Published : 14 Mar 2017 10:27 AM
Last Updated : 14 Mar 2017 10:27 AM

கடவுளின் நாக்கு 36: அறிவின் துணை!

‘ஒரு வில்லாளி அம்பை எய்கிறான். அது இலக்கைத் தாக்கவில்லை என்றால் அவன் தனது அம்பைக் குற்றம் சொல்வதில்லை. தவறு தன் னுடையது என்று ஒப்புக்கொள்கிறான். அது போலவே, அரசும் அதன் நலத் திட்டங்கள் உரியவருக்குச் சென்று சேர வில்லை என்றால் தனது இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். மாறாக, தவறு மக்களுடையது எனக் குற்றம் சாட்டக்கூடாது. அப்படி குற்றம்சாட்டி னால் அது மோசமான அரசாங்கமாக கருதப்படும்’ என்கிறார் கன்பூசியஸ்.

‘‘உங்களின் உயர்வுக்கான காரணம் எது?’’ என்று கேட்டதற்கு, ‘‘அனுபவங் களில் இருந்து பெற்ற அறிவே முதல் காரணம்!’’ என்றார் கன்பூசியஸ்.

அனுபவங்களைப் பெற்ற அத் தனை பேரும் வாழ்வில் உயர்ந்து விடுவதில்லை. அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவரே உயர் நிலையை அடைகிறார்கள். அதற்கு அறிவை விருத்தி செய்துகொள்வதும், கடின உழைப்பும், தெளிந்த சிந்தனை யும், நல்வாக்கும் அவசியமாகும். உண்மையில் பாமர மக்களின் அறி யாமையை விடவும் படித்தவர்களிடமே அறியாமை அதிகமிருக்கிறது.

‘சமயோசிதம் உள்ளவன் வாழ்க் கையில் வெற்றி பெறுவான்!’ என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த அறிவுரையை விளக்குவதற்கு பள்ளி நாட்களில் கதைகளும் சொல்லித் தந்தார்கள்.

அந்தக் காலத்தில் வெளியூர் பயணம் செய்கிறவர்களுக்கு, ‘‘போகிற இடத்தில் சமயோசிதமாக நடந்துகொள்ளுங்கள்!’’ என்று ஆலோசனை சொல்லி அனுப்பி வைப்பார்கள். நல்ல காரியம் பேசப் போகிற இடத்தில் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும் என் பதற்காகவே அனுபவசாலி ஒருவரை உடன் அழைத்துக்கொண்டுப் போவார் கள். இன்றைய தலைமுறையினரிடம் ‘‘சமயோசிதமாக நடந்துகொள்’’ என்று யாரும் யாரையும் பார்த்துச் சொல்வதாகத் தெரியவில்லை.

சமயோசிதத்தின் வரலாறு மிக நீண்டது. தன்னை அச்சுறுத்தும் வலிமையுள்ளவனைச் சமயோசிதம் மூலம் எளியவர்கள் வென்ற நிகழ்ச்சிகள் ஏராளமிருக்கின்றன. உண்மையில் சம யோசிதம் என்பது அனுபவத்தில் இருந்து பிறந்த வழிகாட்டுதல். நெருக் கடியில் இருந்து தப்பிக்க மனிதர்கள் சுயமாகக் கண்டறிந்த தீர்வுதான் அது. பீர்பாலும், முல்லாவும் நடந்து கொண்ட முறைகள் பெரிதும் சமயோசிதத்தை அடிப்படையாகக் கொண்டவைகளே.

அரபுக் கதை ஒன்றில் குடுவை ஒன்றில் அடைபட்டு கிடந்த பூதம் ஒன்றை, ஒரு வணிகன் தெரியாமல் திறந்துவிட்டு விடுகிறான். அந்த பூதம் எந்த வேலை கொடுத்தாலும் நொடியில் செய்து முடித்துவிடும். அதே நேரம் வேலை கொடுக்காவிட்டால் எஜமான னைக் கொன்றுவிடும். வணிகன் அந்த பூதத்தை தனக்கு ஒரு மாளிகை கட்டும் படி கேட்டுக்கொண்டான். மறுநிமிசமே எஜமானன் சொன்னதுபோலவே ஒரு மாளிகையைக் கட்டி முடித்துவிட்டது. நீருற்றுகள் கொண்ட வசந்த மண்டபத்தை உருவாக்க கட்டளையிட்டான். அதையும் நிமிசத்தில் செய்து முடித்துவிட்டது பூதம். இப்படி அவன் இட்ட கட்டளைகளை எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் செய்துமுடித்துவிட்டு, ‘அடுத்து என்ன வேலை?’ எனக் கேட்டது அந்த பூதம்.

வணிகன் தடுமாறிப் போனான். அதற்கு என்ன வேலை கொடுப்பது எனப் புரியவில்லை. வேலை கொடுக்கா விட்டால் தனது உயிர் போய்விடுமே என பயந்து நடுங்கினான். அப்போது வணிகனின் மனைவி ‘‘இவ்வளவுதானா? இதற்குப் போய் ஏன் பயப்படுகிறீர்கள்?’’ எனக் கூறி, தனது சுருண்ட தலைமுடியில் ஒன்றை பூதத்திடம்கொடுத்து, ‘ ‘இதை நேராக்கிக் கொடு!’’ என்றாள்.

பூதம் எவ்வளவு முயன்றாலும் சுருள் முடி நேராகவில்லை. பூதம் தன் னால் அந்த வேலையை செய்யமுடிய வில்லை என்று ஒப்புக்கொண்டுத் தோற்றுப்போனது. இந்தக் கதையில் வரும் பெண் செய்வதுதான் சமயோசி தம். அவள் பெரிய கட்டளைகள் எதையும் இடவில்லை. ஆனால் சாதுர்யமாக நடந்துகொண்டு பூதத்தைத் தோற்கடித்துவிட்டாள்.

நடைமுறை வாழ்க்கையில் இது போன்ற யோசனைகள்தான் பிரச்சினை களில் இருந்து நம்மைக் காப்பாற்றக் கூடியவை. எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு இருக்கிறது. எப்படி அதை தீர்த்துக்கொள்வது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நம்மோடு இருப்பவர்களில் ஒருவர் அதை எளிதாகத் தீர்த்துவிட முடியும். ஆகவே, நெருக்கடியின்போது ஆலோ சனை கேட்பது அவசியமாகிறது. சமயோசித அறிவு என்பதை மாற்று கோணத்தில் எதனையும் பார்ப்பது என்றும் பொருள்கொள்ளலாம்.

கெட்டிகாரத்தனம் கொண்ட பலரும் கூட சமயோசிதம் இல்லாமல் நடந்து கொள்வதால் தோல்வியடைந்துவிடு கிறார்கள். சமயோசிதம் என்பது அறிவை சாதுர்யமாகப் பயன்படுத்தி செயலாற்றுவதாகும். அதே நேரம் சந்தர்ப்பவாதிகள் மற்றவர் செய்த வேலையை, தான் செய்ததாகச் சொல்லி குறுக்குவழியில் ஒன்றை அடைய முயற்சிக்கிறார்கள். சந்தர்ப்பவாதம் என்பது ஒருபோதும் சமயோசித மாகாது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை ஒன்றிருக்கிறது. அதில், காளி கோயிலில் ஒருநாள் பிரசாதமாக தருவதற்கு லட்டு பிடித்துக்கொண்டிருந்தார்கள். எங்கிருந்தோ சாரை சாரையாக எறும்புகள் லட்டை நோக்கி வரத் தொடங்கின. லட்டு பிடித்துக் கொண்டி ருந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ‘‘எறும்பை கொல்லாமல் எப்படி விரட்டுவது?’’ என ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

‘‘எறும்புகள் வரும் வழியில் சர்க்கரையால் ஒரு வட்டம் போடுங்கள். இனிப்பைத் தேடி வரும் எறும்புகள் அதை சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். லட்டை நோக்கி வரவே வராது!’’ என்று சொன்னார் ராமகிருஷ்ண பரம்ஹம்சர்.

பரமஹம்சர் சொன்னதைப் போலவே எறும்புகள் வரும் வழியில் சர்க்கரை யைக் கொண்டு பெரிய வட்டம் போடப்பட்டது. லட்டை நோக்கி சாரை சாரையாக படையெடுத்து வந்த எறும்புகளெல்லாம் வழியில் இருந்த சர்க்கரைத் துகள்களைக் கண்டதும், அதை இழுத்துக்கொண்டு போகத் தொடங்கின. பிரச்சினை தீர்ந்தது.

இதைப் பார்த்துக்கொண்டே இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘‘மனிதர் களும் இந்த எறும்புகளைப் போன்ற வர்களே. தாங்கள் அடைய நினைத்த ஒன்றை விட்டுவிட்டு, வழியில் கிடைப் பதே போதும் என்று நினைத்து விடுகிறார்கள். சர்க்கரை வேண்டாம் லட்டுதான் வேண்டும் என்று ஒரு எறும்பும் முனைந்து செல்வதில்லை. கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடைந்துவிடுவதே நமது பழக்கம். சர்க்கரைத் துகள் அளவு சந் தோஷமே போதும் என்று பலரும் நினைத்துவிடுகிறார்கள். லட்டு போல முழுமையான சந்தோஷத்தை நாடி வெகுசிலரே முனைகிறார்கள்!’’ என்றார்.

அரபுக் கதையும் சரி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையும் சரி… எளிய தீர்வுகளின் வழியே பிரச்சினை யில் இருந்து விடுபட வழிகாட்டு கின்றன. அருளுரைகள், உபதேசங் கள். ஞானமொழிகள் மட்டும் மக் களுக்கு வழிகாட்டுவதில்லை. கதை களும் நமக்கான தீர்வுகளை அடை யாளம் காட்டுகின்றன. அதைப் புரிந்து கொள்வதும் பின்பற்ற வேண்டியதும் நமது கடமையாகும்.

இணைய வாசல்: >ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதைகளை அறிந்துகொள்ள

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x