Published : 04 Apr 2017 10:39 AM
Last Updated : 04 Apr 2017 10:39 AM

கடவுளின் நாக்கு 39: கோடையும் இனிதே!

கோடை பிறக்கப் போகிறது. இந்த ஆண்டு வெயில் மிகவும் அதிகமாக இருக்கக் கூடும் என்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டி லும் முந்தைய ஆண்டின் வெயிலை விட அதிகம் இருப்பதாகவே மக்கள் உணர்கிறார்கள். சலித்துக்கொள் கிறார்கள்.

12 மாதங்களில் அதிகம் வெறுக்கப் படுவது மே மாதம் மட்டுமே. கோடையைப் பெரும்பான்மையானவர்களுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, வெயிலின் உஷ்ணத்தைக் கண்டு பதறுகிறார்கள். குளிர்ச் சாதன அறையைவிட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை செய்கிறார்கள். காலம் காலமாக வெயிலில் நடந்து திரிந்து, வேலை செய்த இந்திய மக்களின் உடல்வாகை கடந்த 50 ஆண்டுகளுக்குள் அறிமுகமான குளிர்ச் சாதன வசதி மாற்றிவிட்டது. இன்று வெயிலை வெறுக்கிறார்கள். திட்டுகிறார்கள்.

அந்தக் காலத்தில் இருந்ததுபோல மரங்களும் நீர்நிலைகளும் இன்றில்லை. அதனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால், கோடை வெறுக்கப்படும் ஒன்றல்ல.

சிறுவயதில் கோடை எப்போது வரும் என காத்திருப்பேன். காரணம், அதுதான் விடுமுறைக் காலம். இரண்டு மாத காலங்கள் விளையாடவும், ஊர்சுற்ற வும், கூடிக் களிக்கவும் செய்யலாம். நாட்கள் போவதே தெரியாது.

கோடையில் ருசிப்பதற்கென்றே நுங்கு, வெள்ளரிக்காய், மோர், இளநீர், மாம்பழம் போன்றவை கிடைக்கும். வீதிக்கு வீதி தண்ணீர்ப் பந்தல் வைத்திருப் பார்கள். மண் பானையில் வெட்டிவேர் மணக்கும் தண்ணீரைக் குடித்தால் தொண்டையில் குளிர்ச்சி பரவும்.

கோடைக் காலத்தில்தான் திருவிழாக் கள் நடக்கும். பொருட்காட்சி நடை பெறும். இரவில் பொருட்காட்சியின் மினுங்கும் வெளிச்சத்தின் ஊடே சுற்றி யலைவதும், ராட்டினம் ஏறி மகிழ்வதும் பொருட்காட்சி கடையில் பந்து வாங்கி விளையாடியதும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

உச்சிவெயிலில் அதன் உஷ்ணம் மறந்து சிறுவர்கள் தெருவில் விளை யாடிக் கொண்டிருப்போம். பெரியவர் களில் சிலர் நிழலில் போய் விளையாடுங்கள் என்று திட்டுவார்கள். வேம்பின் நிழல் தன் அகன்ற கைகளை நீட்டி வரவேற்கும்.

இன்று வீதியில் விளையாடும் சிறுவர் களைக் காண்பது அபூர்வம். கோடை யிலும் சம்மர் கேம்ப் வகுப்புகளுக்கு போகிறார்கள். வீட்டுக்குள் வீடியோ கேம் ஆடுகிறார்கள். அல்லது கம்ப்யூட்டரில் நேரம் கழிக்கிறார்கள்.

கோடைக்கு என தனியே ஒரு குணம் இருக்கிறது. கோடையின் பகலுக்கு என்று விசேஷமான தன்மையும் இருக்கிறது. இன்றுள்ள கோடை காலி செய்யப்பட்ட வீட்டை போல வெறிச்சோடியிருக்கிறது. நினைவிலுள்ள கோடை என்பது சந்தோஷத்தின் ஊற்றாகயிருக்கிறது. கோடைக் கால மழை உக்கிரமானது. அதன் வேகம், சீற்றம் கொண்டதாக இருக்கும். எப்படியும் சில நாட்கள் மழை பெய்துவிடும். ஆகவே, நீந்திக் குளிப்பதற்கு கண்மாய்க்கோ, குளத்துக்கோ போகலாம்.

இன்று மழைக்காலத்தில் கூட மழை யைக் காண முடியவில்லை. கோடையை விட்டு தப்பி எங்காவது வெளியேறிப் போய்விட வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். மலை வாழிடங்களே புகலிடம். ஆனால், கோடையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக் குப் போனால் சந்திக்க வேண்டிய நெருக்கடிகள் மிக அதிகம். சந்தைக் கடை போலாகியிருக்கும்.

