Last Updated : 11 May, 2019 12:10 PM

 

Published : 11 May 2019 12:10 PM
Last Updated : 11 May 2019 12:10 PM

காயமே இது மெய்யடா 32: கோடைக்காலக் காற்றே

கோடைக்காலம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. வெப்ப மண்டல வாசிகளாகிய நமக்கு இப்புறச் சூழல் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்றாலும், வெப்பம் உச்சத்துக்குச் செல்கிறபோது பல்வேறு விதமான பாதக விளைவுகளும் நமக்கு ஏற்படும் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துகொண்டால் அக்னி நட்சத்திரத் தில் மீதமிருக்கும் நாட்களைச் சலிப்பும் எரிச்சலும் இல்லாமல் கடந்து விடலாம். கோடையால் ஏற்படும் உடல் உபாதைகளையும் பேரளவு தவிர்த்து விடலாம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் அம்சம் பிறந்த குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை இக்கோடையின் வெப்பத் தாக்கத்தை வெகு இயல்பாகக் கடந்து சென்று விட முடியாது. அதிலும் குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள். ஏற்கெனவே பலவீனமாக உள்ளவர்களுக்கு உடல் நலம் தொடர்பான தொல்லைகள் அதிகரிக்கும்.

வருவதை ஏற்போம்

கோடை வெப்பத்துக்கு எதிராக நமக்குள் தோன்றும் எதிர் மனோபாவத்தையும் “சே வெயில் இந்த வருசம் ரொம்ப அதிகம் இல்லே. என்னா வெயிலு இது. என்னய்யா இப்படி வறுத்தெடுக்கிறது. கோடையின்னு வந்துட்டாலே மனுசன் செத்துப் பிழைக்கிற மாதிரி ஆயிருது” போன்ற சொற்களை உதிர்ப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். எந்த ஒன்றையும் ஏற்கும் மனோநிலை நமக்குள் உருவானால், அதற்கேற்ப சுரப்பிகள் உடலில் சுரந்து அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும்.

மாறாக, எதிர் மனநிலை தோன்றினால் உடலின் சுரப்புகள் சுரக்காது. இதனால், சூழலுக்குள் நம்மைப் பொருத்துவதும் கடினம் ஆகும். எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்தினால் அது எந்த நல்ல தாக்கத்தையும் அளிக்காது. மாறாக, நாமும் எரிச்சலுற்று அக்கம் பக்கத்தில் உள்ளோரையும் அந்த மனநிலைக்குக் கொண்டு வந்து சூழலில் இறுக்கத்தை மேலும் அதிகரிக்கும். அதைத் தவிர வேறு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

உடலின் தற்காப்பே வியர்வை

புற வெப்பம், உடலினுள் செல்லாமல் தோலுக்கு அப்பால் நிறுத்தி வைக்கவே நமக்கு வியர்க்கிறது. எனவே, வியர்வை என்பது உடலின் ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இந்தக் கோடைக்கு முன்னரே உடலில் கழிவுத் தேக்கம் அதிகமாக இல்லை என்றால் நமக்குச் சுரக்கும் வியர்வையின் அடர்த்தி குறைவாக நீர்த்த தன்மையில் இருக்கும். அதாவது பிசுபிசுப்பாக இராது.

உடலில் நீர்வடிவிலான கழிவுத் தேக்கம் அதிகமாக இருந்தால் எண்ணெய்ப் பசையுடனும், கெட்ட நாற்றத்துடனும் கூடிய வியர்வையே சுரக்கும். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அம்சம் எத்தன்மை உடலுக்குள் இருந்து வெளி வருகிறதோ அத்தன்மை உள்ளவற்றை மேலும் செலுத்தாமல் இருந்தால் தான் அது தொடர்பான அசௌகரியத்தைத் தவிர்க்க முடியும். எனவே, உணவில் தவிர்க்க வேண்டியவை குறித்து அப்புறம் பார்க்கலாம்.

சோப்பு வேண்டாமே

முதலில், உடலிலிருந்து வெளிச் செல்லும் (வியர்வை வடிவிலான) கழிவு வெளியேற ஒத்துழைக்க வேண்டும். அதுவே சூழலின் தாக்குதலைத் தணிக்க உதவும். முதலில் வியர்வைத் துளைகள் முழுமையாகத் திறந்திருக்க வகை செய்ய வேண்டும்.

