Published : 05 Oct 2013 04:05 PM
Last Updated : 05 Oct 2013 04:05 PM

பெண் என்னும் பெருமிதம்

சுகிர்தராணியின் கவிதைகளில் பெண் என்ற கழிவிரக்கம் இல்லை. பெண் என்ற பெருமித உணர்வு இருக்கிறது. தைரியம் இருக்கிறது. தலித் மக்கள் மீதான அடக்குமுறையைப் பிரதிபலிக்கும் கவிதைகளும், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளும், கவித்துவம் மிக்க கவிதைகளும், துணிச்சலான கவிதைகளும் இவருடைய கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்கின்றன.

செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும் போது

காகம் விரட்டுவேன்

வெகுநேரம் நின்றுவாங்கிய ஊர்ச்சோற்றை

சுடுசோறென பெருமை பேசுவேன்

தப்பட்டை மாட்டின அப்பா தெருவில்

எதிர்ப்படும்போது

முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்

அப்பாவின் தொழிலும் ஆண்டு

வருமானமும் சொல்லமுடியாமல்

வாத்தியாரிடம் அடிவாங்குவேன்

தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து

தெரியாமல் அழுவேன்

இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்

பறச்சி என்று.

இந்தக் கவிதை சிருஷ்டிகரமானதாகவும்,வெகுஜன ரசனையுடையவர்களையும் சென்றடையும் தன்மையிலும் அமைந்திருக்கிறது. எதை நினைத்து தாழ்வான எண்ணம் ஏற்படுகிறதோ அதையே தைரியமாக வெளிப்படுத்தினால் தாழ்வான எண்ணம் பெருமிதமாக மாறுகிறது.

ஆயுதம் என்ற கவிதையில் மிகப்பெரிய படையுடன் கவசங்கள் அணிந்தவன் போருக்கு அழைக்கிறான். அவன் நாடுகளில் வெட்சிப்பூக்கள் மலிந்திருக்கின்றன. ஆனால் எதிராளியின் பாறை நிலங்களில் கரம்புகள் மிகுந்திருக்கின்றன. ஒரு தரப்பில் படைகளின் பரிவாரங்கள், மறுதரப்பில் யாருமற்ற பின்புலம். வெறுங்கையுடன் எதிராளி. இது புதுவிதமான வியூகமாக இருக்குமோ என்று அவனைக் குழப்புகிறது. போர் தொடங்குகிறது. பரிவாரமும் தனித்த எதிராளியும் முன்னோக்கி நடக்கிறார்கள். குறுவாளை எதிராளியின் மீது வீசுகிறான். அது பட்டுத்தெறிக்கிறது. ஏனெனில் எதிராளி சதையாலான ஆயுதம். சதையாலான ஆயுதம் பெண் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கவிஞர்.

கவித்துவமுள்ள சில கவிதை வரிகளை கீழே தருகிறேன்.

உள்ளறையிலிருந்து கழுவித்தள்ளும்/ முற்றத்து நீரில் தளும்பித் தெறிக்கிறது/ மரணத்தின் மிச்சம்”

கனிந்த வேப்பம்பழத்திலிருந்து/ வெளியேறும் விதையென/ என்னிலிருந்து நீங்குகிறது,வெட்கம்”

எண்ணெய் தீர்ந்துபோன விளக்கின்/ கடைசித்துளி வெளிச்சத்தைப்போல/ என் சுவாசம் அலைகிறது.

கவித்துவத்தையும் பெண் என்ற பெருமித உணர்வையும் தலித் மக்கள் மீதான அடக்குமுறையையும் கவிதைகளில் வெளிப்படுத்தும் கவிஞர் இவர்.

தொடர்புக்கு sureshkumaraindrajith@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x