Published : 30 Aug 2016 09:41 AM
Last Updated : 30 Aug 2016 09:41 AM

கடவுளின் நாக்கு 10: முதல் கண்ணீர்!

நீங்கள் எப்போது முதன்முதலாகக் கண்ணீர்விட்டீர்கள்? எதற்காக கண்ணீர் விட்டீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?

பெரும்பான்மையினருக்கு நினைவிருக்காது. ஆனால், மறக்க முடியாதபடி கண்ணீர் வடித்த சம்பவம் ஏதாவது ஒன்று நிச்சயம் மனதில் இருக்கும். சிறுவர்கள் அதிகம் அழக்கூடியவர்கள். கோபித்துக் கொண்டாலோ, அவர்கள் ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காமல் போய்விட்டாலோ, உடனே கதறி அழுகையினை ஆயுதமாக்கி விடுகிறார்கள். பெரியவர்களிலும் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள அழுபவர்கள் இருக்கிறார்கள்.

சிரிப்பும் அழுகையும் இரட்டைப் பிள்ளைகள். அதிகமாகச் சிரித்தால் முடிவில் அழுதுவிடுவோம். சிரிப்போ, அழுகையோ அது வெளிப்படும் இடமும், வெளிப்படும் விதமும் நேரமும் முக்கியமானது.

வடதுருவப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அழுகை எப்படி உருவானது என்பதைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்கள்.

வடதுருவப் பிரதேசங்களில் உள்ள பூர்வகுடி களை இனுயிட் (Inuit) என்று அழைக்கிறார்கள், இனுயிட் என்றால் மனிதர்கள் என்று அர்த்தம். அவர்கள் குடியிருக்கும் பகுதி முதல்தேசம் (First Nation) என்று அழைக்கப்படுகிறது,

எஸ்கிமோ என்று நாம் குறிப்பிட்டு வந்த சொல் தவறானது என்று இப்போது விலக்கப்பட்டிருக்கிறது, காரணம், எஸ்கிமோ (Eskimo) என்பதற்கு ’பச்சை மாமிசம் உண்பவர்கள்’ என்று அர்த்தம். ஆகவே, அது பூர்வகுடிகளை இழிவுபடுத்துகிறது என்று கனடாவாசிகள் அதைப் பயன்படுத்துவதில்லை.

கனடாவின் துருவப் பகுதியில் யூபிக், இனுயிட் என (Yupik, Inuit) என இரண்டுவிதமான பூர்வகுடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கான பொதுச் சொல்லாக இனுயிட் என்ற சொல் பயன்படுத்தபடுகிறது,

உறைபனிப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் என்பதால் இவர்களது பண்பாடு தனித்துவமானது. இனுயிட் மக்களின் கலை, பண்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்து அறிந்துகொள்ள சிறப்பு மியூசியம் ஒன்று டொரன்டோவில் உள்ளது. அதை நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.

இனுயிட் மக்களின் வேட்டைக் கருவிகள், குளிராடைகள், வீடுகளின் அமைப்பு, மற்றும் உணவுப் பாத்திரங்கள், குலக் குறிகள், கைவினைப் பொருட்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில், கற்களைக் குவித்துவைத்து அதன் வழியே ஒரு செய்தியை சொல்லும் அடையாளக் குறிகளைக் கண்டேன்.

ஒரு கல் மீது இன்னொரு கல்லை நிற்கச் செய்து, தங்களின் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கற்கள்தான் அவர்களது தகவல் பலகைகள்.

துருவப் பகுதி மக்கள் கடல் சிங்கம் என்று அழைக்கப்படும் சீல்களை வேட்டையாடக் கூடியவர்கள். உண்மையில், ஒரு மிருகத்தை மனிதன் வேட்டையாடுவதில்லை. அந்த மிருகமே முன்வந்து, தன்னைப் பிடித்துக் கொள்ள அனுமதிக்கிறது என்று இனுயிட் நம்புகிறார்கள். ஆகவே, வேட்டையாடும்போது தான் கொன்ற மிருகத்திடம் மன்னிப்பு கேட்பவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இனுயிட்கள், சீல் மிருகத்தை வேட்டையாடி விட்டு, அதனுடைய குடலை கடலுக்குள் திரும்பப் போட்டுவிடு கிறார்கள். காரணம், அந்த சீல் மறுபடி பிறந்து, இவனிடமே வந்து சேருமென நம்பிக்கைதான்.

துருவப் பகுதியில் மனிதர்கள் வாழத் தொடங்கிய காலத் தில் ஒருவன் சீல் வேட்டைக்குச் சென்றான். கூட்டமாக சீல்களைக் கண்டதும் இவற்றை வேட்டையாடினால் குடும்பமே உட்கார்ந்து சாப்பிடலாமே என்று சந்தோஷ மாக ஈட்டியைக் குறிபார்த்தான். ஆனால், மனித அரவம் அறிந்த சீல்களின் கூட்டம் திடீரென நகரத் தொடங்கியது.

‘அய்யோ! கண்முன்னே நமது இரை தப்பிப் போகிறதே’ என்ற பதைபதைப்பில் அதைத் துரத்தினான். ஆனால், ஒன்றும் சிக்கவில்லை. கடைசியாக ஒரு சீல் மெதுவாகச் சென்றுகொண் டிருந்தது. அதை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என வேகமாகப் பாய்ந்தான். ஆனால், அந்த சீல் பனியை உடைத்துக் கொண்டு தாவி தண்ணீரீனுள் போய் மறைந்துவிட்டது.