குளித்து முடித்தவுடன் வறண்ட சருமத்துக்கு எண்ணெய் பூசுவது, முகத்துக்கு மெருகேற்ற பவுடர் பூசுவது, வியர்வை நாற்றத்தைத் தணிக்கிறேன் பேர்வழி என்று வாசனைத் திரவியங்களை நேரடியாக உடல் மீது பரவச் செய்வது ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

குளிக்கும் போது சோப்புப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சோப்பில் நிறைந்திருக்கும் ரசாயனக் காரம் உள்ளே புகுந்துவிடக் கூடாது என்பதற்காக மேற்தோலும் வியர்வைத் துளைகளும் தம்மைச் சுருக்கிக் கொள்ளும். அதனால் தான் பலருக்கும் சோப்புப் போட்டுக் குளித்து முடித்தவுடன் தோல் வறண்டு காணப்படுகிறது.

ஆகவே, வியர்வைத் துளைகள் முழுமையாகத் திறந்திருக்க சோப்பும் குளியல் பொடிகளும் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் தவிர்க்க இயலாத சூழலில் வாரத்தில் ஓரிரு நாட்கள் அதுவும் படுக்கச் செல்லும் முன் சோப்புப் போட்டுக் குளித்துக்கொள்ளலாம்.

நிதானமாகக் குளிப்போம்

குளிக்கச் சோப்புப் பயன்படுத்தவில்லை என்றாலே நீர்ச் செலவினம் குறையும். அந்த நீரையும் சிறு குவளையில் மொண்டு நிதானமாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும்.

ஒவ்வொரு சிரங்கை நீரும் நமது உடலின் பாகங்களை, பிடரி, கழுத்து, முதுகுத் தண்டு, ஆசனவாய், தொடை, தொடையின் உள் வெளிப்பகுதிகள், முழங்கால், கணுக்கால், பாதம், விரல்கள் என ஒவ்வொரு பாகமாகக் கடந்து செல்வதைக் கவனிக்க வேண்டும்.

இப்படிக் குளிக்கக் கற்றுக் கொண்டால் உடலில் வெப்பம் ஏற ஏற எத்தனை முறை குளித்தாலும் வழக்கமான குளியலுக்கு ஆகும் செலவைக் காட்டிலும் குறைவான நீரே செலவாகும்.

ஒருமுறை மட்டும் நீர் ஊற்றிக் குளித்து விட்டு வாய்ப்புள்ள நேரங்களில் எல்லாம் ஒரு சிறிய வாளி நீரில் பருத்தித் துணியை நனைத்து, நீர் வடியாமல் மெலிதாகப் பிழிந்து உச்சந்தலையிலிருந்து பாதம் வரைக்கும் துணியால் துடைத்து எடுக்கலாம். இவ்வாறு துடைத்தெடுக்கும் நீரில் உடலின்வெப்பத்துக்குச் சற்றே குறைவான குளிர்ந்த நீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தெய்வீகக் குளியல்

குளிக்கும் நீரில் பத்து வேப்ப இலைகளை அல்லது பழத் தோல்களை ஊற விட்டும் குளிக்கலாம். (குளியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன என்றாலும் ஒரு நினைவூட்டல்). எந்தக் குளியலுக்குப் பின்னரும் மேலுள்ள ஈரப் பதத்தை ஒற்றியோ துடைத்தோ எடுக்க வேண்டியதில்லை.

சுமார் பத்து நிமிட நேரம் ஈரத் துவாலையுடன் செய்யத் தகுந்தவற்றைச் செய்து கொண்டிருந்தால் தோலில் ஈரப்பதம் தங்கும். இந்தக் குளியல் முறையை ஒரு தெய்வீகச் சடங்கு போல நிதானமாகப் பின்பற்றினாலே, கோடையின் வெப்பம் நம்மைத் தாக்குவதிலிருந்து பாதியைக் கடந்துவிடுவோம்.

அடுத்த இதழில் கோடைக்கு ஏற்ற உணவு குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர்,

உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x