Published : 23 May 2017 10:07 AM
Last Updated : 23 May 2017 10:07 AM

கடவுளின் நாக்கு 46: நேர்மையின் அர்த்தம்!

’சமூகம் சீரழிந்துக் கிடக்கிறது. அதைப் பற்றி யாருக்காவது குற்றவுணர்வு இருக்கிறதா? ஒருவேளை அப்படியிருந்தால் அந்தக் குற்றவுணர்வை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் சொல்லுங்கள்’ என்று ஒரு கலந்துரையாடல் நிகழ்வின்போது ஒரு வாசகர் கேட்டார். அவர் அதை அவர் கேட்டவிதம் மிகுந்த ஆற்றாமையும் வருத்தமும் நிரம்பியிருந்தது.

கேட்டவருக்கு வயது 50-கும் மேல். 20 வயது இளைஞனிடம் இப்படியொரு கேள்வியே கிடை யாது. இதை தேவையற்ற ஒன்றாகவே கருதுவான். ஒருவேளை யாராவது இப்படி கேள்விகேட்டால் கூட ’என் தவறுகளுக்கே நான் பொறுப்பேற்பது இல்லை. யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் ஏன் குற்றவுணர்ச்சி அடைய வேண்டும்?’ என்று திரும்பக் கேட்பான். அப்படித்தான் இன்றையச் சூழல் இருக்கிறது.

தனி நபர்களுக்கு மனசாட்சியிருப்பது போல (உண்மையில் அப்படியொன்று இருக்கிறதா என்றே சந்தேகமாகயிருக்கிறது) சமூகத்துக்கும் மனசாட்சி இருக்கத்தானே செய்யும். அந்த பொது மனசாட்சியின் குரல் ஏன் இப்போது வெளிப்படுவது இல்லை? அந்தக் குரல் நுகர்வு சந்தையின் ஓலங்களுக்குள் ஒடுங்கிப் போய்விட்டதா?

’குற்றவுணர்ச்சி என்பதற்கு பதிலாக பொறுப்புணர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாமா’ என அந்த வாசகரிடம் கேட்டேன்.

பொறுப்புணர்ச்சியற்றவர்களுக்கு எப்படி குற்றவுணர்வு உருவாகும்? பொறுப்புணர்வு என்பது சட்டம் போட்டு மட்டும் உருவாக்கிவிடக்கூடியதா? ஏன், தன் பொறுப்பை பலரும் அலட்சியம் செய்கிறார்கள்? குற்றவுணர்ச்சி தொடர்பாக இந்தப் பிரச்சினையை அணுகும்போது, அது தொடர்பற்ற ஒன்றாக மாறிவிடுகிறது. அதுவே பொறுப்புணர்வு பற்றியதாக விவாதிக்கப்படும்போது ஒருவரின் கடமையாக மாறுகிறது இல்லையா. இன்று நம் முன் உள்ள பெரும் பிரச்சினை தங்களின் பொறுப்புணர்ச்சியைப் பலரும் மதிப்பதில்லை என்பதே!

பொதுக்காரியம், பொதுநலம், பொதுவிஷயம் எல்லாமும் இன்று தேவையற்றச் செயல்களாகக் கருதப்படுகின்றன. பொது என்ற சொல்லே சிலருக்கு அசூசையாக இருக்கிறது. பொது என்ற சொல் எவ்வளவு சிறியதாக இருக்கிறது? ஆனால், அது எவ்வளவு பிரம்மாண்டமான தோற்றம் கொண்டது. பொதுவிஷயங்களில் நமக்கு ஒரு பங்கு இருக்கிறது. நாம் அதை மறந்துவிடக்கூடாது என்றுதான் கடந்த தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளைச் சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள்.

இன்று பொது விஷயங்கள் எதைப் பற்றியும் யோசிக்கவோ, செயல்படவோ கூடாதென்று குடும்பம் கட்டுப்படுத்துகிறது. பொது விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறவன் முட்டாளாகக் கருதப்படுகிறான். பொது விஷயங்களை யாரோ பார்த்துக்கொள்வார்கள் என அனைவரும் நினைக்கிறார்கள். அந்த யாரோ என்பவர் யார்? ஏன் இந்த அலட்சியம்?

மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை யாரோ உருவாக்கித் தருவார்கள் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள். ஒருவேளை யாரோ அதற்கு முயற்சித்தால்கூட உறுதுணை செய்வது இல்லை. ஒன்றுகூடிப் போராடாமல் எந்த மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது.

பிரபஞ்சன் சிறுகதை ஒன்றில் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் தாலுகா அலுவலகத்துக்குச் சென்று தனக்கு அரசு வழங்கி வரும் தியாகி பென்ஷன் பணம் இனி வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க முயற்சிப்பார். எதற்காக என தாலுகா அதிகாரி கேட்டபோது, ’பையன் வேலைக்கு போய் சம்பாதிக்கிறான்; ஆகவே எனக்கு தியாகி பென்ஷன் வேண்டாம்’ என்பார்.

