Last Updated : 02 Jun, 2017 09:44 AM

 

Published : 02 Jun 2017 09:44 AM
Last Updated : 02 Jun 2017 09:44 AM

பார்த்திபன் கனவு 6: பாட்டனும் பேத்தியும்

உறையூர்க் கம்மாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும் வள்ளியும் நின்றார்கள். கதவு சாத்தியிருந்தது. “தாத்தா!” என்று வள்ளி கூப்பிட்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் “வா வள்ளி! வாருங்கள் மாப்பிள்ளை!” என்று அவன் வந்தவர்களை வரவேற்றான். பிறகு வீட்டுக்குள்ளே நோக்கி, “கிழவி இங்கே வா! யார் வந்திருக்கிறது பார்” என்றான்.

மூன்று பேரும் வீட்டுக்குள் போனார்கள். “யார் வந்திருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த கிழவி வள்ளியையும் பொன்னனையும் பார்த்துப் பல்லில்லாத வாயினால் புன்னகை புரிந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். வள்ளியைக் கட்டிக்கொண்டு “சுகமாயிருக்கயா, கண்ணு! அவர் சுகமாயிருக்காரா” என்று கேட்டாள்.

பொன்னன் “தாத்தா, உங்கள் பேத்தியைக் கொண்டு வந்து ஒப்புவித்துவிட்டேன். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்” என்றான்.

“வந்ததும் வராததுமாய் எங்கே போகிறாய்?” என்று கிழவன் கேட்டான்.

“மகாராஜாவைப் பார்க்கப் போகிறேன்” என்றான் பொன்னன்.

“மகாராஜா இப்போது அரண்மனையில் இல்லை, மலைக்குப் போயிருக்கிறார். இங்கே வா காட்டுகிறேன்” என்று கிழவன் அவர் களை வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான்.

முற்றத்திலிருந்து அவன் காட்டிய திக்கை எல்லோரும் பார்த்தார்கள். உச்சிப் பிள்ளையார் கோவில் தீபம் தெரிந்தது. அங்கிருந்து தீவர்த்திகளுடன் சிலர் இறங்கி வருவது தெரிந்தது. இறங்கி வந்த தீவர்த்திகள் வழியில் ஓரிடத்தில் சிறிது நின்றன.

“அங்கே நின்று என்ன பார்க்கிறார்கள்?” என்று வள்ளி கேட்டாள்.

“மகேந்திர சக்கரவர்த்தியின் சிலை அங்கே இருக்கிறது. மகாராஜா, இளவரசருக்கு அதைக் காட்டுகிறார் என்று தோன்றுகிறது” என்றான் கிழவன்.

“அவர்கள்தான் இறங்கி வரு கிறார்களே, தாத்தா! நான் அரண் மனை வாசலுக்குப் போகிறேன். இன்று ராத்திரி மகாராஜாவை எப்படி யும் நான் பார்த்துவிட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே பொன்னன் வெளிக் கிளம்பினான்.

கிழவன் அவனோடு வாசல் வரை வந்து ரகசியம் பேசும் குரலில், “பொன்னா! ஒரு முக்கியமான சமா சாரம் மகாராஜாவிடம் தெரிவிக்க வேணும். மாரப்ப பூபதி விஷயத்தில் கொஞ்சம் ஜாக் கிரதையாக இருக்கச் சொல்லு. அதை அந்தரங்க மாக அவரிடம் சொல்லவேணும்!” என்றான்.

“மாரப்ப பூபதியைப் பற்றி என்ன?” என்று பொன்னன் கேட்டான்.

“அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். மகாராஜாவின் காதில் எப்படியாவது இந்தச் சேதியைப் போட்டுவிடு” என்றான் கிழவன்.

கிழவி விருந்தாளிகளுக் குச் சமையல் செய்வதற்காக உள்ளே போனாள். பாட்டனும் பேத்தியும் முற்றத்தில் உட்கார்ந்தார்கள்.

திடீரென்று வள்ளி, “ஐயோ தாத்தா! இதெல்லாம் என்ன?” என்று கேட்டாள்.

