Published : 09 Jul 2017 12:15 PM
Last Updated : 09 Jul 2017 12:15 PM

பெண்கள் இல்லாத ஆண்கள்!

தாய், மனைவி, மகள், தோழி, சகோதரி, காதலி என்று பெண்ணை மையப்படுத்தி இதுகாலம் வரையிலும் உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியங்கள் வரை பேசப்பட்டும், இன்னும் அந்த உறவுநிலைகள் குறித்த தெளிவான பார்வை கிடைத்தபாடில்லை. அதிலும் மனைவி, காதலி என்ற இரண்டு உறவுநிலைகளில் உள்ள அகச் சிக்கல்களைப் பேச நினைத்த பலரும் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று கேட்டால், பெரிய கேள்வியே மிஞ்சுகிறது.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து அநேகமாக 1920-களிலிருந்து தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுவந்திருக்கின்றன. காரணம், அந்தக் காலகட்டத்தில்தான் எர்னஸ்ட் ஹெமிங்வே, ‘மென் வித்தவுட் விமன்’ (1927) என்ற சிறுகதைத் தொகுப்புடன் வந்தார். 14 சிறுகதைகளில், ஆண்களின் தனிமை, அவர்கள் சந்திக்கும் அக, புறச்சிக்கல்கள், பெண்களுடனான உறவுச் சிக்கல்கள் போன்றவை குறித்துப் பேசினார்.

சுமார் 90 ஆண்டுகள் கழித்து ஹெமிங்வேயின் அதே புத்தகத் தலைப்போடு 7 சிறுகதைகள் அடங்கிய ஹாருகி முராகமியின் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஜப்பானிய மொழியில் 2014-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கதைகள், பிலிப் காப்ரியல், டெட் கூஸென் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இருவரது சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்பு ஒன்றுதான் என்றாலும், பேசுபொருளும் ஒன்றுதான் என்றாலும், இரண்டுக்குமிடையே மெல்லிய வித்தியாசம் உண்டு. ஹெமிங்வேயின் தொகுப்பில், ஒன்றிரண்டு கதைகளைத் தவிர இதர கதைகளில் பெண்களின் இருப்பைப் பார்க்கவே முடியாது. ஆனால், முராகமியின் தொகுப்பில், எல்லாக் கதைகளிலும் பெண்கள் தங்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்கள். ஹெமிங்வே, பெண்களில்லாத ஆண்களின் தனிமையைப் பேசினார் என்றால், முராகமி, பெண்கள் இருந்தும் ஆண்களின் தனிமையைப் பற்றிப் பேசுகிறார். கணவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளும் பெண், தன்னைக் காதலிப்பவனுக்குப் பதில் தராமல் எங்கோ காணாமல் சென்றுவிடும் பெண் என 7 கதைகள் முழுவதும் ஆணை நிராகரிக்கிற, ஆணை அலைக்கழிக்கிற பெண்கள் நடமாடும் உலகத்தைப் படைத்திருக்கிறார் முராகமி.

மொழியை வைத்து எழுத்தில் ஓரிகமி செய்யும் வித்தை அறிந்தவர் முராகமி. இந்தத் தொகுப்பு முழுவதும் இந்த வித்தையின் மின்னல் கீற்றுகள் தென்படுகின்றன. இந்தக் கதைகளைப் படித்தால், பெண்கள் ஏன் ஆண்களை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், பெண்கள் அந்த நிராகரிப்பின் மூலம் தரும் வலி எத்தகையது என்பதை வேண்டுமானால் புரிந்துகொள்ளலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x