Last Updated : 18 Mar, 2017 10:04 AM

 

Published : 18 Mar 2017 10:04 AM
Last Updated : 18 Mar 2017 10:04 AM

மறுபடியும் திரும்பாத சரித்திரம்

ஒரு கோயில் என்றால் அந்தக் கோயிலை நிர்மாணித்தவர் யார்? எந்த மன்னனுடைய ஆளுகைக்குட்பட்ட காலத்தில் அந்தக் கோயில் கட்டப்பட்டது? எந்த நூற்றாண்டில் எழுந்துயர்ந்தது அந்தக் கோயில் என்கிற சரித்திர சங்கதி கிடைக்கப்பெற்றிருக்கும். ஒரு கோயிலின் தலவரலாற்றின் தொடக்கம் என்பது இத்தகைய அடிப்படையான தகவல்களைக் கொண்டிருப்பதுதான். ஆனால், கி.பி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிற அப்பர் பெருமானாலேயே திருவாரூர் திருக்கோயில் எப்போது எழுப்பப்பட்டது என்று சொல்ல முடியவில்லை என்று இந்நூலாசிரியர் குறிப்பிடும்போது இக்கோயிலின் புராணம் விரியத் தொடங்குகிறது.

‘திருவாரூர் திருக்கோவில்’ என்கிற இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளைத் திரட்டுவதற்கு நூலாசிரியர் மேற்கொண்ட பெரு முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் இதிலுள்ள தகவல்களே சான்று. கல்வெட்டு ஆய்வுகள், சுவரோவியங்கள், ஆவணங்கள், செப்பேடுகள், பழமையான வரலாற்றுக் குறிப்புகள் போன்ற வற்றைக் கவனமாகப் பார்வையிட்டு, ஆய்வுகள் மேற்கொண்டு எழுதப்பட்டதுதான் இப்புத்தகம்.

சேக்கிழார் தன்னுடைய பெரியபுராணத்தில் சோழவள நாட்டிலுள்ள எந்த ஊர்களைப் பற்றியும் சிறப்பித்துக் கூறவில்லை; திருவாரூரை மட்டுமே ‘திருநகரச் சிறப்பு’ என்று அத்தியாயப்படுத்தியுள்ளார். பஞ்ச பூதத் தலங்களில் பிருதிவி தலமாகப் போற்றப்படுகிறதாம் திருவாரூர் கோயில். கற்சிலைகளாலும் உலோகத்தாலும் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகள் அமைவதற்கு முன்பாகவே மண்புற்றை வணங்கும் சமய நாகரிகத்தை திருவாரூர் மக்கள் கொண்டிருந்தனர் என்கிறார் நூலாசிரியர்.

பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கும் திருவாரூர் திருக்கோயில் கட்டிடக் கலையின் விலாசம், அழகுப் பரிமாணம், சிற்பங்களில் மின்னும் கலையின் ஒளி, வழிபாட்டு முறைகளில் படிந்துள்ள முன்னோர்களின் மனசு, திருவாரூருக்கே உள்ள தனிச் சிறப்புகள், கோயில் கல்வெட்டுகளில் கசியும் வரலாற்றின் புகை வெளிச்சம், செப்பேடுகள் செப்பும் ஜாதகங்கள், கண்களை முகர வைக்கும் வாசனை ஓவியங்கள் என நூலின் அனைத்துப் பக்கங்களிலும் உருள்கிறது ஊர்த் தேர்!

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆறு கால பூஜைகளின்போதும் உலகத்தின் எந்த ஆலயத்திலும் வாசிக்கப்படாத ஒரு வாத்தியக் கருவி இசைக்கப்படுகிறது. அந்த வாத்தியத்தின் பெயர் பஞ்சமுக வாத்தியம். வித்தியாசமான இந்த இசைக் கருவி ஐந்து வகை விலங்குகளின் தோல்களால் ஆனது. இன்றைக்கும் மெல்லிசை நிகழ்ச்சிகளில் இசைக்கப்படுகிற டிரம்ஸ் எனும் இசைக் கருவிக்கு பஞ்சமுக வாத்தியம்தான் முன்னோடி. உலகிலேயே மிக உயரமான, அகலமான ஆழித் தேர் என்றழைக்கப்படுகிற மிகப் பெரிய தேர் திருவாரூரில்தான் உள்ளது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி.

மனுநீதிச் சோழ மகாராசா நாடகம்

தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகிலுள்ள ஆண்டாக்கோயில் என்ற ஊரில் காத்தையா வாயாடியார் என்பவரின் மூதாதையர் களால் பேணிக் காக்கப்பட்ட ‘மனுநீதிச் சோழ மகாராசா நாடகம்’ பதிவு செய்யப்பட்டுள்ள ஓலைச் சுவடியொன்று இன்றும் உள்ளது. அந்தத் தமிழ் இசை நாடகம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அந்த ஊரில் 5 நாட்கள் இன்றைக்கும் நடிக்கப்பட்டுவருகிறது என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

மன்னர்கள் வரும்போதுதான் கட்டியங்கூறுதல் (பராக் பராக்) நடக்கும் என்றுதான் அறிந்துவைத் திருக்கிறோம். திருவாரூர் ஆலயத்தில் தியாகராஜர் பவனி வரும்போதும் இப்படி கட்டியங்கூறுவார்கள் என்பது புதிய தகவல்.

ராஜேந்திர சோழனின் காதலுக்குரியவளாக நக்கன் பரவை என்கிற காதலி ஒருத்தி இத்திருக் கோயிலில் வாழ்ந்திருக்கிறாள். ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜன், ஆரூர் கல்வெட் டொன்றில் தன் தந்தையான ராஜேந்திரன் மற்றும் நக்கன் பரவையின் படிமங்களின் பூஜைகளுக் காகத் தான் அளித்த நிவந்தம் பற்றிப் பதிவுசெய் திருக்கிறான்.

இதுபோல, மனுநீதிச் சோழன் வாழ்ந்திருந் ததும் திருவாரூர்தான் என்பதைச் சுட்டும் கல் வெட்டுகளைப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. வரலாற்றுப் புதினம் எழுத விரும்பும் எழுத்தாளர் களுக்கு இந்தப் புத்தகம் நல்லதொரு ஆதாரக் களஞ்சியம்!

- மானா பாஸ்கரன்,
தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x