Published : 16 Mar 2019 10:40 AM
Last Updated : 16 Mar 2019 10:40 AM

அரவணைப்பே முக்கியம்

டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்

பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை நம் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இளம்பெண்களிடம் காதல் நாடகமாடி, தனியே அழைத்துச் சென்று அத்துமீறி, வீடியோ எடுத்து மிரட்டி, மனத்தின் வலிமையை அந்தக் காமுகர்கள் பறித்துள்ளனர். புலனாய்வு ஒரு பக்கம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரிதவித்து நிற்கிறார்கள். தமிழக மக்களும் இதற்குச் சரியான சமூகத் தீர்வு எட்டப்பட வேண்டுமெனப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க… இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கி, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மன அழுத்தம், தாங்க முடியாத மன உளைச்சல், சிந்தனைச் சீர்குலைவு ஆகியவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. சில நேரம் தற்கொலை செய்துகொள்ளவும் முற்படுவார்கள் அல்லது அது குறித்து முடிவெடுப்பார்கள். மனதளவில் பாதிக்கப்பட்டு, உண்மையைச் சொல்ல முடியாமல், மரண அவஸ்தையை அனுபவித்துவரும் இந்த இளம் பெண்களின் மனத்தை முதலில் ஆற்றுப்படுத்த வேண்டும். இதற்குச் சிறந்த மனநல மருத்துவரை நாடி ஆலோசனை பெறுவது அவசியம்.

மருத்துவரிடம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தயக்கமும் பயமும் இல்லாமல் தெரிவிக்க வேண்டும். இது, இவர்களது பிரச்சினையை மட்டுமல்ல; ஒட்டுமொத்தப்  பிரச்சினையையும்  தீர்க்கப் பெரிதும் கைகொடுக்கும். அது  மட்டுமல்லாமல் இது போலப் பாதிக்கப்படச் சாத்தியமுள்ள மற்ற இளம்பெண்களுக்கும் வருங்காலத்தில் உதவும், வழிகாட்டியாக அமையும்.

உடல் பாதிப்புகள்

உடல் பாதிப்புகளை அறிந்து அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிர் மருத்துவரின் ஆலோசனையும் அவசியம். அடித்துத் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு டெட்டனஸ் தடுப்பூசி  (TT-Tetanus Toxoid) செலுத்தப்பட வேண்டும்.

ஆஸ்துமா, வலிப்பு போன்ற நோய்கள் இருந்தாலும் அதற்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். மேலும் ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் தேவைப்பட்டால் செய்து உடலைப் பாதுகாக்க வேண்டும்.

தொற்று நோய் ஆபத்துகள்

1) மஞ்சள் காமாலைத் தொற்று

ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இது தேவை இல்லை. அப்படிப் போட்டுக்கொள்ளாவிட்டால், மஞ்சள் காமாலை பி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு மாதம் கழித்தும், 6 மாதம் கழித்தும் இதே தடுப்பூசியை மேம்படுத்துதல் ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.

2) மனித பாபிலோமா நோய்

மனித பாபிலோமா நோய்க்குத் தடுப்பூசி இதுவரை போடாவிட்டால், உடனடியாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுடன், 1-2 மாதத்தில் இரண்டாவது தடுப்பூசியையும், 6-வது மாதத்தில் மூன்றாவது தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

3) பிற கிருமிகளின் தாக்கம்:

மேலும் தாக்கச் சாத்தியமுள்ள பல்வேறு கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கப் பல்வேறு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைக் கூட்டு மருந்துகளாக (மெட்ரோனிடசோல் + அசித்ரோமைசின் + செஃப்டிரியாக்சோன்) கொடுக்க வேண்டும்.

அரவணைப்போம்

இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மனத் திடம் பெறும்வரை வீட்டினரும் நண்பர்களும் இவர்களைப் பத்திரமாகப் பாதுகாத்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். முக்கியமாகப் பெற்றோரும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் சாயும் தோள்களாகவும் தாங்கிப்பிடிக்கும் கரங்களாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைத் தமது மதிப்பீட்டுக் கண்கள் வழியே பார்த்து, குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல், சமூகம் அவர்களைப் பக்குவமாக அரவணைக்க வேண்டும்.அவர்களுக்குத் தைரியம் சொல்லி, மனத்தில் தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் விதைப்பதன்மூலம், விரைவில் இயல்புநிலைக்கு மீண்டுவரச் செய்ய முடியும். தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் ஒருபுறம் கவலை அளித்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையுடன் கையாண்டால் இதன்மூலம் நிகழும் சமூக அழிவை இனிமேலாவது தடுக்கலாம்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர் தொடர்புக்கு:  muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x