Published : 23 Feb 2019 11:16 AM
Last Updated : 23 Feb 2019 11:16 AM

மூலிகையே மருந்து 46: உடம்பை இரும்பாக்கும் கரிசாலை

‘இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ…’ எனும் பாடல் வரிகள் கற்பனையாக இருக்கலாம். ஆனால், ‘ஒரு மூலிகையில் இரும்பு விளையும்’ என்று சொல்லுமளவுக்கு இரும்புச் சத்தை வாரி வழங்கும் ‘மூலிகை இயந்திரம்’ கரிசாலை! முதுமைக்கான அறிகுறிகளை எட்டிப்பார்க்க விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வலிமையான மூலிகை இது.

வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் நிறைவாய்த் தென்படும் இந்தக் கற்ப மூலிகையைப் பற்றிய வள்ளலாரின் பதிவுகள் அதிகம். கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!

பெயர்க்காரணம்: கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உடையது. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர்.

அடையாளம்: படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும். ‘அஸ்டரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேடா’ (Eclipta prostrata). ‘விடிலோலேக்டோன்’ (Wedelolactone), ‘பீட்டா அமைரின்’ (Beta-amyrin), ‘லுடியோலின்’ (Luteolin) போன்ற முக்கியத் தாவர வேதிப்பொருட்கள் இதிலுள்ளன.

உணவாக: கோடைக்கால மதிய வேளைகளில், நீர்மோரோடு கரிசாலை இலைச் சாற்றைச் சிறிதளவு கலந்து பருக, உடல் குளிர்ச்சியடைவதோடு, வெப்பச் சோர்வைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து சமைத்த ‘கரிசாலை-பருப்புக் கடையலை’ அவ்வப்போது சுவைத்துவர, உடல் தளர்வடையாமல் தேவைக்கேற்ப உழைப்பதோடு கண்பார்வையும் கூர்மையடையும்.

பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. இதன் சாற்றுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து விழுங்க, தொண்டைவலி குணமாகும்; குடற் கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்சினைகளுக்கான உணவாகக் கரிசாலையைப் பயன்படுத்தலாம். கரிசாலையின் பலன்களைப் பெற, இதன் சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, லேகிய பதத்தில் செய்து சுவையாகவும் சாப்பிடலாம். கொடம்புளியும் கரிசாலையையும் சம அளவு எடுத்து புன்னைக் காயளவு சாப்பிட்டுவர, மூல நோயின் தாக்கம் குறையும்.

மருந்தாக: கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளித்து, ‘கல்லீரல் பாதுகாவலனாக’ செயல்படும் முக்கிய மூலிகை கரிசாலை என்று ஆய்வுகள் பதிவிடுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை முடுக்கிவிடும் ஆற்றல் (Immuno-stimulatory) படைத்தது கரிசாலை. புற்று செல்களுக்கு எதிரியாகச் செயல்படும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தும் ஆதாரமாகக் கரிசாலை செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை உடையதால், கரிசாலையை வைத்து பல்வேறு கற்ப மருந்துகள் வழக்கத்தில் உள்ளன. ‘பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை…’ எனும் அகத்தியர் பாடலின் மூலம், மஞ்சள் கரிசாலை யின் மேன்மையை அறியலாம்.

வீட்டு மருந்தாக: குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு, இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தேன் சேர்த்துக் குழப்பி நாவில் தடவ, இயற்கையாய் இருமல் தணியும். இலைச் சாறு, நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தே, அக்கால கிராமங்களில் இருமலுக் கான டானிக்! கரிசாலையை சூரணம் செய்து, இளநீரில் ஒரு மாதமும் தேனில் ஒரு மாதமும் உட்கொள்ள நரைதிரை மாறும் என்கிறது ‘தேரன் யமக வெண்பா’. இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வாய் கொப்பளிக்க, பல் ஈறு பலமடையும்.

‘அயச் செந்தூரம்’ எனும் சித்த மருந்தைக் கரிசலாங்கண்ணி சாற்றின் அனுபானத்தில் கொடுக்க, ரத்தக் குறைவு, உடல் வீக்கம் குணமாகும். ‘அயபிருங்கராஜ கற்பம்’ எனும் சித்த மருந்து, ரத்த சோகையில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. கரிசாலை, மிளகின் உதவியுடன் உருவாக்கப்படும் மாத்திரைகள், காமாலை, உடல் வீக்கத்துக்கான பாரம்பரிய மருந்து.

கரிசாலை சூரணத்தோடு திப்பிலி சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுக்க, சளி, இருமல் அமைதியடையும். கரிசாலை கற்ப மாத்திரை, கையான் எண்ணெய் என சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகளில் பயன்படும் கரிசாலை, சில வகையான காமாலைக்கான அற்புத மருந்து.

ஆமணக்கெண்ணெய், கரிசாலைச் சாறு, சிறிது பூண்டு சேர்த்து பதமாய்க் காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து, பித்த நோய்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கரிசாலைச் சாறு, நெல்லிக்காய்ச் சாற்றின் உதவியுடன், நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய்யை அவ்வப்போது பயன்படுத்த, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.

கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யும்கூட! உள்ளுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசாலை மடக்குத் தைலம்’, தோல் முதல் உள்ளுறுப்புகள்வரை வலுவைக் கொடுக்கக்கூடியது. கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்த, கூந்தல் ஆரோக்கியத்துக்கு நீண்ட நாள் உத்தரவாதம் கிடைக்கும்.

கரிசாலை, அம்மான்பச்சரிசி, தும்பை, மிளகு, ஆகியவற்றை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க, சிறுநீர் எரிச்சல் குறைந்து, உடல் வீக்கம் வற்றும்.

கரிசாலை… உடல் நலமோடு பயணிக்க தேவையான இரும்புச்சாலை..!

- கட்டுரையாளர்,
அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x