Last Updated : 16 Mar, 2019 10:40 AM

 

Published : 16 Mar 2019 10:40 AM
Last Updated : 16 Mar 2019 10:40 AM

மன அழுத்தமும் பார்வையைப் பாதிக்கும்

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ராஜேந்திரனுக்கு, 24 மணிநேரம் போதாது. வேலை அப்படி. திறமை காரணமாக இளம் வயதிலேயே நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு அவருக்கு. வேலைப் பளு அதிகம் என்பதால் மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகம். கொஞ்ச நாட்களாக கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்கவே முடியவில்லை. கண்ணில் கடுமையான கூச்சம். கம்ப்யூட்டர் பக்கமே போக முடியாத அளவுக்குக் கண்ணில் சொல்ல முடியாத தொல்லைகள். கண் மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு, அவருடைய கண்களில் கண் நீர் அழுத்தம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் ராஜேந்திரன் குடும்பத்தில் யாருக்கும் கண் நீர் அழுத்தப் பிரச்சினை இல்லை. இந்த இளம்வயதில் அவருக்குக் கண் நீர் அழுத்தம் உயர்ந்ததற்கு, அவருடைய மன அழுத்தம்தான் காரணம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

கண் நீர் அழுத்தம்

உடலின் ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு அழுத்தத்தைவிட அதிகரித்தால், அதை ‘உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இதைப் போலவே கண்ணிலும் ஓர் அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக 10-லிருந்து 20 மி.மீ. பாதரச அழுத்தத்துக்குள் அது இருக்க வேண்டும். இதைவிட அழுத்தம் உயர்ந்தால் அதுதான் ‘கண் நீர் அழுத்த உயர்வு’ (கிளாகோமா). முன்கண்ரசம் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்சினை காரணமாகவோ அதன் இயல்பான சுழற்சிப் பாதையில் ஏற்படும் தடை காரணமாகவோ கண் நீர் அழுத்தம் ஏற்படும். கண் நீர் அழுத்த உயர்வு பொதுவாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படும். தீவிர மன அழுத்தம் காரணமாக இளவயதிலேயே இந்தப் பிரச்சினை ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான மன அழுத்தம், நம் உடலில் ‘கார்டிசால்’ என்ற ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதனால் மூளையும் கண்களும் பாதிக்கப்பட்டு இறுதியில் கண் நீர் அழுத்தம் உயர்ந்து, பார்வை பாதிப்பு ஏற்படும். வீட்டிலும் ஆபீஸிலும் ஒரே ஸ்ட்ரெஸ். என்று சொல்பவர்கள் அதிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மன அழுத்தத்தால் பிரச்சினை

சுந்தருக்கு ஏற்பட்ட பிரச்சினை சற்று மாறுபட்டது. வயது என்னமோ இருபதுக்குள்தான். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் திறமைசாலி. திருமண அழைப்பிதழ், திருமண போட்டோக்களைக் கலக்கலாக வடிவமைப்பதில் பெரிய ஆள் என்பதால் எப்போதும் பிஸிதான். ஆட்கள் எப்போதும் தேடி வந்த வண்ணம் இருப்பார்கள். தொழிலில் அவ்வளவு நேர்த்தி. விரைவாக வேலையை முடித்துத் தரவேண்டுமே என்று இரவு பகலாக, தூக்கம் பாராமல் வேலை செய்ததால் திடீரெனக் கண் சிவப்பாக மாறியது; தாங்க முடியாத வலியும் ஏற்பட்டது. பார்வையிலும் ஒரு மாதிரியான அசௌகரியம். பார்க்கும் உருவங்கள் முழுவதுமாகத் தெரியாமல், உருவத்தின் மையப் பகுதி தெளிவில்லாமல் இருந்தது. இந்தப் பிரச்சினை பயத்தை ஏற்படுத்தியதால் மருத்துவரைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர் பார்த்துவிட்டு, மன அழுத்தத்தால் உங்களுக்கு மைய விழித்திரை நிணநீர் பாதிப்பு (Central Serous Retinopathy ) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மைய விழித்திரை நிணநீர் பாதிப்பு