தாலுகா அதிகாரி ’அரசாங்கத்திடம் இருந்து ஒன்றை வாங்குவது கஷ்டம். அதைப் போய் வேண்டாம் என்கிறாயே, பணம்தானே வைத்துக் கொண்டு ஜாலியாக செலவு செய்…’ என்கிறார். அதற்கு தியாகி ’அப்படி செய்ய என்னால் முடியாது. அது தவறானது. எனக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறது. இந்தப் பென்ஷனை என்னால் ஏற்க முடியாது என்று வாதிடுகிறார்.

அதிகாரி அவரை பைத்தியம் எனத் திட்டியதோடு, நாலைந்துமுறை அலைய வைக்கிறார். முடிவில் தியாகி தனது மனசாட்சியின்படி பென்ஷன் பணம் வேண்டாம் என ஒப்படைத்துவிடுகிறார்.

இந்தக் கதையை ஒரு கல்லூரியில் கூடி வாசித்து விவாதித்தபோது, சுதந்திரப் போராட்ட தியாகின்னா அப்படித்தான் இருப்பார்கள் எனப் பலரும் கேலி செய்தார்கள். அதைக் கேட்டபோது நேர்மை என்ற சொல்லின் அர்த்தம் தெரியாத தலைமுறையாக இருக்கிறார்களே என வருத்தமாக இருந்தது.

பாலஸ்தீன நாட்டுப்புறக் கதை ஒன்று இதைப் பற்றிக் கூறுகிறது. காஸாவில் ஒரு துறவி இருந்தான். அவன் ஒரு வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒரு வீட்டின் மாடியில் இருந்து யாரோ குப்பையை அவன் தலையில் கொட்டிவிட்டார்கள். துறவி உடனே இது குறித்து நீதிசபையில் புகார் கொடுத்தான்.

குப்பையைக் கொட்டிய வீட்டுக்காரனை ஏன் இப்படி பொறுப்பற்று நடந்துகொண்டாய் என விசாரித்தார்கள். அவன் தான் செய்தது குற்றமில்லை. அந்தக் குப்பை பக்கத்துவீட்டுக்காரன் தன் மாடியில் கொட்டியது. அவனை விசாரியுங்கள் என்றான்.

பக்கத்துவீட்டுக்காரனை அழைத்து வந்தார்கள். அவன் வீதியில் உள்ள குப்பைத் தொட்டி நிரம்பி வழிகிறது. துப்பரவு செய்யவேயில்லை ஆகவே குப்பையைப் பக்கத்து வீட்டில் கொட்டினேன். நீங்கள் விசாரிக்க வேண்டியது துப்புரவு அதிகாரியை என்றான்.

துப்புரவு அதிகாரி வரவழைக்கபட்டான். அவன் இதில் என் தவறு ஒன்றுமே இல்லை. ஒரு வாரமாக மந்திரி வீட்டில் அவரது மகளது திருமண வேலை நடந்தது. ஆகவே, பணியாளர்கள் அனைவரும் அங்கே போய்விட்டார்கள். மேலும் அவர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி உள்ளதால் பாதி பேருக்கு மேல் வேலைக்கே வரவில்லை. ஆகவே, பொக்கிஷக் காப்பாளரும் மந்திரியுமே தவறு செய்தவர்கள். அவர்களை விசாரியுங்கள் என்றான்.

அவர்கள் இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்தார்கள். மந்திரி சொன்னார் ’என் வீட்டு திருமணத்துக்கு மன்னர் வருவதாகச் சொல்லியிருந்தார். ஆகவே, அதிக பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். இதில் என் தவறு ஒன்றுமில்லை. இது போலவே பொக்கிஷ காப்பாளரும் கஜானாவில் இருந்து பணம் அனுப்பப்படவில்லை. ஆகவே தவறு மன்னருடையது என்றார். குற்றம் மன்னருடையது என்பதால் மன்னரை விசாரிக்க அழைத்தார்கள்.

அவர் சொன்னார், ’யார் தலையிலோ யாரோ குப்பைப் போட்டதற்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? புகார் சொன்னவனைப் பிடித்து பத்து சவுக்கடி கொடுங்கள். இனி, இதுபோல அற்ப விஷயங்களைப் புகார் செய்ய மாட்டான்’.

மன்னன் சொன்னதை அந்த நீதிசபை ஏற்றுக்கொண்டது. குப்பை போடும் நேரத்தில் குறுக்கே வந்தது துறவின் தவறு என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, உடனடியாக அவருக்கு பத்து சவுக்கடி தரப்பட்டது என அந்தக் கதை முடிகிறது.

வேடிக்கை கதை என்றாலும், யாரும் தன் தவறுக்கு வருந்துவதில்லை; பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்; மேலும் சிறு தவறுகளுக்குப் பின்னால் அதிகாரத்தின் உச்சம் வரை தொடர்பிருக்கிறது என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது. நம்மை சந்தோஷப்படுத்துவது மட்டும் கதைகளின் வேலையில்லை. திருத்துவதும்தானே.

- கதைகள் பேசும் | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

இணைய வாசல்: >பாலஸ்தீன நாட்டுப்புறக் கதைகளை வாசிக்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x