Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

புத்தகக் காட்சி: ஏற்றமும் இறக்கமும்

வலைஞர் எனும் எழுத்தாளர்

சென்னைப் புத்தகக் காட்சியின் இந்த ஆண்டு அதிரடியாகக் கலக்கியவர்கள் - சமூக ஊடக எழுத்தாளர்கள். ஃபேஸ்புக் பதிவுகள், ட்விட்டர் பதிவுகள் என தொகுக்கப்பட்ட புத்தகங்கள் விற்பனையில் கலக்க, ‘நீங்கள்லாம் எழுத்தாளர்கள்னா நாங்க என்னவாம்?’ என்கிற சர்ச்சை உருவானது. அதிலும் அராத்து, விநாயக முருகன், ப்ரியா தம்பி ஆகியோருக்குக் கிடைத்த கவனம் ‘பாரம்பரிய எழுத்தாளர்’களைக் கொதிப்படைய வைத்தது.

இதுகுறித்து இணையத்திலும் புழங்கிக்கொண்டு பத்திரிகைகளிலும் எழுதும் சாருநிவேதிதா, பாஸ்கர் சக்தி இருவரிடமும் பேசினோம்.

“இணையத்தில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தமிழில் வாசிப்பே கிடையாது; அவர்களுக்குத் தமிழில் எழுதவே தெரியவில்லை. இணையம் வழியாக நல்ல எழுத்தாளர்கள் உருவாகலாம். ஆனால், தற்போதைய சூழலில் அப்படி யாருமே உருவாகவில்லை என்றே சொல்வேன். ஆன்லைனிலேயே அமர்ந்து போதை அடிமைபோல புத்தக வாசமே இல்லாமல் எதையாவது மொக்கையாக எழுதிக்கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலான இணைய எழுத்தாளர்கள். அராத்து போன்றவர்கள் இதில் விதிவிலக்கு” என்றார் சாருநிவேதிதா.

“ஒரு ஊடகம் சமூகத்தில் புதிதாக வரும்போது பல்வேறு சலனங்கள் தோன்றும். இப்போது வெகுஜனப் பத்திரிகைகளில்கூட இணையத்தில் சுவாரசியமாக எழுதுபவர்களைப் பார்த்து வேலை கொடுக்கும் வழக்கம் உருவாகியுள்ளது. வெகுஜனப் பத்திரிகைகளில்கூட வலைப்பக்கம் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இவை எல்லாம் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியின் பக்கவிளைவுகள்தான். இப்படிப் புதிதாக வருகிற எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் துறைகளில் முக்கியமான எழுத்தாளர்களாக வருங்காலத்தில் வருவார்களா வர மாட்டார்களா என்பதை இப்போது கணிக்க முடியாது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதையும் மறுக்க முடியாது. இணையம் புதிய வகை எழுத்துகள் வருவதற்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது” என்றார் பாஸ்கர் சக்தி.

சரி, இணையம் மூலம் எழுத வந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“பொதுவாக, சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களை இணைய எழுத்தாளர்கள் பேச வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக, ‘பாரம்பரிய எழுத்தாளர்’களுக்கும் வாசகர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்துள்ளது. அந்த இடைவெளியை இணைய சமூகம் நிரப்பியுள்ளதாக நினைக்கிறேன்” என்கிறார் அராத்து.

நவீன வாழ்க்கையின் கொண்டாட்டங்களை, சுகதுக்கங்களை, நீர்க்குமிழிகளைப் போன்ற நிலையாமைத் தருணங்களைச் சமூக ஊடகங்கள்தான் ரத்த வாடையோடு தருகின்றன. அவை புத்தகங்களாக வெளியாகும்போது ஆதரவைப் பெறுவதில் வியப்பில்லை. ஆனால், அவை இலக்கியமா, இலக்கியமில்லையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!

கவிஞர்களுக்கு இடம் இல்லையா?

இன்றைக்குத் தமிழில் ஒரு பதிப்பாளர் வெளியிடவே அஞ்சும் நூல்கள் என்னவாக இருக்கும்? சந்தேகமே வேண்டாம், கவிதைக்குத்தான் அந்த இடம். கடினமான மொழிநடையுடன் சித்தாந்த அடிப்படையிலான விவாதங்களைக் கொண்ட தலையணை அளவுக்கான ஒரு மொழிபெயர்ப்பை வெளியிடக்கூட பதிப்பாளர்கள் தயங்க மாட்டார்கள். கவிதை நூல்கள் அவ்வளவு அச்சுறுத்துகின்றன. சினிமா கவிஞர்கள், ஜனரஞ்சகக் கவிஞர்கள், நவீனக் கவிஞர்கள், பின்நவீனக் கவிஞர்கள் எல்லாருடைய நிலையும் இதுதான்.

ஏன்?

ஒரு வார்த்தை பதில்: விற்பதில்லை.ஆச்சரியம் என்னவென்றால், எல்லாவற்றையும் தாண்டி, கவிதைப் புத்தகங்கள் கடல் அலைபோல வந்துகொண்டு

தான் இருக்கின்றன. ஆனால், அவை பதிப்பிக்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கையும் விற்பனையாகும் பிரதிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. விற்பனை மதிப்பு இல்லாத ஒரு படைப்பாளிக்கு என்ன மதிப்பு இருக்கும்? “உன்னை எல்லாம் மதித்து ஒரு கவிதைப் புத்தகம் போடுவதே உன் கவிதைகளுக்குச் செய்யும் பெரிய மரியாதை” என்ற தொனி பதிப்பாளர்களிடம் வந்துவிடுவதால், தங்கள் புத்தகங்கள் வெளியிடப்பட்டாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள் கவிஞர்கள். இந்த நிலையில், புத்தகத் தயாரிப்பு, காப்புரிமைத் தொகை எல்லாம்பற்றிப் பேசுவதற்கான வேலையே இல்லை.

இப்படி ‘கருணை நோக்கில்’போடப்படும் கவிதைப் புத்தகங்களை எல்லாம் சேர்த்து ஒரு நாள் நடத்துகிறார்களே வெளி யீட்டு விழா அத்தோடு முடிந்தது அந்தக் கவிஞருக்கும் அவருடைய கவிதைகளுக்குமான தொடர்பு.

இதையெல்லாம் பார்க்கும்போது, கவிதைக்கு இந்தச் சமூகத்தில் என்ன இடம் இருக்கிறது என்ற கேள்வியே எழுகிறது.கொஞ்சம் யோசித்துப் பார்த்தோம் என்றால், நம் தொன்மை, பண்பாடு எல்லாவற்றையும்குறித்து நாம் பெருமை கொள்வதற்குக் காரணமே கவிதைகள்

தான். ஆனால், இப்போதோ கவிதைக்கே தொடர்பற்றதுபோல் இந்தச் சமூகம் ஆகிவிட்டது. ஒரு கவிஞன் என்பவன் சமூகத்தின் விளைபொருள்; ஒரு நல்ல கவிதைக்குக் கிடைக்கும் வரவேற்பு ஒரு சமூகத்தின் நுண்ணுணர்வுக்கான அளவுகோல். காலங்காலமாகக் கவிதை பாடிக்கொண்டிருந்த இந்தச் சமூகத்துக்கு என்னவாயிற்று? இதன் மூலம் இந்தச் சமூகம் சொல்லும் செய்திதான் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x