முற்றத்தில் ஒரு பக்கத்தில் உலைக்களம் இருந்தது. அதன் அருகில் கத்திகளும் வாள்களும் வேல் களும் அடுக்கி யிருந்தன. அவைகளைப் பார்த்து விட்டுத் தான் வள்ளி அவ்விதம் கூச்சல் போட்டாள்.

“என்னவா! வாளும் வேலும் சூலமுந்தான். நீ எங்கே பார்த்திருக்கப் போகிறாய்? முன் காலத்தில்...”

“இதெல்லாம் என்னத்திற்கு, தாத்தா?”

“என்னத்திற்காகவா? கோவிலில் வைத்து தூப தீபம் காட்டிக் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காகத்தான்! கேள்வியைப் பார் கேள்வியை! தேங்காய்க் குலை சாய்ப்பது போல் எதிராளிகளின் தலைகளை வெட்டிச் சாய்ப்பதற்கு வாள், பகைவர்களின் வயிற் றைக் கிழித்துக் குடலை எடுத்து மாலை யாய்ப் போட்டுக் கொள்வதற்கு வேல், தெரிந்ததா!”

“ஐயையோ! பயமாயிருக் கிறதே!” என்று வள்ளி கூவினாள்.

“இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த நாட்டு ஆண்பிள்ளைகள்கூட உன்னைப் போலேதான் ஆகிவிடுவார்கள். வாளையும் வேலையும் கொண்டு என்ன செய்கிறது என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். வள்ளி! இந்தக் கேள்வி என்னுடைய பாட்டன், முப்பாட்டன் காலங்களில் எல்லாம் எப்படித் தெரியுமா? அப்போது கொல்லுப் பட்டறையில் எல்லாம் வாளும் வேலும் சூலமும் செய்த வண்ணமாயிருப்பார்களாம். ஒவ்வொரு பட்டணத்திலும் கம்மாளத் தெருதான் எப்போதும் ‘ஜே ஜே' என்று இருக்குமாம். ராஜாக்களும் ராஜகுமாரர்களும் சேனாதிபதிகளும் கம்மாளனைத் தேடி வந்து கொண்டிருப்பார்களாம்.

என் அப்பன் காலத்திலேயே இதெல்லாம் போய்விட்டது. வாழைக்கொல்லை அரிவாள்களும் வண்டிக் குக் கடையாணிகளும், வண்டி மாட்டுக்குத் தார்குச்சிகளும் செய்து கம்மாளன் வயிறு வளர்க்கும்படி ஆகிவிட்டது. என் வயதில் இப்போதுதான் நான் வாளையும் வேலையும் கண்ணால் பார்க்கிறேன்.... ஆகா! இந்தக் கைகளிலே மட்டும் முன்னைப் போல வலிவு இருந்தால்? இருபது வருஷத்துக்கு முன்னாலே இந்த யுத்தம் வந்திருக்கக் கூடாதா!”

“சரியாய்ப் போச்சு, தாத்தா! இவருக்கு நீ புத்தி சொல்லி திருப்புவாயாக்கும் என்றல்லவா பார்த்தேன்! யுத்தத்துக்குப் போகணும் என்று இவர் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்...”

“பொன்னனா! அவன் எங்கே யுத்தத்துக்குப் போகப் போகிறான் வள்ளி? பொன்னனாவது உன்னை விட்டு விட்டுப் போகவாவது! துடுப்புப் பிடித்த கை, வாளைப் பிடிக்குமா? பெண் மோகம் கொண்டவன் சண்டைக்குப் போவானா?”

“அப்படி ஒன்றும் சொல்ல வேண்டாம் தாத்தா! இவர் போகணும் போகணும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார். மகாராஜாதான் வரக்கூடாது என்கிறார். இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க இவர் இருக்க வேணுமாம்.”

“அடடா! உன்னுடைய அப்பனும் சித்தப்பன்மார்களும் மட்டும் இப்போது இருந்தால், ஒவ்வொருவன் கையிலும் ஒரு வாளையும் வேலையும் கொடுத்து நான் அனுப்ப மாட்டேனா? எல்லாரையும் ஒரே நாளில் காவேரியம்மன் பலி கொண்டுவிட வேண்டுமா?” என்று சொல்லிக் கொண்டே கிழவன் பெருமூச்சுவிட்டான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x