Last Updated : 26 May, 2017 10:05 AM

 

Published : 26 May 2017 10:05 AM
Last Updated : 26 May 2017 10:05 AM

பார்த்திபன் கனவு 5: நடுநடுங்கிப் போன பல்லவ தூதர்கள்!

நகரின் வீதிகளில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பலின் ஓரத்தில் பொன்னனும் வள்ளியும் போய் நின்றனர். பல்லவ தூதர்கள் வந்தபோது ராஜ சபையில் நடந்த சம்பவங்களை ஒருவன் வர்ணித்துக் கொண்டிருந்தான்:

“ஆகா! அந்தக் காட்சியை நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! மகாராஜா சிங்காதனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இளவரசரும் மந்திரி, சேனாதிபதி எல்லாரும் அவரவர்களின் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். எள் போட்டால் எள் விழுகிற சத்தம் கேட்கும்; அந்த மாதிரி நிசப்தம் சபையில் குடி கொண்டிருந்தது. ‘தூதர்களை அழைத்து வாருங்கள்! ’ என்று மகாராஜா சொன்னார். அவருடைய குரலில் எவ்வளவு வேகம் ததும்பிற்று இன்றைக்கு? தூதர்கள் வந்தார்கள், அவர்களுடைய தலைவன் முன்னால் வந்து நின்று மகாராஜாவுக்கு வந்தனம் செலுத்தினான்.

“தூதரே! என்ன சேதி?” என்று கேட்டார்.

அந்தக் குரலின் கம்பீரத்திலேயே தூதன் நடுங்கிப் போய்விட்டான். அவனுக்குப் பேசவே முடியவில்லை. தட்டுத் தடுமாறிக் கொண்டே “திரிலோக சக்கரவர்த்தி காஞ்சி மண்டலாதிபதி சத்ரு சம்ஹாரி நரசிம்ம வர்ம பல்லவராயருடைய தூதர்கள் நாங்கள்....” என்று அவன் ஆரம்பிக்கும் போது நம்முடைய அரண்மனை விதூஷகன் குறுக் கிட்டான்.

‘தூதரே! நிறுத்தும்! எந்தத் திரிலோகத்துக்குச் சக்கரவர்த்தி? அதல ஸுதல பாதாளமா? இந்திரலோக, சந்திர லோக, யமலோகமா?’ என்றான். சபையில் எல்லோரும் ‘கொல்லென்று'

சிரித்தார்கள். தூதன் பாடு திண்டாட்ட மாய்ப் போய்விட்டது. அவனுடைய உடம்பு நடுங்கிற்று; நாகுழறிற்று. மெதுவாகச் சமாளித்துக்கொண்டு ‘தங்கள் பாட்டனார் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டிவந்த கப்பத்தைச் சென்ற ஆறு வருஷமாய் மகாராஜா கட்டவில்லையாம். அதற்கு முகாந்திரம் கேட்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை' என்றான். ஆகா! அப்போது நமது மகாராஜாவின் தோற்றத்தைப் பார்க்கவேணுமே? ‘தூதரே! உங்கள் சக்கரவர்த்தி கேட்டிருக்கும் முகாந்திரத்தைப் போர் முனையிலே தெரிவிப்பதாகப் போய்ச் சொல்லும்’ என்றார். எனக்கு அப்போது உடல் சிலிர்த்து விட்டது....”

இவ்விதம் வர்ணித்து வந்தவன் சற்றே நிறுத்தியதும் பல பேர் ஏக காலத்தில்

“அப்புறம் என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்கள்.

‘‘அந்தத் தூதன் சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு,

“அப்படியானால், யுத்தத்துக்குச் சித்தமாகும்படி சக்கரவர்த்தி தெரிவிக்கச் சொன்னார்கள். இதற்குள்ளே பல்லவ சைன்யம் காஞ்சியிலிருந்து கிளம்பியிருக்கும். போர்க்களமும் யுத்த ஆரம்ப தினமும் நீங்களே குறிப்பிடலாமென்று தெரியப்படுத்தச் சொன்னார்கள் என்றான். அதற்கு நம் மகாராஜா, ‘புரட்டாசிப் பௌர்ணமியில் வெண்ணாற்றங் கரையில் சந்திப்போம்’ என்று விடையளித்தார். உடனே சபையோர் அனைவரும், “வெற்றிவேல்! வீரவேல்! என்று வீர கர்ஜனை புரிந்தார்கள்...”

இதைக் கேட்டதும் அந்தக் கும்பலில் இருந்தவர்களும் "வெற்றிவேல்! வீரவேல்!” என்று முழங்கினார்கள். பொன்னனும் உரத்த குரலில் அம்மாதிரி வீர முழக்கம் செய்துவிட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.

இதற்குள் இருட்டிவிட்டது. வெண் மேகங்களால் திரையிடப்பட்ட சந்திரன் மங்கலாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வீதி மூலையிலும் நாட்டியிருந்த கல் தூணின் மேல் பெரிய அகல் விளக்குகள் இருந்தன. அவை ஒவ்வொன்றாய்க் கொளுத்தப்பட்டதும் புகை விட்டுக் கொண்டு எரிய ஆரம்பித்தன.

திடீரென்று எங்கேயோ உயரமான இடத்திலிருந்து பேரிகை முழக்கம் கேட்கத் தொடங்கியது.

‘தம்ம்ம்' ‘தம்ம்ம்' என்ற அந்தக் கம்பீரமான சத்தம் வான வெளியில் எட்டுத் திக்கிலும் பரவி ‘அதம்ம்ம்' ‘அதம்ம்ம்’ என்ற பிரதித் தொனியை உண்டாக்கிற்று. உறையூரின் மண்டபங்களும், மாடமாளிகைகளும், கோபுரங்களும் கோட்டை வாசல்களும் சேர்ந்து ஏககாலத்தில் ‘அதம்ம்ம்’ ‘அதம்ம்ம்’ என்று எதிரொலி செய்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சப்தம் ‘யுத்தம்ம் யுத்தம்ம்' என்றே கேட்கத் தொடங்கியது.

இடி முழக்கம் போன்ற அந்தப் பேரிகை ஒலியைக் கேட்டதும் பொன்னனுடைய உடம்பில் மயிர்க் கூச்சம் உண்டாயிற்று. அவனுடைய ரத்தம் கொதித்தது. நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டன. வள்ளியோ நடுங்கிப் போனாள்.

“என்ன இது? இம்மாதிரி ஓசையை இதுவரையில் நான் கேட்ட தேயில்லை!” என்றாள்.

“யுத்த பேரிகை முழங்குகிறது” என்றான் பொன்னன். அவனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்ட வள்ளி,

“ஐயோ, உனக்கு என்ன?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை, வள்ளி! எனக்கு ஒன்றுமில்லை” என்றான் பொன்னன். சற்றுப் பொறுத்து

“வள்ளி! யுத்தத்துக்கு நான் கட்டாயம் போக வேண்டும்!” என்றான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x