பார்த்திபன் கனவு 9: பல்லவ சைன்யம் என்றால் லேசா!

Published : 23 Jun 2017 10:02 IST
Updated : 23 Jun 2017 10:02 IST

“யார் பகைவன்? பல்லவ சக்கரவர்த்தியா நமக்குப் பகைவன்? இல்லவே இல்லை! சோழநாட்டுக்கு இப்போது பெரிய பகைவன் பார்த்திபன்தான். இவன் கையிலே வாள் எடுத்து அறியமாட்டான்; வேல் வீசி அறிய மாட்டான்! இப்பேர்ப்பட்ட வீராதிவீரன் பல்லவ சைன்யத் துடன் போர் செய்யக் கிளம்புகிறான்.


பல்லவ சைன்யம் என்றால் லேசா! சமுத்திரத்தின் மணலை எண்ணினாலும் எண்ணலாம். பல்லவ சைன்யத் திலுள்ள வீரர்களை எண்ண முடியாது. காவே ரியிலிருந்து கோதாவரி வரையில் பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே? ஒரு கையகலமுள்ள சோழ நாடு எங்கே? நரசிம்ம சக்கரவர்த்திதான் லேசுப்பட் டவரா? நூறு யோசனை தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று, வாதாபி யைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு வந்தவர், அவருடன் நாம் சண்டை போட முடியுமா? யானைக்கு முன்னால் கொசு!”

“யுவராஜா! இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள்? மகாராஜாவிடம் சொல்வது தானே?”

“மகாராஜாவிடம் சொல்ல வில்லையென்றா நினைத்துக்கொண்டாய், கிழவா? சொன்னதன் பலன்தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி போயிற்று. மகா ராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். சைன் யத்தை அவரே நடத்திக்கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம்! தாராளமாய்ப் போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதிப் பதவி இல்லையென்று யார் அழுதார்கள்?”

“அப்படியானால் யுவராஜா! நீங்கள் யுத்தத் துக்கே போகமாட்டீர்களோ?”

“நானா? நானா? என்னைக் கூப்பிட்டால் போ வேன்; கூப்பிடாவிட்டால் போகமாட்டேன்... கிழவா! சண்டையின் முடிவைப் பற்றிச் சொன்னாயே, அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு!”

“ஆமாம், யுவராஜா! ஒரு கட்சியைச் சேர்ந்தவர் கள் எல்லாரும் யுத்தகளத்தில் அழிந்து போவார்கள். ஒருவராவது உயிரோடு திரும்பி வரமாட்டார்கள்!”

“உயிரோடு திரும்பி வரமாட்டார்களா? பின் உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ? ஹா ஹா ஹா ஹா!” என்று மாரப்ப பூபதி உரக்கச் சிரித்தான். பிறகு, “ஆமாம் ஆமாம்; நான் யுத்தத் தில் செத்துப் போனால் நிச்சயமாய்ப் பிசாசாகத் திரும்பி வருவேன்; திரும்பி வந்து வள்ளியைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவேன்” என்று கூறி மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தான்.

சமையலறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி தன் இரண்டு கையையும் நெரித்து, “உன் கழுத்தை இந்த மாதிரி நெரித்துக் கொல்லுவேன்!” என்று முணு முணுத்தாள். கொஞ்சம் காது மந்தமுள்ள கிழவி “என்ன சொல் லுறே, வள்ளி?” என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப் பொத்தி, “சும்மா இரு!” என்றாள்.

“உள்ளே யார் பேசுகிறது?” என்று கேட்டான் மாரப்ப பூபதி.

“யார் பேசுவார்கள்? என்னைப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ, ஒரு கிழப் பிசாசு; அதுதான் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்!” என்றான் கிழவன்.

“சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும். என் கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி! பொய் சொல்லி ஏமாற்றியிருந் தாயோ...!”

“தங்களை ஏமாற்றி எனக்கு என்ன ஆகவேணும் யுவராஜா!”

மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தான். முற்றத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களையும் வேல்களையும் கத்தி கேடயங் களையும் பார்த்துவிட்டுச் சிரித்தான். “ஆஹா! ரொம்ப முனைந்து வேலை செய்கிறாயாக்கும்! கத்தி! கேடயம்! வாள்! வேல்!

இந்த வாழைப் பட்டைக் கத்தி களையும், புல் அரியும் அரிவாள் களையும் வைத்துக் கொண்டுதான் உங்கள் பார்த்திப மகாராஜா, பல்லவ சக்கரவர்த்தியை ஜெயித்துவிடப் போகிறார்? நல்ல வேடிக்கை! ஹா ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக் கொண்டே ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அப்படியே வாசற் பக்கம் போனான்.

உலைக் களத்தில் கிளம்பும் அனற் பொறிகளைப் போல் கிழவன் கண்களிலே தீப்பொறி பறந்தது.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor