Published : 01 Nov 2016 11:51 AM
Last Updated : 01 Nov 2016 11:51 AM

கடவுளின் நாக்கு 17: மழையை வரவழைப்பவர்கள்!

நான் சிறுவனாக இருந்தபோது எப்போது மழை வரும் எனக் காத்திருப்பேன். மழை பெய்யத் தொடங்கியதும் காகிதக் கப்பல் செய்து மிதக்கவிடுவேன். தண்ணீர்த் துளிகளைச் சுமந்து செல்லும் அந்தக் கப்பல் தடுமாறி நகர்ந்து மூழ்கிப் போய்விடும். மழை வெறித்த பிறகு, நனைந்து கிடக்கும் காகிதக் கப்பலைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும்.

காகிதக் கப்பல் செய்வதில் சிறார்களுக்கு இடையே போட்டி உருவாகும். காகிதத்தில் பெரிய கப்பலை செய்துவரும் சிறுவன், அதுதான் வேகமாக போகும் என நம்புவான். ஆனால், சிறிய கப்பலை பெரிய கப்பலால் முந்தமுடியாது என்பதே மழையின் விதி.

தன் பெயர் எழுதிய காகிதக் கப்பலை நீரோடையில் விடும் அனுபவம் பற்றி மகாகவி தாகூர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சிறந்த கவிதை அது. இன்றைக்கு மழை பெய்யும் நாட்களில் சிறுவர்கள் எவரும் காகிதக் கப்பல் செய்து தரும்படி கேட்பதில்லை. அவர்களும் கப்பல் செய்து தண்ணீரில் விடுவதில்லை. ‘‘மழை பெய்கிறது… ஜன்னலை மூடி வையுங்கள்!’’ என அவர்களே முதற்குரல் தருகிறார்கள்.

மழையை வேடிக்கை பார்ப்பது மனிதனின் ஆதிகுணம். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் வியப்பு தீரவே இல்லை!

ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடம் ‘ரெய்ன் மேக்கர்’ எனப்படும் மழையை வரவழைப்பவர் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. வானத்துடன் பேசி மழையை வரவழைக்கும் இதைப் போன்ற மாய மனிதர்கள் பல்வேறு பழங்குடிகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் மழை பெய்ய வைப்பதற்காக பணம் வாங்குவதில்லை. அதை ஒரு சேவையாக, கடமையாகவே செய்கிறார்கள்.

மழையற்ற காலத்தில் இவர்களை அழைத்துவந்து பூஜை செய்தால் மழையை வரவழைத்துவிடுவார்கள் என பழங்குடிகள் நம்புகிறார்கள். ‘‘மழையை வரவழைக்கும் அந்த மனிதன் அரூபமாக உள்ள தனது மூதாதையர்களை அழைத்து, வானத்தில் இருந்து மழையை வரவழைக்கிறான்’’ என்கிறார்கள்.

அவன் நடந்து போகும்போது தலைக்கு மேலே மழை மேகங் கள் கூடவே போகுமாம். எந்த இடத்தில் நின்று ‘‘மழை பெய்…’’ என்று அவன் சொன்னாலும் உடனே மழை பெய்து விடுமாம்.

‘‘அவன் மாய மந்திரம் மூலம் இதை செய்கிறான் எனச் சொன்னாலும், அதன் பின்னே ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. மழை வரவழைப்பவன் சீதோஷ்ண நிலை மாற்றங்களைப் பற்றி துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறான். என்ன செய்தால் மேகங்களை ஒன்றுதிரட்ட முடியும் என அறிந்துள்ள ரகசியமே இதற்குக் காரணம்…’’ என்கிறார் மானுடவியலாளர் எரிக் வில்லியம்.

மகாபாரத்தில் அங்கதேசம் மழையில்லாமல் போய் காய்ந்து வறண்டு போகிறது. இதற்கு ‘பெண் அறியாத ஒருவன் நாட்டிற்கு வந்தால் மழை பெய்யும்…’ என தீர்வு சொல்கிறார்கள். ரிஷிகுமாரானாகிய ரிஷ்யசிருங்கன் என்பவன் பெண் அறியாதவன். அவனை மயக்கி அங்க தேசத்துக்கு அழைத்து வருகிறாள் ஒரு பெண். உடனே அங்கே மழை பெய்கிறது. மழை பெய்வதற்கான ஐதீகங்களில் இதுவும் ஒன்று. இப்படி மழையைப் பற்றி நிறைய கதைகள் உள்ளன.

அதில் ஆஸ்திரேலியப் பழங்குடி கதை ஒன்று, பூமிக்கும் வானுக்கும் நடந்த சண்டையைப் பற்றிச் சொல்கிறது

பல ஆண்டுகளாக மழையற்றுப் போய் பூமி வறண்டுபோனது. ஒவ்வொரு நாளும் பூமியானது வானத்தைப் பார்த்து மழை பெய்யும்படி கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், வானம் அதைப் பொருட்படுத்தவே இல்லை. முடிவில் ஒருநாள் பூமி, ‘‘நீயாக மழை பெய்யப் போகிறாயா? இல்லை, உன்னோடு போர் தொடுத்து உன்னிடமிருந்து மழையைக் கைப்பற்ற வேண்டுமா?’’ எனக் கேட்டது.

அதற்கு வானம் ‘‘உன்னால் முடிந்தால் என்னோடு போரிட்டுப் பார்…’’ என்றது. உடனே பூமி ‘‘வானின் மீது நாம் போர் தொடுப்போம்… வாருங்கள்’’ என சகல மரம், செடி, கொடிகள் மற்றும் விலங்குகளை எல்லாம் ஒன்றுசேர்த்தது.

ஒன்று சேர்ந்த அவற்றால் வானத்துக்கு எப்படிச் செல்வது? எப்படி மழையைக் கைப்பற்றுவது என்கிற விவரம் தெரியவில்லை. அப்போது கரடி ஒரு யோசனை சொன்னது:

‘‘பூமியில் உள்ள கற்களை எடுத்து வானை நோக்கி வீசுவோம். வானம் கிழிந்து மழை கொட்ட ஆரம்பித்துவிடும்!’’

கரடியின் யோசனை சரியெனப்பட்டது. உடனே பூமியில் இருந்த கற்களை எடுத்து வானத்தை நோக்கி வீச ஆரம்பித்தன. இரவு பகலாக இந்த யுத்தம் நடந்தது. ஆனால், வானில் சிறுகீறல் கூட விழவில்லை. மாறாக வானை நோக்கி எறியப்பட்ட கற்கள் பூமியில் வந்து விழுந்து நிலமெங்கும் பள்ளமானது. இதனால் பூமி வருத்தம் கொண்டது. ‘‘தண்ணீர் இல்லாமல் எப்படி வாழ்வது..?’’ எனப் புலம்பியது. பூமியின் அழுகை குரலைக் கேட்ட கடவுள், பூமியிடமும் வானத்திடமும் ‘‘ஏன் சண்டை போடுகிறீர்கள்’’ என்று விசாரித்தார்.

அதற்கு வானம் சொன்னது: ‘‘பூமியில் இருந்து வெளியாகும் புகையும், தூசியும் என்னைப் பாதிக்கிறது. என் நலனைப் பற்றி பூமி யோசிப்பதே இல்லை!’’

அதற்கு பூமி சொன்னது: ‘‘இந்த வானம் என்னை மதிப்பதே இல்லை. ஒன்று, மழையைக் கொட்டித் தீர்க்கிறது. அல்லது மழை பெய்வதே இல்லை. அதுதான் எங்களுக்குள் சண்டை!’’

வானம், பூமி இரண்டின் குற்றச்சாட்டுகளையும் கேட்ட கடவுள் சொன்னார்:

‘‘இனிமேல் இருவரும் பரஸ்பர அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும். பூமியைக் காக்க வேண்டியது வானத்தின் கடமை; வானத்தைக் காக்க வேண்டியது பூமியின் பொறுப்பு!’’

அன்று முதலே பூமியில் இயற்கை பல்கி பெருகியது. வானமும் பொலிவுடன் ஒளிரத் தொடங்கியது.

வானுக்கும் பூமிக்கும் இடையில் போடப்பட்ட கடவுளின் ஒப்பந்தமானது, இன்று மனிதனால் வீசி எறியப்பட்டுவிட்டது. உலகெங்கும் வானையும் பூமியையும் சுயலாபத்துக்காக சிதைத்தும் அழித்தும் வரும் இச்சூழலில் இந்தக் கதை முக்கியமானதாகப்படுகிறது.

கி.ராஜநாராயணனின ‘நிலைநிறுத்தல்’ என்ற சிறுகதையில் மழை பெய்யாமல் போய் விவசாயிகள் படும்கஷ்டத்தைக் கண்ட மாசாணம், மழை பெய்யவேண்டி உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிடுவான். மழை பெய்தால் மட்டுமே தனது உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என உறுதியாக இருக்கிறான் மாசாணம். அவனது மன உறுதிக்கு அடிபணியும் விதமாக இறுதியில் மழை வருகிறது.

மனிதர்கள் அழைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கை உலகெங்குமே இருக்கிறது. ஆனால், மாசாணம் போல ஊரின் நலம்பொருட்டு தன்னை வருத்திக் கொள்ளும் எளிய மனிதன்தான் இன்று நம்மிடயே இல்லை.

மழையில்லாமல் படும் பாடு ஒரு பக்கம் என்றால், பெய்த மழை நீரை முறையாக தேக்கி வைத்து பாதுகாக்கவும். பயன்படுத்தவும் அக்கறையற்று இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

சில நாட்களுக்கு முன்பு ‘நேஷனல் ஜியாகிரபி’ சேனலில் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பற்றி ஆவணப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் நகருக்கு வரும் ஆதிவாசி ஒருவன், பாட்டிலில் அடைத்து தண்ணீர் விற்கப்படுவதைக் கண்டு பயந்துபோய் தண்ணீரிடம் மன்னிப்பு கேட்கிறான். அவன் என்ன பேசுகிறான் எனப் புரியவில்லை. ஆனால், அந்தக் கண் களில் பெருங்குற்றத்தை கண்டுவிட்ட பரிதவிப்பு இருந்தது.

மனசாட்சி உள்ளவர்கள் அப்படிதான் நடந்துகொள்வார்கள். நாம்தான் எதையும் விற்க தயங்காதவர்கள் ஆயிற்றே. நமக்கு இது வெறும் வேடிக்கை காட்சியாகத்தான் தோன்றும்!

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

இணையவாசல்: >சர்வதேச சிறார் கதைகளை அறிந்து கொள்ள உதவும் இணையதளம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x