார்க்கிறார். பேரு… பழனினு நினைக்கிறேன்…’’ என்றான்.

 

‘‘தினமும் அவரைப் பார்க்கிறாய், பேசுகிறாய். அவர் பெயர் தெரியாதா?’’ எனக் கேட்டதற்கு, ‘‘என்னமோ… கேட்கணும்னு தோணலை…’’ என்று சொன்னவன், உடனே போனில் லிஃப்ட் ஆபரேட்டரை உள்ளே வரச் சொல்லி அழைத்தான்.

 

அவரிடம் உங்க பெயர் என்னவென்று கேட்டபோது, அவர் மெல்லிய குரலில் ‘‘ஸ்டீபன் சார்!’’ என்றார்.

‘‘சாரி ஸ்டீபன்! இத்தனை நாளா உங்கப் பேரைக்கூட தெரிஞ்சுக்கிடலை…’’ என நண்பன் சொன்னதும், ‘‘அதனாலே என்ன சார்? நான் லிஃப்ட் ஆபரேட்டர்தானே…’’ என்றார் அவர்.

 

அவரிடம் ‘‘இந்த ஆபீஸ்ல உள்ள எல்லோரது பெயரும் உங்களுக்குத் தெரியுமா?’’ எனக் கேட்டேன்.

‘‘நல்லா தெரியும் சார். யாரு, எப்போ வருவாங்க? எப்போ போவாங்கனுகூட தெரியும். ஆபீஸுக்கு யாரு புதுசா வந்தாலும் பேரை கேட்டு குறிச்சி வெச்சிக்கிடுவேன். இதுக்கு லிஃப்ட்ல ஒரு நோட்டுகூட வெச்சிருக்கேன்…’’ என்றார்.

எல்லோரது பெயர்களையும் நினைவு வைத்துக்கொண்டிருப்பவரின் பெயரை, எவரும் நினைவு வைத்துக்கொள்வது இல்லை. இது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை இல்லை.

 

நம் வீட்டுக்கு பால் பாக்கெட் போடுகிறவர், பேப்பர் போடும் பையன், கீரை கொண்டுவரும் பாட்டி, சிலிண்டர் கொண்டுவருகிறவர், இஸ்திரி போடுகிறவர், தெருமுனையில் காய்கறி விற்பவர் என எவர் பெயரும் நமக்குத் தெரியாது. ஆனால் சினிமா, கிரிக்கெட், அரசியல் உலகில்

இயங்கும் அத்தனை பேர்களின் பெயர்களும் அவர்களின் தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் வரை தெரியும். ஒருவேளை தெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டோ, படித்தோ, தெரிந்துகொண்டுவிடுகிறோம்.

 

’எப்போதுமே எளியவர்களின் பெயர்கள்தான் புறக்கணிக்கப்படுகின்றன. அவர்களின் உதவி தேவை. ஆனால், அவர்களின் பெயரும் விவரமும் நமக்குத் தேவையற்றவை’ என்பது என்ன வகையான மனப்போக்கு?

இது, இன்று தொடங்கிய விஷயம் இல்லை. காலம் காலமாகவே வரலாற்றில் மன்னர் பெயர்கள் மட்டும்தானே இடம்பெற்றுவருகின்றன!

மன்னர்… தனி ஆளாக படை நடத்திச் சென்று, வெற்றி பெற்றாரா என்ன?

 

ஒருவரின் பெயரைத் தெரிந்துகொள்ளத் தொடங்கும்போதுதான் உறவு ஏற்படத் தொடங்குகிறது. பரஸ்பரம் பெயரைச் சொல்லி அழைக்கும்போது, நட்பு உருவாகவும் வளரவும் ஆரம்பிக்கிறது. நட்பு வளர்ந்த பிறகு பெயர்கள் முக்கியமற்றுப் போய்விடுகின்றன. நீண்ட உறவுகொண்டவர்களிடையே பெயர்கள் விலகி ‘என்னங்க, என்னம்மா…’ என்கிறச் சொல்லே போதுமானதாகிவிடுகிறது.

பள்ளி நாட்களில் சினிமா தியேட்டர் ஆபரேட்டர் பெயர்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவோம். காரணம், அவர் பெயரைச் சொன்னால் எளிதாக உள்ளே போய் டிக்கெட் வாங்கிவிடலாம். அது போலவே படம் ஏதாவது ஒரு ரீலில் கட் ஆனால் தியேட்டரே அவர் பெயர் சொல்லி அலறும். அடையாளமற்ற மனிதராக அவர் ஆபரேட்டர் அறைக்குள் இருந்தபோதும் அவரது பெயர் அரங்கில் ஒளிர்ந்துகொண்டுதான் இருந்தது.

 

இதுபோல ஒவ்வோர் ஊரிலும் சில மருத்துவர்களின் பெயர்கள் அடையாளமாக மாறிப் போயிருப்பதை நான் கண்டிருக்கிறேன். பேருந்து

நிறுத்தங்கள் கூட மருத்துவர்களின் பெயர்களில் இருக்கின்றன.

