Published : 27 Jun 2017 10:31 AM
Last Updated : 27 Jun 2017 10:31 AM

கடவுளின் நாக்கு 51: உண்மை சுடும்!

‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை’ என்றொரு சினிமா பாடல் இருக்கிறது. அது வெறும் பாடல் இல்லை; சமகால உண்மை! எல்லாத் துறைகளிலும் யாரை எங்கே வைப்பது எனத் தெரியாத மூடத்தனம் மேலோங்கி வருகிறது.

திறமையைவிட, அறிவைவிட பரஸ்பர புகழ்ச்சியும், துதி பாடுதலும், முதுகு சொறிந்துவிடுதலுமே ஒருவரை அங்கீகரிக்கவும் உயரத்தில் தூக்கிவைத்துக் கொண்டாடவும் காரணமாக இருக்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

காட்டில் வாழும் சிங்கம் ஒருபோதும் மற்ற விலங்குகளிடம் போய், ‘நான் ஒரு சிங்கம்; என்னை மதியுங்கள்’ என்று கேட்பதில்லை. அது தன் இயல்பில், தனது கம்பீரத்தில், தனது வலிமையில்… தான் யார் எனக் காட்டிக்கொள்கிறது. சிங்கம் மதிக்கப்படுவதற்குக் காரணம், அது தனித்துச் செயல்படுவதே ஆகும்!

தன்னைச் சுற்றிலும் ஜால்ராக்களை வைத்துக்கொண்டு, ‘நான் ஒரு அஞ்சாத சிங்கம்!’ என ஒருபோதும் அது, துதி பாட விடுவதில்லை. தன் வலிமையை அறிந்தவன் அடுத்தவரின் அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பதே இல்லை. அவன், தன்னை நிரூபணம் செய்துகொள்வதன் வழியே ஒன்றை வெற்றிகொள்கிறான். ஆனால், சமகால சூழல் அப்படிப்பட்டது இல்லை. துறைதோறும் உதவாக்கரைகளே மேதைகளாக முன்னிறுத்தப்படுகிறார்கள். ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அது வரலாறு தொடர்பான ஆய்வரங்கம். அங்கே வரலாறு பற்றிய எவ்விதமான அறிவும் இல்லாத ஒரு தொழிலதிபர் தலைமை தாங்கிப் பேசினார். அவரது உளறல்களைத் தாங்கமுடியாமல் நிகழ்வுக்கு வந்திருந்த அறிஞர்கள் பலரும் நெளிந்தார்கள். ஆனால்,ஒருவர்கூட அவர் பேசியது உளறல் என சுட்டிக்காட்டவில்லை.

எனது உரையில் அவர் பேசிய விஷயங்கள ஆதார மற்றவவை என சுட்டிக்காட்டியபோது, அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. மறுநாள், நாளிதழ்களில் அந்தத் தொழிலதிபரின் உரை மட்டுமே வெளியாகியிருந்தது.

நண்பர்கள் போன் செய்து ‘இதுதான் இன்றைய நிலை. இதில் நீ நியாயம் பேசி என்ன ஆகப் போகிறது?’ என கேலி செய்தார்கள். உண்மைதான்! அதற்காக கண்முன்னே ஒருவர் உளறுவதை யாரும் கண்டிக்கவோ, மறுக்கவோ கூடாதா என்ன! தகுதியற்ற ஒருவருக்கு விருதோ, கவுரவமோ, பதவியோ அளிக்கப்படும்போது வாய்மூடி இருப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் இல்லையா? அதுதானே தொடர் தவறுகளுக்குக் காரணமாக விளங்குகிறது..!

மத்தியபிரதேச மாநிலத்தில் வழங்கப்படும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று இதைப் பற்றிப் பேசுகிறது:

உஜ்ஜயினில் ஆண்டுதோறும் இசைக் கச்சேரி நடப்பது வழக்கம். இதற்காக சிறந்த இசைக் கலைஞர்களை அழைத்துப்போய் பாட வைத்து கவுரவித்து அனுப்புவார்கள். இதில் ஒருவருக்கு ‘இசைச் சக்கரவர்த்தி’ என்று பட்டமளிப்பார்கள். அந்த இசை நிகழ்ச்சி நடைபெறப் போவதாக உஜ்ஜயினி அரசன் அறிவித்தான்.

தன் நாட்டில் இருந்து எந்த இசைக் கலைஞரைப் பாட வைப்பது என மன்னருக்கு யோசனையாக இருந்தது. மந்திரிகள் சில இசைவாணர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால், மன்னருக்கு அவர் களில் ஒருவரையுமே பிடிக்கவில்லை.

ஒருநாள் இரவு மன்னர் படுக்கையில் இருந்தபோது, கொசு ஒன்று அவரது காதைச் சுற்றி ரீங்காரமிட்டது. திடீரென மன்னருக்கு ஒரு யோசனை உருவானது. இவ்வளவு அழகாக பாடுகிறதே இந்தக் கொசு, இதை ஏன் நாம் அங்கீகரித்துக் கவுரவிக்கக் கூடாது என யோசித்தார்.

