Published : 28 Mar 2017 10:52 AM
Last Updated : 28 Mar 2017 10:52 AM

கடவுளின் நாக்கு 38: உழைப்பின் உன்னதம்!

ஒரு நேரத்தில் ஒரு வேலையை ஒழுங்காக செய்து முடிக்கவே நம்மால் இயலவில்லை. ஆனால், சிலர் ஒரே நேரத்தில் நாலைந்து வேலைகளை மிகச் சரியாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறார் கள். இருந்த இடத்தில் இருந்தே பல வேலைகளில் கச்சிதமாகச் செய்யும் சிலரை நான் அறிவேன்.

விவசாயிகளின் இயல்பு ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. ஒவ்வொன்றிலும் அவர்களின் கவனம் முழுமையாகவே இருக்கும்.

பயிற்சி செய்தால் ஒருவரால் ஒரு நேரத்தில் நூறு வேலைகளில் ஈடுபட முடியும் என்கிறது அவதானக் கலை. எந்த ஒன்றிலும் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாதபடியான கவனச் சிதறல் இன்று எல்லோருக்கும் வளர்ந்துவிட்டது. செல்போன் அடிக்கிறதோ இல்லையோ, ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அதை எடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அரைமணி நேரம் வேலை செய்துவிட் டால் ஒரு மணி நேரம் ஒய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

தன் திறனை முழுமையாகப் பயன்படுத்த பெரும்பான்மையினர் விரும்புவதே இல்லை. கட்டாயப்படுத்தி, தண்டனை தரப் போவதாக மிரட்டினால் வேலை நடக்கிறது. அப்போதும் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவதால் செய் நேர்த்தியில்லாமல் போய்விடுகிறது.

நிர்வாகத் திறமையின்மை என்பது நாட்டின் பிரச்சினை மட்டுமில்லை; வீட்டிலும் இதுவே முக்கிய பிரச்சினை. பொருளாதாரத்தையும் நிர்வகிக்கத் தெரியவில்லை. காலத்தையும் நிர்வகிக் கத் தெரியவில்லை. ஒத்திப்போடுவதும், அடுத்தவர்கள் செய்வார்கள் என விலக்கி வைப்பதும், செய்ய மறுப்பதற் கான காரணங்களை உருவாக்கிக் கொள்வதுமே நடைமுறையாகியிருக் கிறது.

அடுத்தவர் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள் இன்றில்லை. ஒருவேளை அப்படி ஒருவர் வேலை செய்தால் அவரை உலகம் முட்டாளாகக் கருதுகிறது. ஆனால், முந்தைய காலங்களில் உழைப்பாளிகள் முழுமையாக உழைத்தார்கள். காலை 6 மணிக்கு வேலைக்கு வருபவர்கள், சூரிய அஸ்தமனம் வரை உடல் நோகப் பாடுபட்டார்கள். ஆனால், போதுமான கூலி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று எல்லாத் துறைகளிலும் அடிப்படை ஊதியம் உயர்ந்திருக்கிறது. ஆனால், கடினவேலைகள் செய்வதற்கு ஆள் கிடைக்காமல்தானிருக்கிறது.

துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

நெசவாளி சொன்னான்: ‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி. ஒரு தேசத்தை நிர்வாகம் செய்வதற்கு இப்படியானவர்களே தேவை என்று முடிவு செய்த அரசன், அந்த நெசவாளியைத் தனது நாட்டின் மந்திரியாக நியமித்தான் என முடிகிறது கதை.

இயற்கையாகவே பெண்கள் மல்டி-டாஸ்கிங் செய்யக் கூடியவர்கள். அதை தனித்திறனாக ஒருபோதும் அவர்கள் கருதுவதில்லை. எந்த வேலை செய்வதாகயிருந்தாலும் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நம் கவனம் சிதறுகிறது என்கிறார்கள். இது இயல்பாக நடக்கும் விஷயம். ஆனால், அதை சாக்காக வைத்துக்கொண்டு நாம் எந்த வேலையிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வதில்லை.

எது நம்மை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது? நிச்சயம் திறமையின்மை இல்லை. போதும் என்ற நினைப்பு. செய்து என்ன ஆகப்போகிறது என்ற விரக்தி. எதற்கு செய்ய வேண்டும் என்ற வீராப்பு. செய்யாவிட்டாலும் சம்பளம் கிடைக்கத்தானே போகிறது என்ற நம்பிக்கை. இப்படி நூறு காரணங்கள் இருக்கின்றன.

பெரும்பான்மையினர் வேலைக்குச் செல்வதற்கு மேற்கொள்ளும் பயணம், எத்தனிப்புகளிலே தனது எனர்ஜியில் பாதியை இழந்துவிடுகிறார்கள். செய்கிற வேலையைப் பலரும் விரும்புவது இல்லை. கட்டாயத்தின்பேரில் செய்வதாக நினைக்கிறார்கள்.

ஒரு வேலையைக் குறிப்பிட்ட காலத் துக்குள் செய்து முடிக்காமலோ, செய்ய விரும்பாமலோ போகும்போதுதான் லஞ்சம் தரவேண்டிய சூழல் உருவாகி றது. வெளிப்படையான நிர்வாகம் என்பது லஞ்சத்தைத் தடுத்துவிடக்கூடியது.

கதையில் வரும் நெசவாளி தன் வீடு, தன் வேலை என்று மட்டும் நினைக்கவில்லை. தனக்குத் தெரிந்த விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறான். இந்த மனப்பாங்கு படித்தவர்கள் எத்தனை பேரிடம் காணப்படுகிறது? சமூக வலைதளங்களை, இதுபோன்று கற்றுத் தருவதற்கு நாம் பயன்படுத்தத் தொடங்கினால் அதன் மூலம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.

தொழில்நுட்பம் நமது அறிவுத் திறனை, வேலையை வளர்த்துக்கொள் வதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. அதை, ஆக்க பூர்வமாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நமது கடமை.

இணைய வாசல்: >துருக்கி நாட்டுக் கதைகள்

- கதைகள் பேசும்... | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x