தொடுகறி: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!

Published : 15 Oct 2016 10:41 IST
Updated : 15 Oct 2016 10:43 IST

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!

இந்த ஆண்டின் ‘விஷ்ணுபுரம் விருது’ வண்ணதாசனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிவரும் வண்ணதாசன், வாழ்க்கையின் நுணுக்கமான அம்சங்களைக் காட்சிகளாகத் தன் எழுத்தில் சித்தரிப்பதற்குப் பேர்போனவர். ‘வண்ணதாசன்’ என்ற பெயரில் சிறுகதைகளும், ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவரும் இவருடைய இயற்பெயர் கல்யாணசுந்தரம். சாகித்ய அகாடெமி உள்ளிட்ட விருதுகள் தொடர்ந்து இவருக்குப் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன என்று பலரும் சொல்லிவந்த நிலையில், ‘விஷ்ணுபுரம்’ அவரைத் தேடி வந்திருக்கிறது!

அரிதான வாசகர்

குற்றாலம் தர்ம ராஜனைத் தெரியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. தேர்ந்த வாசகர். தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடையவர். ஆழ்ந்த இசைஞானம் உள்ளவர். 25 வருஷங்களுக்கும் மேலாக எழுத்தாளர்கள் பலருக்கும் ஆத்மார்த்த விமர்சகராக தன் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்பவர். எனினும், ஒரு வரிகூட எழுதாதவர்.

டிவிடி பார்த்து நாவல்…

உலகப் படங்களின் டிவிடி பார்த்து தமிழ் சினிமாக்களைச் சுடுகிறார்கள் என்பது பேசப்பட்ட கதை. பேசப்பட வேண்டிய கதை டிவிடிக்களைப் பார்த்து, நாவல்கள், சிறுகதைகளையும் சுடுகிறார்கள் என்பது. எவையெவை எங்கிருந்து சுடப்பட்டன என்பதை ஒரு ஆய்வாகவே மேற்கொண்டுவருகிறார் ஒரு கவிஞர். விரைவில் எல்லா விவரங்களும் வெளிவருமாம்!

இன்னும் எழுதுங்கள் தா.பா.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தான் பார்த்த, கேட்ட, மேடைப் பேச்சுகளைத் தொகுத்திருக்கிறார். நூலின் தலைப்பு ‘மேடைப்பேச்சு’. தமிழகத்தின் முக்கியமான பல அரசியல் தலைவர்களின் பேச்சோடு, தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும் தொட்டுப் பயணிக்கும் இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம் பேச்சாளர்களின் உடல்மொழி தொடர்பான தா.பா.வின் வர்ணனைகள். புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில், “நெறைய எழுதணும்ணு இருக்கு” என்றார் தா.பா. அரசியல் தலைவர்களுடனான அவருடைய அனுபவங்களுக்கு தா.பா. முன்னுரிமை கொடுக்கலாம்!

யூதாஸும் ரூ.34 ஆயிரமும்!

இஸ்ரேலின் மிகப் பிரபலமான எழுத்தாளரான அமோஸ் ஓஸ் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாவலைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த ஹீப்ரு நாவல் ஆங்கிலத்தில் ‘யூதாஸ்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. பணக்காரனாக ஆக வேண்டும் என்ற வேட்கை கொண்ட யூதாஸ் போயும் போயும் 30 வெள்ளிக் காசுகளுக்காக (இன்றைய மதிப்பில் சுமார் ரூ.34,000) ஏன் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஓஸின் மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்ததன் விளைவு ‘யூதாஸ்’ நாவல்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor