Last Updated : 30 Jun, 2017 10:28 AM

 

Published : 30 Jun 2017 10:28 AM
Last Updated : 30 Jun 2017 10:28 AM

பார்த்திபன் கனவு 10: போர் முரசு

வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு “தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம்? நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டுவிட்டாய்?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

“ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்? நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று?” என்றான் கிழவன்.

“சேச்சே! நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா? சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்!” என்று வள்ளி சொன்னபோது அவள் கண்களில் நீர் ததும்பிற்று.

“ஆமாம், வள்ளி! அதை நான் சொல்ல ஆரம்பித்தபோதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா? அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார்.

அப்போது நமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார். அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக் கொடிக்குச் சம மரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார்.

அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி! இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா? நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா? அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?”

“அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா! நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டுவிட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா! நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா...?”

“ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்!”

“என்ன சொல்லுகிறாய், தாத்தா?”

“சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன்.

பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் ‘யுவராஜா'வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கவுரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்?”

“இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா? இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது?”

“உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி!” என்றான் கிழவன்.

வள்ளி திடுக்கிட்டு “என்னால் ஏற்பட்டதா? நன்றாயிருக்கிறதே கதை!” என்றாள்.

“உன்னால் ஏற்பட்டது தான். இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி! காலம் ரொம்ப அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப் போக மாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.”

“என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய்? இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்?” என்று வள்ளி கேட்டாள்.

“நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா! ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தனக்கு உன்னைக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்...”

“அவன் தலையிலே இடி விழ!” என்றாள் வள்ளி.

“அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா! என் தலையிலே அல்லவா விழுந்தது! கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரிய விபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு போவதாக இருந்தான் இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக் களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் நடந்த கல்யாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள். சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்....”

இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சு விட்டான். ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x