ஏமாற்றம். உணவுக்கு என்ன செய்வது என்ற பரிதவிப்பு. கண்முன்னே கிடைத்ததை தவறவிட்டோமே என்ற ஆத்திரம். அத்தனையும் ஒன்றுசேர்ந்தது. திடீரென அவன் கண்களில் தண்ணீர் கசிந்து வரத் தொடங்கியது.

என்ன இது எனப் புரியாமல் அவன் கைகளால் கண்ணீ ரைத் துடைத்தான். ஆனால், கண்ணீர் வருவது நிற்கவில்லை. அதை ருசித்துப் பார்த்தபோது உப்பாக இருந்தது. இது போலவே தொண்டையில் வலி ஏற்பட்டு பேசவும் முடியவில்லை. இரவு வீடு திரும்பியதும் தனது ஏமாற்றத்தை எடுத்துச் சொல்லி கண்ணீர் வந்த விஷயத்தைத் தன் மனைவியிடம் சொன்னான். அப்படித்தான் மனிதனுக்கு கண்ணீர் உருவானது என்கிறார்கள் இனுயிட் மக்கள்.

எப்போது நம் கண்முன்னே நாம் விரும்பியது கிடைக்காமல் போகிறதோ, எப்போது பசியை தாங்க முடியவில்லையோ, எப்போது கனவு நிர்மூலமாகிப் போகிறதோ, எப்போது காத்திருப்பு அர்த்தமற்றுப் போகிறதோ, எப்போது விரும்பியவர்களுக்கு உணவிட முடியாமல் போகிறதோ, எப்போது நாம் நிர்க்கதி என உணர்கிறோமோ , என்றைக்கு ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் கண்ணில் இருந்து தானே கண்ணீர் வரும் என்று கடவுள் உணர்த்தியதன் அடையாளமே இந்தக் கதை என இனுயிட் மக்கள் நம்புகிறார்கள்.

துருவப் பிரதேசத்தின் இக்கதையை போல ஒவ்வொரு இனக் குழுவிலும் வேறு கதைகள் இருக்கவே செய்கின்றன. எவர் சொன்ன கதையாக இருந்தாலும் அதன் அடிப்படை உண்மை ஒன்று போலதான் இருக்கிறது.

இனுயிட் மக்களில் யாருக்காவது வேட்டையின்போது சீல் கிடைக்கவில்லையெனில், அவரும் அவரது குடும்பமும் பசியைப் போக்கிக்கொள்ள உதவ வேண்டியது அடுத்தவருடைய கடமை என்கிற மரபு இன்றைக்கும் இனுயிட் மக்களிடமிருந்து வருகிறது

இனுயிட் மக்களுக்கு ஆவியுலக நம்பிக்கை அதிகம். அதற்காக பூசாரிகளை நாடுகிறார்கள். அவர்கள் மேளம் அடித்து மயக்க நிலையில் ஆவிகளுடன் பேசி தங்கள் நலவாழ்வுக்கு வழிகாட்டுவார்கள் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

இனுயிட் மக்கள் தாங்கள் கொன்ற மிருகத்தை உடனேயே உண்ணுவதையே விரும்புகிறார்கள். அப்போது மட்டுமே, இறைச்சி மிக ருசியாக இருக்குமாம். இல்லாவிட்டால் உறைந்து போய் இறைச்சியின் சுவை மாறிவிடும் என்கிறார்கள்.

ஐரோப்பியர்கள் கனடாவுக்கு வந்து குடியேறி, புதிய அரசாங்கத்தை உருவாக்கிய போது இனுயிட் மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற முயற்சித்தார்கள். இதற்காக அவர்களுக்குத் தேவையான, பால் பவுடர் மற்றும் தானியங்களை அனுப்பி வைத்தார்கள். இனியூட்டுகளுக்கு பால் ஒத்துக் கொள்ளவில்லை. பாலையும் தானியங்களையும் சாப்பிடாமல் கடலில் எறிந்தார்கள்.

ஆற்றாமையில் வரும் கண்ணீரைப் பற்றி இனுயிட் ஒரு கதை கூறுகிறது. ஆனால், கண்ணீரைப் பகடிசெய்வது போல ‘ஆலீஸின் அற்புத உலகம்’ கதையில் ஆலீஸ் அழுதழுது அவளைச் சுற்றிப் பெரிய கண்ணீர் குளம் உருவாகிவிடுகிறது. அதில் வாத்துகள் நீந்த தொடங்குகின்றன.எலிகள் நீச்சல் அடிக்கின்றன. அவளே நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிடுகிறாள். கண்ணீர்க் குளத்தை பற்றிப் படிக்கும்போது வேடிக்கையாக இருக்கும்.

இன்றைய தொலைக்காட்சித் தொடர்களைக் காணும்போது நம் வீடுகளில் அப்படியொரு கண்ணீர்க் குளம் நிரம்புவதை கண்முன்னே காண முடிகிறது.

சிரிப்பையும் கண்ணீரையும் சமமாக பாவிக்கத் தெரிந்தவனே முழுமையான மனிதன். பிறர் கண்ணீரைத் துடைத்து சந்தோஷத்தை உருவாக்குபவன் மகத்தான மனிதன். கண்ணீர் சொல்லும் கதைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. அதற்கு இனுயிட்டின் கதையே சாட்சி!

- கதை பேசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x