மறுநிமிடமே மந்திரிகளை அழைத்து ‘‘இந்த ஆண்டு நம் தேசத்தின் சார்பில் கொசுக்கள்தான் பாடப் போகின்றன!’’ என்றார். இதைக் கேட்ட மந்திரிகளுக்கு ‘இது என்ன முட்டாள்தனம்!’ எனத் தோன்றியபோதும், ‘‘ஆஹா பிரமாத மான விஷயம்! கொசுவைவிட சிறந்த வித்வான் யார் இருக்கிறார்கள்?’’ எனப் புகழாரம் சூட்டினார்கள்.

இதைக் கேட்ட மன்னர் சந்தோஷம் மிகுதியாக, தன் நாட்டு கொசுக்களுடன் போட்டி இட்டு பாடுவதற்கு யாராவது தயாரா என சவால்விட்டார்.

இது என்ன சோதனை என நினைத்த இசைக் கலைஞர்கள் ஒருவரும் உஜ்ஜயினி இசை விழாவுக்குப் போகவேயில்லை. தன் நாட்டு கொசுகளை எதிர்த்து பாட ஒருவருமே இல்லை என்பதால் மன்னர் கொசுக்களே நாட்டின் இசைச் சக்கரவர்த்தி என அறிவித்து சிறப்பு கச்சேரி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

என்னதான் கிரீடம் சூட்டினாலும், கொசு இசைவாணரா என்ன?!

கொசுக்கள் ஒன்று கூடி ‘ரீ ரீரீ’ என ரீங்காரமிட்டன. அதை மன்னரும் மந்திரிகளும் ‘‘ஆஹா என்னவொரு இசை!’’ என ஆரவாரம் செய்தார்கள்.

இந்த அபத்தத்தைத் தாங்கமுடியாத ஓர் இசை ரசிகர், அரங்கில் இருந்து எழுந்து சொன்னார்: ‘‘மன்னா! கொசுவின் இசையில் மெய்மறந்துப் போனேன். அதைப் பாராட்ட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்!’’

மன்னரும் அந்த இசை ரசிகரை பாராட்ட அனுமதித்தார்.

இசை ரசிகர் கொசுக்களின் அருகே போய், தன் இரண்டு கைகளையும் ஒங்கி அடித்தார். அவ்வளவுதான் கைகளுக்கு இடையே சிக்கிய கொசுக்கள் செத்து ஒழிந்தன.

இதைத் தொடர்ந்து இசை ரசிகர் அமைதியாக சொன்னார்:

‘‘முட்டாள்தனத்தின் முகத்தில் அறைவதற்கு ஒருவராவது வேண்டும்தானே!’’

அதைக் கேட்ட கூட்டம் இசை ரசிகர் செய்ததே சரியெனப் பாராட்டியது என அந்தக் கதை முடிகிறது.

கதையிலாவது கொசுக்கள் ‘தானே இசைச் சக்கரவர்த்தியாக வேண்டும்’ என ஆசைப்படவில்லை. மன்னரின் முட்டாள்தனம் அவர்களை இசைச் சக்கரவர்த்தியாக்கியது. ஆனால், இன் றைய சமூகச் சூழலில் கொசுக்கள், தங்களைத் தானே இசைச் சக்ரவர்த்தி என பட்டம் சூட்டிக்கொள்வதுடன், உண்மையான இசைவாணர்களின் காதுகளைச் சுற்றிச் சுற்றிவந்து ‘என்னை விட நீ ஒன்றும் பெரிய ஆள் இல்லை!’ என உளறுகின்றன.

அங்கீகாரம், விருதுகள், கவுரவங்கள் எல்லாமும் ஒருநாள் கூத்துதானே. அதை அடைவதற்கு எதற்கு இத்தனை கீழான வேலைகள்; துதி பாடல்கள்? தன் படைப்புத் திறனை நம்பும் ஒருவன், வேறு எந்த இழிசெயல்களிலும் ஒருபோதும் ஈடுபட மாட்டான்.

மகத்தான கோயில் சிற்பங்களைச் செய்தவன், தன் பெயரை அதில் போட்டுக்கொள்ளவில்லை. வானுயரக் கோபுரங்களைக் கட்டியவன் தன் பெயரை கல்வெட்டில் பொறித்துக்கொள்ளவே இல்லை. ஆனால், கோயிலில் டியூப் லைட் போட்டவன் தன் பெயரை அந்த டியூப் லைட்டின் அடியிலே எழுதி போட்டுக்கொள்கிறான். வெட்கமாக உணர வேண்டாமா? இப்படி எழுதலாமா எனக் கூச்சம் வேண்டாமா?

புகழ்ச்சிக்கு ஏங்குவது மனித இயல்பு என்கிறார்கள். அதற்காக இப்படி, எதையும் செய்து புகழ்பெறுவது என்பது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்லையா?

உண்மையான கலையோ, கலைஞர்களோ தாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பற்றி ஒருபோதும் புகார்பட்டியல் வாசிப்பதே இல்லை. தன் இடமும், நிலையும் அறியாத கொசுக்கள்தான் அனைவரது காதருகிலும் வந்து ரீங்காரம் பாடுகின்றன. பாவம் கொசுக்கள், அடுத்தவர் ரத்தம் குடித்து வாழப் பழகியவை. உழைப்பில் வாழ்வதன் பெருமைப் பற்றி அதற்கு எப்படி தெரியப் போகிறது?

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

இணைய வாசல்: இந்திய நாட்டுப்புறக் கதைகளை வாசிக்க - >http://bit.ly/2sVKgCn

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x