எப்போதுமே மருத்துவர்களின் பெயர்களை மக்கள் முழுமையாகவே சொல்கிறார்கள். ஒரு போதும் சுருக்கிச் சொல்வதில்லை. ஆனால்,

மருத்துவர்களின் பெயர்களை நினைவு வைத்திருப்பவர்கள் செவிலியர் பெயர்களை நினைவு வைத்துக்கொள்வது இல்லை. ’சிஸ்டர்’ என்று

பொதுவாகவே அழைக்கிறார்கள்.

 

தன் பெயரை பிறர் அறிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம்கூட எளிய மனிதர்களிடம் கிடையாது. படித்தவர்களைப் போல அவர்கள்

விசிட்டிங் கார்டு அடித்து வைத்துக்கொள்வது இல்லை. தன்னை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்றுகூட அவர்கள் விரும்புவது இல்லை.

தன் வேலை மட்டுமே முக்கியமானது என நினைக்கிறார்கள்.

 

பெயர்கள் அறியாமல் வாழ்வது ஒருபுறம் என்றால், மறுபுறம் தனித் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல், சொன்ன வேலையை மட்டுமே செய்துபோகிறவர்கள் மறுபுறம்.

மதுரை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது விடுதி ஒன்றின் காவலராக இருந்தவர் முத்துசாமி. ‘விடுதி நாள்’ (ஹாஸ்டல் டே) அன்று, தான் ஒரு பாடல் பாடவா என்று கேட்டார். மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவரைப் பாடச் சொன்னோம். அவர் சிதம்பரம் ஜெயராமன் பாடிய ‘தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்…’ என்ற பாடலை தன்னை மறந்து பாடியபோது, ‘இத்தனை அற்புதமான குரல் கொண்டிருக்கிறாரே, ஏன் இதை வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை இவர்!’ என வியந்துபோனோம்.

 

எத்தனையோ திறமைகள் இருந்தபோதும் தாங்கள் செய்யும் வேலைக்காக தங்கள் திறமைகளை மறைத்துக்கொண்டு வாழ்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். இதில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். மணிப்பூரி நாட்டுப்புறக்கதை ஒன்று உள்ளது.

 

ஒரு காலத்தில் பேன்கள் வாயாடிகளாக இருந்தனவாம். சதா பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்குமாம். ஒருமுறை கடவுள் எல்லா உயிரினங்களையும் அழைத்து, அதன் திறமைகளுக்கு ஏற்ப பரிசு வழங்குவதாகக் கூறினார். மான், மயில், கிளி, யானை, குரங்கு என

ஒவ்வொன்றும் தனது திறமைகளைக் காட்டி பரிசுகளை வாங்கிச் சென்றன. அப்போதும் பேன்கள் தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டு கடவுளின் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்தன.

 

எல்லாப் பரிசுகளையும் கொடுத்துமுடித்த கடவுள், ‘‘பேன்கள் ஏன் வரவில்லை?’’ எனக் கேட்டார்.

‘‘அவை வெட்டி அரட்டை அடித்துக்கொண்டு தன் இடத்திலேயே தங்கிவிட்டன…’’ என்று விலங்குகள் பதில் தந்தன.

கோபமான கடவுள் ‘‘இனி பேன்களுக்கு வீடு இல்லாமலும் வாய் பேசமுடியாமலும் போகட்டும்’’ என சாபம் கொடுத்துவிட்டார். பேன்கள்

தங்களின் தவறை ஒப்புக்கொண்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்கவே, ‘‘வீடில்லாத நீங்கள் மனிதர்களின் தலையில் குடியிருங்கள். உங்களைக் கண்டுபிடித்தால் கொன்றுவிடுவார்கள். ஆகவே, இருக்குமிடம் தெரியாமல் வாழுங்கள்’’ என்று ஆணையிட்டாராம். அப்படிதான் மனிதர்கள் தலைக்கு பேன்கள் வந்து குடியேறின என்கிறது மணிப்பூரி நாட்டுப்புறக் கதை ஒன்று.

 

சாபத்தால் தன்னை மறைத்துக்கொண்டு வாழுகின்றன பேன்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களோ சமூகக் கொடுமையால் தங்கள் பெயர்களை, அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாழ வேண்டிய நிலையுள்ளது. நாய்களுக்குக் கூட பெயர்சூட்டி கொஞ்சும் நாம்தான், நமக்காக உழைக்கும் பலரது பெயர்களைப் புறக்கணிக்கிறோம்.

 

வரலாற்றின் உதடுகள் உச்சரிக்காத சில பெயர்களை உரத்துச் சொல்ல வேண்டிய காலம் இது. எளிய மனிதர்கள் நம்மிடம் கேட்பது அன்பையும் நேசத்தையும் மட்டும்தான். அதை சிலரோடு மட்டும்தான் வெளிப்படுத்துவேன் என்பது அநாகரீகம் இல்லையா?!

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x