விழித்திரையின் அடியில் நிணநீர் கசிந்து சேர்ந்து கொள்வதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கான பொதுவான காரணம் எதுவுமில்லை என்றாலும் மன அழுத்தமே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் தேவையில்லாத பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும். ஆனால் பிரச்சினையே, இது எந்த விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதுதான். அதனால் கண்ணில் ஏற்படும் எந்த வித அசௌகரியங்களையும் அலட்சியப்படுத்தாமல் உடனே கவனம் செலுத்தி மருத்துவரிடம் செல்வது நல்லது. ஆரம்ப நிலையில் கவனம் செலுத்தாவிட்டால் விழித்திரை பிரிதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுப் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிடும்.

பொதுவாக, இந்த மைய விழித்திரை நிணநீர் பாதிப்பு தானாகவே சரியாகிவிடும். எந்த வித சிகிச்சையும் தேவை இல்லை. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினாலே போதும். சில நேரத்தில் சொட்டு மருந்து போட வேண்டி இருக்கும். பிரச்சினையின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கண்ணில் ஊசியோ லேசர் சிகிச்சையோ தேவைப்படும். வேறு ஏதாவது உடல்நலப் பிரச்சினைக்கு நீண்ட நாட்களாக ‘ஸ்டீராய்டு’ வகை மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட சாத்தியம் இருப்பதால் அவர்களும் கண் மருத்துவரின் தொடர் ஆலோசனை பெறுவது நல்லது.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்

எப்போதும் வேலையே கதி என்று இருப்பவர்கள், சாப்பிடக்கூட நேரமில்லாமல் வேலை வேலை என்று இருப்பவர்கள், காலையில் சென்றால் இரவில் வீடு திரும்புபவர்கள், 24 மணி நேரமும் கம்ப்யூட்டரில் மூழ்கி இருப்பவர்கள், இலக்கை அடிப்படையாகக் கொண்டு வேலைசெய்யும் விற்பனைப் பிரதிநிதி போன்றவர்கள், நிர்வாகத்தில் மிக முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோர் அதிக மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாக வாய்ப்புண்டு. எனவே, அவர்கள் சற்றுக் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

நாள்தோறும் காலையில் நடைப்பயிற்சி செய்வது நல்லது. தியானமும் யோகாவும் நல்ல பலன்களைத் தரும். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து வெகுவாக வெளிவர இவை உதவும். இரவு கண்டிப்பாக நன்றாகத் தூங்க வேண்டும். ஏற்கெனவே பார்வை பாதிப்புக்கு உள்ளானவர்கள் இவற்றைத் தொடர்ந்து செய்துவர பார்வை ஓரளவு மீட்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதே போல, மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இவற்றைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் இது போன்ற பார்வை பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

கட்டுரையாளர், மதுரை அரசு
கண் மருத்துவ உதவியாளர் தொடர்புக்கு: veera.opt@gmail.com

கண் நீர் அழுத்தம்: முன்னெச்சரிக்கைகள்

* அடிக்கடி தலைவலி, குண்டு பல்பைச் சுற்றி வண்ண வண்ண வட்டங்கள், பக்கப் பார்வையில் பிரச்சினை போன்றவை இருந்தால், உடனே கண் மருத்துவரிடம் கண் நீர் அழுத்த உயர்வைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

* பொதுவாக 40 வயதை நெருங்கும்போதுதான் கண் நீர் அழுத்த உயர்வு பெரும்பாலும் ஏற்படும் என்பதால், அந்த வயதில் அனைவரும் கண்களைக் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* ரத்த உறவில் யாருக்காவது கண் நீர் அழுத்த உயர்வு ஏற்கெனவே இருந்தால், அத்தகையவர்கள் 40 வயதுக்கு முன்னரே கண் நீர் அழுத்தத் தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

* மன அழுத்தத்தைக் (Stress) கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.

* தொடர் சிகிச்சையுடன் கண் காணிப்பும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x