தார் பாலைவனத்துக்கு நான் போயி ருக்கிறேன். வெயிலின் உச்சம் அது. ஆனால், அங்கே வசிப்பவர்களில் ஒருவர் கூட வெயிலைப் பற்றி புகார் சொல்வ தில்லை. எரிச்சல் அடைவதில்லை. பாலைவனச் சூரியனை அன்றாடம் வழிபடுகிறார்கள். வெக்கையை தணித் துக் கொள்ள தயிர், மோர், நெய் அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.

தகிக்கும் பாலையின்ஊடே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருக்கும் கிழவர்கள் நிலா வெளிச்சத்தில் நடந்து போவதைப் போல மெதுவாக போகிறார்கள். வெயிலுக்குப் பழகிய மனிதர்கள் அதன் மீது கோபம் கொள்வதில்லை.

இயற்கையை அழித்துவிட்டு, விவ சாயத்தை ஒழித்துவிட்டு, நீர்நிலைகளை மூடி, வீடுகளை கட்டி, மாநகரங்களை உருவாக்கினால் கோடை நிச்சயம் கொடுமையாகத்தான் இருக்கும்.

டேனிஷ் கதைகளில் ஒன்று, ஆண்டில் எது சிறந்த மாதம் என்பதைப் பற்றி கூறுகிறது. அடர்ந்த ஒரு காட்டில் ‘12 மாதங்கள்’ வசித்து வந்தன. மாதங்களுக்குள் யார் சிறந்த மாதம் என்றொரு பிரச்சினை. நானே சிறந்தவன் என தங்களுக்குள் சண்டையிட்டன.

அப்போது இரண்டு பெண்கள் காட்டுக்குள் விறகு பொறுக்குவதற்காக சென்றார்கள். அவர்களை வழிமறித்த 12 மாதங்களும் எங்களில் சிறந்தவர் யார் என்பதை நீங்கள்தான் முடிவு செய்து சொல்ல வேண்டும் என்றன.

ஒருத்தி சொன்னாள்: ‘‘எல்லா மாதங்களும் மோசமானவையே. மழை, வெயில், பனி, காற்று அத்தனையும் நோயை உண்டாக்கக் கூடியவை. எனக்கு எந்த மாதத்தையும் பிடிக்காது. நான் வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டேன்’’

மற்றவள் சொன்னாள்: ‘‘மழையும் வெயிலும் காற்றும் பனியும் இயற்கை அளிக்கும் பரிசு. அவற்றை பெறுவதற்காக நான் காத்துக்கிடப்பேன். ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு கொண்டது. ஆகவே, 12 மாதங்களும் விசேஷமானவையே. இதில் மிகச்சிறந்த மாதம் என ஒன்றுகிடையாது என்றாள்.

இதைக் கேட்ட 12 மாதங்களும், அவர்களுக்கு நன்றி சொல்லி ஆளுக்கு ஒரு பெட்டியைப் பரிசாகத் தந்தன. அதில் என்ன இருக்கிறது என அவர்கள் கேட்டபோது, வீட்டுக்குப் போய் திறந்து பாருங்கள்!’’ என்றன.

மாதங்களைப் பாராட்டியவள் வீட்டுக்குப் போய் பெட்டியைத் திறந்து பார்த்தாள். உள்ளே ஒரு தங்க நாணயம் இருந்தது. அதைக் கண்டு அவள் சந்தோஷம் அடைந்தாள். மாதங்களை வெறுத்தவள் பெட்டியைத் திறந்து பார்த்தாள். உள்ளே நாற்றம் அடிக்கும் சாணத்தில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. அவள் மரப் பெட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு மற்றவளிடம் போய் புகார் சொன்னாள்.

அதற்கு மாதங்களைப் பாராட்டியவள் பதில் சொன்னாள்: நாம் இயற்கையை நேசித்தால், அது உயரிய பரிசை நமக்குத் தருகிறது. அதே நேரம் இயற்கையை வெறுப்பவர்களுக்கு, அது நோயை உருவாக்கிவிடுகிறது.

மழைக் காலம் மட்டுமில்லை; கோடைக் காலமும் இயற்கையின் பரிசே. அதை உணர்ந்து கொண்டு கோடையை எதிர்கொள்ளவும், அதற்கேற்ற உணவை உட்கொள்ளவும், உடைகளை அணிந்து கொள்ளவும் கூடிக் களிக்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் கூடிக் கதைகள் பேசவும், விரும்பியதைப் படிக்கவும், சேர்ந்து விளையாடவும், தாத்தா - பாட்டி வீடுகளுக்குப் போய் அவர்கள் அன்பை முழுமையாக உணரவும் கோடையே வழிகாட்டுகிறது. பெரியவர்களாகிய நாம் அதற்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதே முக்கியம்.

இணைய வாசல்: >டேனிஷ் கதைகளை அறிந்துகொள்ள

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x