Last Updated : 18 May, 2019 11:59 AM

 

Published : 18 May 2019 11:59 AM
Last Updated : 18 May 2019 11:59 AM

சிகிச்சை டைரி 05: ஊமத்தை இலையும் அத்தையும்

அத்தை இறந்துவிட, குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வதற்காக, அவரது உறவுக்காரப் பெண்ணையே இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் மாமா. மாமியார் இல்லை என்பதாலும் வசதியான இடம் என்பதாலும் வசீகரமான அத்தை, மாமாவைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிட்டார். எப்போதாவது கோபம் வருமே தவிர, பொதுவாக மாமா நல்லவர், இளகிய மனம் படைத்தவர் என்பது அந்த ஊருக்கே தெரியும்.

அத்தைக்கும் மாமாவுக்கும் ஆரம்பத்தில் அடிக்கடி முட்டிக்கொண்டது. மாமாவை வழிக்குக் கொண்டுவருவதற்காகக் கோபித்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிடுவார். அத்தையின் அம்மா வீட்டில் இதற்கு வரவேற்பு இல்லாததால், வேறு திட்டத்தை யோசித்தார். கொல்லையில் ஊமத்தைச் செடிகள் மானாவாரியாக வளர்ந்திருந்தன. ஊமத்தை இலைகளை அரைத்துக் குடிக்கப் போவதாக மிரட்ட ஆரம்பித்தார்.

சில நேரம் அத்தை சொல்வதைச் செய்து கொடுத்துவிடுவார் மாமா. சில நேரம் செய்து கொடுக்க முடியாத சூழல் உருவாகும். உடனே தோழிகள் சூழ, பேசிக்கொண்டே ஊமத்தை இலைகளை அரைக்க ஆரம்பித்துவிடுவார். அதற்குள் யாராவது மாமாவுக்குத் தகவல் கொடுக்க ஓடுவார்கள்.

மாமா வாசலுக்கு வந்துவிட்டார் என்பதை உறுதி செய்துகொண்டு, ஊமத்தைச் சாற்றைக் குடிக்க முயல்வார். தோழிகள் கதறி, டம்ளரைத் தட்டிவிட முயல்வார்கள். உடனே மாமா மன்னிப்புக் கேட்டு, அவர் கேட்டதைச் செய்து கொடுப்பதாகச் சொல்லிவிடுவார். சட்டென்று காட்சி மாறிவிடும்.

ஒருநாள் இப்படி ஊமத்தை இலையை அரைத்துக் குடிக்கும் நாடகம் அரங்கேறியபோது, யாரோ தட்டிவிட்டதில் வாய்க்குள் கொஞ்சம் சாறு சென்றுவிட்டது. தோழிகளுக்குப் பயம் வந்துவிட்டது. மாமாவிடம் தகவல் சொல்ல ஒருவர் சைக்கிளில் சென்றார். ரிக்‌ஷாவுடன் மாமா ஓடிவந்தார். மருத்துவமனையில் சேர்த்து, சாறு முழுவதையும் வெளியே எடுத்துவிட்டு, அழைத்து வந்தார்.

சிறிய ஊர் என்பதால் எல்லோருக்கும் மாமாவின் குடும்பத்தைத் தெரிந்திருந்தது. மாமாவும் அத்தையும் வீட்டுக்கு வருவதற்குள் ஊரே ‘பெயின்ட் கடைக்காரர் மருமகள் மருந்து குடிச்சிருச்சாம்’ என்று பேசிக்கொண்டார்கள். மாமாவிடமும் தாத்தாவிடமும் விசாரித்தார்கள். இருவரும் வேதனையில் துடித்தார்கள். அடுத்த ஒரு வாரத்துக்கு உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். இனி கோபப்படவே கூடாது என்று மாமா முடிவு செய்துவிட்டார்.

6 மாதம் அமைதியாகச் சென்றது. மீண்டும் ஏதோ ஒரு விஷயத்தில் இருவருக்கும் சண்டை. தோழிகள் சூழ மீண்டும் ஊமத்தை இலையை அரைக்க ஆரம்பித்தார் அத்தை.  வழக்கம்போல் கடைக்கு ஆள் பறந்தது. ரிக்‌ஷாவுடன் பதறி ஓடிவந்தார் மாமா. அவருடைய தோழிகள் எவ்வளவோ தடுத்தும் பாதி டம்ளருக்கு மேல் சாறு உள்ளே சென்றுவிட்டது. மருத்துவமனைக்குப் போகும் வழியில் சுயநினைவை இழந்தார் அத்தை. மாமாவின் பதற்றம் அதிகரித்துவிட்டது.

குடும்ப மருத்துவர் என்பதால், மாமாவுக்கு ஆறுதல் சொன்னார். இந்த முறை டியூப் போட்டு மணிக்கணக்கில் எல்லாவற்றையும் வெளியில் எடுக்க வேண்டியிருந்தது. ஓர் இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்தார் அத்தை. மறுநாள் காலை இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

மருத்துவர் வந்தார். அத்தையைப் பரிசோதித்தார். “என்ன இப்படி இருக்கீங்க? எதுக்கெடுத்தாலும் மருந்து குடிச்சிடறதா? சரி, அடுத்த தடவை மருந்து குடிக்கும்போது பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பத்துப் பேரை வச்சிட்டு மருந்து குடிச்சா, இப்படி நீங்கதான் கஷ்டப்படணும்” என்றாரே பார்க்கலாம்! விக்கித்து நின்றுவிட்டார் அத்தை. அதற்குப் பிறகு இந்த 30 ஆண்டுகளில் ஊமத்தை இலைகளை அவர் தொடவேயில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x